1978 நவம்பர் 23ம் திகதி. ஒரு பெருங்காற்று கிழக்கு மண்ணை துகிலுரித்த நாள்.
குறிப்பாக மட்டக்களப்பு மண்ணை ‘சூறாவளி’ என்ற அரக்கன் அரைகுறையாக அழித்த சம்பவம் இன்றைக்கும் பலரால் நினைவுகூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
நவம்பர் 23ம் திகதி இரவு முழுவதும் வீசிய அந்த கொடூரமான புயல்காற்றில் அகப்பட்டு சுமார் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமாக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 20சதவீதமான மீன்பிடிப் படகுகள் அழிக்கப்பட்டன. சுமார் 28 ஆயிரம் தென்னஞ்செய்கையில் 90 வீதமானவை முற்றாகவே அழிவடைந்தன. 240 பாடசாலைகள், 90 நெற்களஞ்சியங்கள் சேதமடைந்ததுடன், 130 மைல் தூரத்திற்கான முpன்சார கம்பிகள் பிடுங்கி அறியப்பட்டன. அந்தக்காலப் பெறுமதியின்படி சுமார் 600 மில்லியன் ருபா பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
மட்டக்களப்பு புகையிரத நிலையம்
இந்த விடயங்கள் ஒருபுறம் இருக்க, இந்த அனர்த்த காலத்தில் இடம்பெற்ற அருவருக்கத்தக்க அரசியல் பற்றிய சில நினைவுகளை மீட்டுப்பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
•சூறாவளியில் அதிகம் பாதிக்கப்பட்டது மட்டக்களப்பு மாவட்டம்தான். ஆனால் மட்டக்களப்பிற்கு என்று கொண்டுவரப்பட்ட நிவாரணப்பொருட்கள் முதலில் அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்குத்தான் அனுப்பப்பட்டன.
•அம்பாறை மாவட்டத்தில் அதிகம் பாதிப்புக்குளான கல்முனைப் பிரதேசத்திற்கு போதிய நிவாரணங்கள் வந்துசேரவில்லை. சிங்கள முஸ்லிம் பகுதிகளுக்கே நிவாரணங்கள் சென்றுகொண்டிருந்தன. அரும்பாடுபட்டு தமிழ் பிரதேசங்களுக்கு நிவாரணங்களை கொண்டுவந்து சேர்த்த பெருமை கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் மன்சூரையே சாரும்.
மட்டக்களப்பு பழைய பஸ் தரிப்பிடம்
•அதேபோன்று மட்டக்களப்புக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்துகொண்டிருந்த லொறிகள் பொலநறுவை மற்றும் அம்பாறையில் இடைமறிக்கப்பட்டு, சிங்களக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தபோது, களத்தில் இறங்கி நிவாரணப்பொருட்களை மட்டக்களப்பை நோக்கிக் கொண்டுவந்து சேர்த்த பெருமை அமைச்சர்களான கே.டபிள்யூ தேவநாயகம் மற்றும் கனகரட்ணம் போன்றவர்களையே சேரும்.
•மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைக் கண்டு கலங்கிய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலைக் கடந்து ஒன்றுபட்டு நின்ற முதலாவது சந்தர்ப்பம் அந்த நேரத்தில் கனிந்திருந்தது. அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கான தேவநாயகம், கனகரட்டணம் போன்றவர்களுடன், த.வி.கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்லையா ராசதுரை, கணேசலிங்கம் போன்றவர்கள் தமக்கிடையேயான கருத்துவேறுபாடுகளைக் கடந்து ‘மாவட்டம்’, ‘மக்கள்’ என்கின்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தார்கள்.
•மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயலாற்றிய அதேநேரம், வடக்கில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்து தங்கி நிவாரணப்பணியில் மற்றய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடுவதை அவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த த.வி.கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதை தேவநாயகம் போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அமிர்தலிங்கம் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதைவிட அங்கு அவர் அரசியல் செய்வதாகவே அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
•’மட்டக்களப்பு மக்களின் கண்ணீரில் அரசியல் செய்யவேண்டாம்..’ என்று அமிர்தலிங்கத்திடம் தேவநாயகம் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தார்.
•’வடபகுதியில் இருந்து மட்டக்களப்புக்குக் கொண்டுவரப்படும் நிவாரங்களை வினியோகிகும் பொழுது ஒரு சாரார் அரசியல் பிரசாரம் செய்துவருவதாகவும், குறிப்பாக காசிஆணந்தன் பெயராலேயே பொருட்கள் வினியோகிக்கப்படுவதாக’ மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரை அரசாங்க அதிபர் டிக்சன் நிலவீரவிடமும், அமைச்சர்களிடமும் முறைப்பாடு தெரிவித்திருந்தார்.
•அந்தக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கும், அமைச்சர் தேவநாயகத்திற்கும் இடையில் மட்டக்களப்பு விமான நிலையத்தில் வைத்து நடைபெற்ற வாக்குவாதம் மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் பிரபல்யமாகியிருந்தது.
‘நீங்கள் அரசியல் அரசியல் காரணங்களுக்காக இங்கு வந்திருக்கின்றீர்கள். நிவாரண வேலைகள் உங்கள் நோக்கமல்ல..’ என்றார் தேவநாயகம்.
‘நீங்கள் நிவாரணவேலைகளில் அக்கறை காட்டவில்லை. ஜனாதிபதியை அழைத்து கார்ணிவல் காட்டுகிறீர்கள்..’ என்றார் அமிர்தலிங்கம்.
அதேவேளை, அமைச்சர் தேவநாயகத்திற்கு அருகில் நின்ற அவரது மனைவி, ‘இங்கு யாழ்ப்பாணத்து ஆட்கள் தேவையில்லை. நம்மை நாமே பார்த்துக்கொள்வோம்..’ என்று என்றார் அதிரடியாக.
‘அப்படியானால், மடம் நீங்கள்தான் உடனடியாக யாழ்பாணம் செல்லவேண்டும்..”என்றார் அமிர்தலிங்கம். ஏனென்றால் அந்த நேரத்தில் பிரதேசவாம் பேசிய திருமதி தேவநாயகம் அடிப்படையில் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்.
•மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியால் பாதிக்கப்பட்டு, மட்டக்களப்புக்கான நிவாரணங்கள் சிங்கள கிராமங்களுக்கு திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், இயந்திர வள்ளங்கள் மூலம் நிவாரணப்பொருட்களை முதன்முதலில் கொண்டுவந்தவர்கள் யாழ்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த மக்களே.
திருகோணமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், வவுனியா தெகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரம், எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் தலைமையில் ஏராளம் இளைஞர்கள் மட்டக்களப்பு மண்ணில் நின்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். குறிப்பாக போக்குவரத்து வசதிகள் குறைந்த அல்லது முற்றாகவே போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு கால்நடையாகச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். ‘ஆயித்தியமலை என்ற பிரதேசத்து மக்களை பசி, பட்டினியில் இருந்து காப்பாற்றியது யாழ் பல்கலைக்கழக மாணவர்களே’ என்று இன்றும் அங்கு பேசப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஏறத்தாள 12 லொறி நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்பி இருந்தார்கள். சம்பந்தன் தலைமையில் திருகோணமலையில் இருந்து வந்த இளைஞர்கள் மட்டக்களப்பு நாவலடிப் பிரதேசத்தில் 100 வீடுகளைக் கட்டிக்கொடுத்தார்கள்.
•சூறாவழி அனர்த்தம் நடைபெற்று இரண்டு நாட்களிலேயே தமிழ் இளைஞர் பேரவை தமது பணிகளை கிழக்கில் ஆரம்பித்திருந்தது. கல்னை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, மாந்தீவு முதலான இடங்களில் தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். பின்நாட்களில் பல்வேறு விடுதலை இயக்கங்களில் தலைமைப் பொறுப்பு வகித்த பல தலைவர்கள் இளைஞர்களாக நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
•மட்டக்களப்பில் இருந்த சாராயத் தவறணைகளை மூன்று மாதங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை. அவரது அந்த நடவடிக்கையானது, நிவாரணப் பணம் குடித்து சீரழிக்கப்படுதை தடுத்ததாக மக்களால் அந்த நேரத்தில் பெரிதளவு பாராட்டப்பட்டது.
•வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட நிவாரணங்களை ஒருமுகப்படுத்துவது என்கின்ற பெயரில் பொலனறுவை-மட்டக்களப்பு வீதி, பதுளை- மட்டக்களப்பு வீதி, அம்பாறை – மட்டக்களப்பு வீதி ஆகிய மூன்று முறைகளிலும் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு அரன்களை அமைத்த அமைச்சர் தேவநாயகம், நிவாரணப்பொருட்களை கைப்பற்றி புணருத்தான சபைகள் மூலமாக அவைகளை வினியோகித்தார்.
•மட்டக்களப்பு மகாவித்தியாலயத்தில்(தற்போதைய மகாஜன கல்லூரி) 40 வடபகுதி இளைஞர்கள் தங்கியிருந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். 24 மணிநேரத்திற்குள் அவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று கட்டளையிட்டது மட்டக்களப்பு காவல்துறையும், கல்வி திணைக்களமும்.
•அதிரடியாக அரசடி மகாவித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய வடபகுதி இளைஞர்களுக்கு முன்நாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜன் செல்வநாயகம் புகலிடம் அளித்தார்.
நன்றி: 12 மணிநேரம்