Psycops- Psychological Operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் யுத்தத்தை தமிழ் ஊடகங்கள் எவ்வாறு மேற்கொண்டன, அந்த உளவியல் யுத்தத்தை மேற்கொள்வதில் தமிழ் ஊடகங்கள் எந்தனை தூரம் வெற்றிகண்டன என்பன பற்றி கடந்த வாரம் இந்தப் பத்தியில் பார்த்திருந்தோம்.
உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்ற ஒரு அம்சமும் இருக்கின்றது. அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்படைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psychological Operations) இருக்கின்றது.
குறிப்பிட்ட இந்த உளவியல் நடவடிக்கையை போரிடுகின்ற அனைத்துத் தரப்புக்களுமே செய்வது வளக்கம்.
எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பதான முக்கியமான உளவியல் போரினை சர்வதேச செய்தி ஊடகங்கள் எப்படிச் செய்தன என்பது பற்றித்தான் தொடர்ந்து நாம் விரிவாகப் பார்க்க இருக்கி;றோம்.
அதற்கு முன்னதாக, முன்னய காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு உளவியல் யுத்தம் பற்றிப் பார்ப்பது, உளவியல் போர் என்கின்ற விடயம் தொடர்பான மேலதிக தெளிவை நாம் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
1162 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரசித்தி பெற்ற ஆட்சியையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொண்டு சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டுள்ள மொங்கோலியத் தலைவர் கெங்கிஸ்கான் ஒருவகையிலான உளவியல் யுத்தத்தை மேற்கொண்டிருந்தார். ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை ஆக்கிரமிப்பதில் மொங்கோலியச் சேனைகள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. போராயுதங்களைத் தயாரிப்பதிலும், போர்யுத்திகளை வகுப்பதிலும், போர்ப்படை நடாத்துவதிலும் ஐரோப்பியர்கள் மிகவும் முன்னேற்றம் அடைந்திருந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளை ஆக்கிரமிப்பதில் கெங்கிஸ்கான் பெற்ற வெற்றிக்கு, அவர் உபயோகித்த ஒரு உளவியல் யுத்தம்தான் காரணம் என்று போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அப்படி என்ன உளவியல் யுத்தத்தை கெங்கிஸ்கான் மேற்கொண்டார்;?
முதலாவதாக, ஐரோப்பியர்கள் மீதான போருக்கு அவர் வதந்தி பரப்பும் முகவர்களை அதிகமான அளவில் பயன்படுத்தியிருந்தார். அவர் யுத்தம் புரியச் செல்லும் நாடுகள் மீது அவரது படைவீரர்கள் பாயும் முன்னதாக, அவரது வதந்தி பரப்பும் முகவர்கள் ஏவிவிடப்படுவார்கள். இந்த வதந்தி பரப்பும் பிரிவினர், கெங்கிஸ்கான் படையினர் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுவார்கள். அந்த வதந்திகள் மக்கள் ஊடாக ஐரோப்பிய படை வீரர்கள் மத்தியிலும், படைத்தளபதிகள் மத்தியிலும் மெதுமெதுவாகப் பரவி, அங்கு பெரியதொரு அச்சநிலையை(Fear psycho) உருவாக்கிவிடும்.
அப்படி என்ன வதந்திகளை தனது ஏஜன்டுக்கள் ஊடாக கெங்கிஸ்கான் பரப்பினார்?
முதலாவது, கெங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியப் படைவீரர்களின் எண்ணிக்கை தொடர்பான ஒரு பாரிய மிகைப்படுத்தலை கெங்கிஸ்கானின் வதந்தி பரப்பம் முகவர்கள் எதிரி நாடுகளில் பரப்புவார்கள். நிஜத்தில் கெங்கிஸ்கான் படையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிpகமான படைவீரர்கள் அந்தப் படையில் இருப்பதாக வதந்தியைப் பரப்புவார்கள்.
இந்தக் கதையை உள்வாங்கும் எதிரிப் படைகளது மனங்களில் தோல்வியின் சாயல் படர ஆரம்பித்துவிடும்.
அதன் பின்னர் கெங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியப் படைவீரர்கள் மிகவும் கொடியவர்கள் என்றும், அவர்கள் தம்மிடம் தோல்வியடையும் படைவீரர்களை மிகவும் கொடுரமாகச் சித்திரவதை செய்து கொலைசெய்;வார்கள் என்பதான வதந்திகளைப் பரப்புவார்கள்.
மங்கோலியப் படைவீரர்களிடம் தோல்வியடையும் எதிரிப் படைவீரர்களது கண்களைத் தோண்டி குருடர்களாக்கி வேடிக்கை பார்ப்பதில் மங்கோலியர்கள் விருப்பம் கொண்டவர்கள் என்றும், அவர்கள் ஆக்கிரமிக்கும் நாடுகளில் உள்ள பெண்களை மிக மிகக் கொடுரமான முறையில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவார்கள் என்றும், அந்த முகவர்கள் வதந்தி பரப்புவார்கள்.
இது ஒரு மிகப் பெரிய அச்ச நிலையை(Fear psycho) எதிரிப் படைகள் மத்தியில் ஏற்படுத்திpவிடும். ஒரு படைப்பிரிவுக்கு எப்பொழுது அச்சம் ஏற்படுகின்றதோ, அந்த நிமிடமே தோல்வி அவர்களை நெருங்கிவிடும் என்பது ஒரு போரியல் விதி. தங்களது மனைவி மற்றும் குடும்பம் பற்றிய கவலையை படைவீரர்களுக்கும், படைவீரர்கள் பற்றிய கவலையை குடும்ப உறுப்பிர்களுக்கும் ஏற்படுத்தும் இந்தவகை உளவியல் போர் அந்தக் காலகட்டத்தில் எதிரிப் படைகளுக்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு அடுத்ததாக கெங்கிஸ்கான் தரப்பில் உளவியல் நடைவடிக்கைக்கு என்று மற்றொரு முக்கிய புரவிப்படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவு, அம்பு போன்று விரையும் வீரர்கள் ((“arrow riders’) என்று அழைக்கப்பட்டார்கள். இந்த புரவிப் படைவீரர்களின் பணி என்னவென்றால், எதிரிப் படைப்பிரிவினரிடையேயான தொடர்பாடலை குழப்புவது.
எதிரிப் படைப் பிரிவுகளிடையே, அதன் தளபதிகளிடையே விரைவான தொடர்பாடலை மேற்கொள்வதற்கென்று, விசேட வீரர்கள் இருப்பார்கள் (அந்தக் காலத்தில் தொலைத் தொடர்பு கருவிகள், தொலைபேசிகள் எல்லாம் இருந்திருக்கமாட்டாதுதானே) இந்த விசேட வீரர்களின் நகர்வுகளைத் தடுப்பதுதான் கெங்கிஸ்கானின் விசேட புரவிப்படைவீரர்களின் பிரதான பணி. மற்றய படைப்பிரிவுகளுடன், அல்லது தலைமையுடன் தொடர்பில்லா படை அணிகள் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி மிக இலகுவாகவே செயலற்றதாகிவிடும்.
இவ்வாறு 1100ம் ஆண்டுகளில் உளவியல் யத்தத்தை மிக நேர்த்தியாக நடாத்தி, அனுகூலங்கள் பலவற்றை பெற்றதாக மங்கொலியத் தலைவரான கெங்கிஸ்கான் மன்னன் போரியல் வரலாற்றுப் பதிவுகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
கெங்கிஸ்கான் மன்னன் காலத்தில் அவரது வாந்தி பரப்பும் முகவர்கள் செய் உளவியல் யுத்தத்தைத்தான், இந்தக் காலகட்டத்தில் ஊடகங்கள் செய்துகொண்டு இருக்கின்றன.
கடந்த யுத்த காலகட்டத்தில் தமிழ் ஊடகங்களும், இந்தவகை உளவியல் போரினைத்தான் தமது சக்திக்கு உட்பட்ட வகையில், தம்மால் முடிந்த அளவிற்கு செய்துவந்தது.
இன்றைய காலகட்டத்தில் எமது பொது எதிரிகள் ஊடகங்கள் வாயிலாகச் செய்ய விளைவதும் இதனைத்தான்.
சரி, இனி மற்றொரு முக்கிய விடயத்திற்கு வருவோம்.
எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பதான முக்கியமான உளவியல் போரினை சர்வதேச செய்தி ஊடகங்கள் எப்படிச் செய்தன?
சிறிலங்காவின் ஊடகங்கள் எப்படிச் செய்தன?
இது பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்..