புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையாவினால் படுகொலை செய்யப்பட்டதாக, ஈ.பி.ஆர்.எல்.எப்.இனரால் வதந்தி பரப்பப்பட்டது பற்றியும், அந்த வதந்தியை நம்பி மக்கள் சோர்வு அடைந்தது பற்றியும் கடந்த வாரம் பார்த்திருந்தோம். இந்தியப் படையனர் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒருவித உளவியல் நடவடிக்கையாக இந்த வதந்தி பரப்பப்பட்டது.
இந்த வதந்திகள் மும்முரமாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கையில், இந்தியப் புலனாய்வுப் பிரிவினரான றோ அமைப்பினரிடம் பாரிய ஒரு குழப்பமும், முரன்பாடும் உருவாகியிருந்தது. றோ அமைப்பைச் சேர்ந்த இரண்டு தரப்பினரிடையே பலத்த வாக்குவாதங்களும், அபிப்பிராயபோதங்களும் கூட உருவாகியிருந்தன.
உண்மையிலேயே றோ அமைப்பினரின் ஒரு பிரிவினர் மூலமாகத்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதான வதந்தி கட்டவிழ்த்துவிடப்பட்டது.
புலிகளை வெல்லமுடியவில்லை என்கின்ற ஆதங்கம் காரணமாகவும், புலிகள் பிரேமதாசாவுடன் கைகோர்க்க ஆரம்பித்துவிட்ட கோபம் காரணமாகவும், இந்தியா வெறுங்கையுடன் நாட்டை விட்டு வெளியேறியேயாகவேண்டும் என்கின்ற இயலாமை காரணமாகவும், இவை அத்தனைக்கும் காரணமாக இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிரான அந்த வதந்தியை அவர்கள் கட்டவிழ்த்து விட்டு திருப்திப்பட்டுக்கொண்டார்கள்.
அதைவிட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு காடுகளில் அங்காகாங்கு மறைந்திருந்த பொழுதும் அவர்களிடையேயான தொடர்பாடல்கள் பெரிதும் குறைந்ததாகவே காணப்பட்டது. அவர்களது தலைவர் கொல்லப்பட்டுவிட்டதான செய்திகள் அவர்களுக்குப் பாரிய உளவியல் பாதிப்பினை உருவாக்கலாம் என்று திட்டமிட்டும் இந்த வகை வதந்திகள் பரப்பப்பட்டன. அடுத்ததாக, விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்திற்கு ஒருவித உளவியல் சோர்வினை ஏற்படுத்தும் நோக்கோடும் இந்த வததந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துதல், மாத்தையா மீது புலி உறுப்பினர்களுக்கு இருந்த மதிப்பைக் குறைத்து சந்தேகத்தை ஏற்படுத்துதல், இந்தியப் படையினருக்கும், தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கும் இடையில்(சிறிது காலத்திற்காவது) உற்சாகத்தை ஏற்படுத்துதல், மக்களைக் குழப்புதல், புலிகளுடன் கைகோர்க்க முன் வந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தடுமாறவைத்தல்.. இதுபோன்ற பல உள்நோக்கங்கள் காரணமாகவே றோ இந்த வதந்தியை ஆரம்பத்தில் பரப்பியிருந்தது.
இந்தப் பொய்யை இந்தியப் படையினர் ஊடாகப் பரப்பினால், சிறிது காலத்தின் பின்னர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்கின்ற உண்மை வெளிப்படும் போது இந்தியாவிற்குச் சங்கடங்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தால், இந்த வதந்தியை பரப்பும் ஒரு ஊடகமாக அவர்கள் வரதராஜபெருமளைத் தோர்ந்தெடுத்திருந்தார்கள். வரதராஜப் பெருமாளே அறியாதவண்ணம் இந்தச் செய்தியை வரதராஜப் பெருமாளின் காதுகளுக்கு எட்டச் செய்தார்கள்.
இந்த விடயத்தில் மிப்பெரிய நகைச்சுவை என்னவென்றால், பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதான வதந்தியை வரதராஜப்பெருமாள் உண்மை தெரியாமல் றோவுக்கே அறிவித்ததுதான்.
உளவியல் நடவடிக்கை
றோ அமைப்பின் ஒரு தரப்பினர் பிரபாகரனது கொலை தொடர்பான வதந்தியைக் கிழப்பிவிட்ட அதே நேரம், றோவின் மற்றொரு தரப்பினர் இந்த வதந்தியால் பெருத்த சங்கடத்திற்கு உள்ளாகி இருந்தார்கள். அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் தர்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலையை விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வலையாக மாற்றிவிடும் முயற்சியில் அந்த தரப்பினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அமிர்தலிங்கம் மீது தமிழ் மக்களின் ஒரு பெரும் பிரிவினருக்கு இருந்த அனுதாபத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வுகளாகத் திருப்பிவிடவேண்டும் என்பதில் அவர்கள் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்று பரப்பபட்ட வதந்தி அவர்களின் இந்தச் செயற்பாட்டை சுக்குநூறாக்கியிருந்தது. பிரபாகரன் அவர்களின் கொலை விடயத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அனுதாபம், அமிர் கொலை மூலமாக அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்த உளவியல் போரைச் சிதைத்திருந்தது.
றோவிற்குள் முரன்பாடு;
டில்லியில் றோ முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்காலப்பகுதியில் ஈழப் பிரச்சினையே முக்கியத்தவம் பெற்ற ஒன்றாக இருந்ததால், ஈழ விவகாரங்களில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட றோ பிரிவு முக்கியஸ்தர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
பிரபாகரன் கொலை தொடர்பான வதந்தியைக் கட்டவிழ்த்துவிட்ட தரப்பினர், அவர்களது கைங்காரியம் பற்றி பெருமிதத்துடன் மற்றய றோ முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தபோது, அமிர் கொலை தொடர்பான உளவியல் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டிருந்த தரப்பினரக்கு பயங்கரக் கோபம் வந்தது. அமிர் கொலை மூலம் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் எதிரான நல்லதொரு உளவியல் நடவடிக்கையை மேற்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தை றோவின் ஒரு தரப்பினர் சிதைத்துவிட்டது பற்றி அவர்கள் தங்கள் ஆதங்கத்தையும், அபிவிருத்தியையும் வெளியிட்டார்கள். இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஒரு பெரிய வாக்குவாதம் உருவாகும் அளவிற்கு வார்த்தைகள் முற்றியிருந்தன.
இந்தியப் பத்திரிகைகள்:
தமிழ்நாட்டில் இருந்து வெளியான பத்திரிகைகளில் அனேகமானவை, பலிகளின் தலைவர் இறந்தது பற்றி வெளியாகியருந்த செய்திகளை கேள்விக்குறியுடன்தான் வெளியிட்டிருந்தன. ஷதினமலர்| பத்திரிகை மட்டுமே பிரபாகரன் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியை உறுதியாக வெளியிட்டிருந்தது.
24.07.1989 அன்று வெளியான தினமலர் பத்திரிகையில், ஷஷதமிழ் கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்டதை அடுத்து பிரபாகரனுக்கும், அவரது துனைத்தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச் சண்டை வரை சென்று பிரபாகரன், கிட்டு மரணத்தில் முடிந்தது. தினமலர் நிருபர் பலவேறு தரப்பிலும் திரட்டிய தகவல்கள் அதனை நிரூபிக்கின்றன. பிரபாகரன் கொலை செய்யப்பட்டடு இன்றுடன் ஒரு வாரம் முடிகின்றது|| என்று செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தப் பத்திரிகை மேலும் தனது செய்தியில்: “பல ஊர்களில் பிரபாகரன் படத்திற்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தகின்றனர். பிரபாகரனையும் கிட்டுவையும் தீர்த்துக்கட்ட நேர்ந்தது ஏன் என்பதை விளக்கி மாத்தையா பேசியுள்ள ஆடியோக் கசட்டுக்கள் இலங்கைத் தமிழர் பகுதிகளில் ஆங்காங்கே ஒலிபரப்பப்படுகின்றன. சில இடங்களில் பிரபாகரன், கிட்டு ஆகியோரின் படங்கள் ஒட்டப்பட்டு, இதய அஞ்சலி என்று எழுதப்பட்டு பூக்கள் போடப்பட்டுள்ளன|| இவ்வாறு தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது.
தமிழ் நாட்டில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தினமலர் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ, தமது தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்கின்ற உண்மையை அவர்கள் தமிழ் நாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்கள். வேறு பல பத்திரிகைகள் ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
தினமலரும் விடவில்லை. 25.07.1989 அன்று வெளியான தினமலர் பத்திரிகையில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது: “விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன், அவருடைய தளபதியான மாத்தையாவால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை திட்டவட்டமாக நேற்று வெளியிட்ட ஒரே நாளிதழ் தினமலர்தான் என்பதை வாசகர் கவனத்திற்கக் கொண்டு வருகின்றோம். எல்லாப் பத்திரிகைகளிலும் கேள்விக்குறியுடன் வெளியான இந்த முக்கிய செய்தியை, முழுமையாகவும், விரிவாகவும், ஆதாரபூர்வமாகவும் எமது வாசகாகளுக்கு வழங்க தினமலர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தினமலர் செய்தி பொய்யானது என்று சில நகரங்களில் சுவரொட்டி மூலம் செய்த பிரச்சாரம், நேற்று கொழும்பில் ஸ்ரீலங்கா அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பினால் முடமாக்கப்பட்டுள்ளது|| என்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது.
இரகசிய நடவடிக்கை:
புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக செய்தி தமிழ்நாட்டில் பாரிய தடுமாற்றத்தையும்;, அவநம்பிக்கையையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டிருக்கையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கை ஒன்று தமிழ் நாட்டின் ஒரு மூலையில் மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தது.
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சாதனையைச் செய்துகொண்டிருக்கின்றோம் என்கின்ற அறிவு சிறிதும் இல்லாமல், ஈழ அனுதாபியான கோபால் என்கின்ற அந்த இளைஞன் அந்த இரகசிய நடவடிக்கையில் தனது எதிர்காலத்தையே பணயம் வைத்து இறங்கியிருந்தான்.
அவனது நடவடிக்கையும் ஒருவகை உளவியல் நடவடிக்கைதான்.
அந்த நடவடிக்கை என்ன? அது வெற்றியளித்ததா? எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது? என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடரும்..