உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-12) – நிராஜ் டேவிட்

1

உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயம் பற்றி கடந்த சில மாதங்களாக சற்று விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். கடந்த கால யுத்தங்களின் பொழுது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றி இந்தவாரமும் பார்க்க இருக்கின்றோம்.

அதற்கு முன்னதாக, இந்த தொடர் கட்டுரைகள் தொடர்பான இரண்டு கேள்விகளை எமது வாசகர்களிடம் கேட்கவேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றேன்.
1. உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற தலைப்பில் நாம் மேற்கொண்டு வரும் இதுபோன்ற ஆய்வுகளை மேலும் தொடரவேண்டுமா?
2. ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றி இங்கு நாம் நடுநிலையாக ஆராய்வதை வாசகர்கள் விரும்புகின்றார்களா?

இந்த இரண்டு கேள்விகள் தொடர்பான தங்களது அபிப்பிராயங்களை எமது வாசகர்கள் தெரிவித்தால், வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்தத் தலைப்பில்தொடர்ந்து நாம் எமது பார்வையைச் செலுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

பல தரப்பினராலும் ஏமாற்றப்பட்டுவருகின்ற ஒரு இனத்தின் பிரதிநிதிகள் என்கின்ற வகையில் புலம் பெயர்தமிழ் மக்கள் இந்த உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற விடம் பற்றி மிகுந்த தெளிவைப் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அதனால்தான் கடந்த இரண்டு மாதங்களாக இந்த விவகாரத்தை சற்று ஆழமாகப் பார்த்து வருகின்றோம். உளவியல் நடவடிக்கைகள் என்ற தலைப்பில் இன்னும் பல விடயஙங்கள் மீது நாம் பார்வையைச் செலுத்தவேண்டி இருக்கின்றது. குறிப்பாக சிறிலங்கா இராணுவமும், அதன் உளவியல் பிரிவினரும் எமது இனத்தைக் குறிவைத்து மேற்கொண்ட உளவியல் யுத்தம் பற்றிய அறிவும் தெளிவும் எமக்கு இருந்தால்தான் எதிர்வரும் காலங்களில் எம்மைக் குறிவைத்து சிறிலங்கா மேற்கொள்ள இருக்கும் உளவியல் நடவடிக்கைகளில் இருந்து எம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும். எனவே இந்த விடயத்தில் ஒரு நீண்ட பார்வையைச் செலுத்துவது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.
அதற்கு இடையே, இந்தத் தலைப்பில் எமது வாசகர்களுக்கு சலிப்பு ஏதாவது ஏற்பட்டுவிட்டதோ என்கின்ற ஒரு சந்தேகம் எனது மனதின் ஒரு மூலையில் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் வாசகர்களின் அபிப்பிராயத்தை கேட்டறிந்து, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொண்டு நகரலாம் என்று நினைக்கின்றேன்.
அத்தோடு, சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றதான வேண்டுகோள்கள் அன்பாகவும், மிரட்டல்களாகவும் விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிறிலங்கா தரப்பினர் இப்படியான அழுத்தங்களை ஒருபக்கம் பிரயோகித்துக்கொண்டிருக்க, மறுபக்கம் தமிழ் தேசியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தரப்பினரும் இப்படியான வேண்டுகொளை விடுத்து வருகின்றார்கள்.
ஆனால் வாசகர்கள் என்ன நினைக்கின்றார்கள்? இந்த விடயம் பற்றி வாசகர்களின் அபிப்பிராயம் என்ன? அதனைத்தான் நான் அறிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

சரி. இனி கட்டுரைக்குள் நுழைவோம்.

உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்றதான உளவியல் நடவடிக்கை பற்றி தற்பொழுது ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம்.
அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psychological Operations) இருக்கின்றது.
குறிப்பிட்ட இந்த உளவியல் நடவடிக்கையை போரிடுகின்ற அனைத்துத் தரப்புக்களுமே செய்வது வளக்கம்.
இந்தவகை உளவியல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் எவ்வாறு மேற்கொண்டார்? – இதுபற்றித்தான் கடந்த சில வாரங்களாக ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளது கரந்தடிப்படையிலான போராட்ட வடிவம் பற்றியும், அந்தப் போராட்டத்தில் அவர்கள் நிகழ்திக்காண்பித்த சாதனைகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ளும் போரியல் வல்லுனர்கள், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றி பெரிய ஆச்சரியத்தை வெளியிடுகின்றார்கள்.

அமெரிக்கா, இஸ்ரேல், பாக்கிஸ்தான், தென்ஆபிரிக்கா – இப்படி பல பாரிய நாடுகளின் பக்கபலத்துடன் களமிறங்கியிருந்த சிறிலங்கா இராணுவத்தின் உள உரத்தை அசைத்துவிடும்படியாக விடுதலப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் மேற்குல படைவல்லுனர்கள் மத்தியில் கூட இருக்கின்றது.

இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி ஆரம்பமானபோது, ‘உளவுரன்| (Moral advantage) என்கின்ற விடயத்தில் சிறிலங்காப் படைகள் புலிகளை விட பல மடங்கு முன்னணி நிலையிலேயே இருந்தார்கள்.
தென் இலங்கையில் ஜே.வி.பி. புரட்சியை முற்றாக அடக்கி பாரிய உளஉரத்தைப் பெற்ற நிலையில் சிறிலங்காப் படையினர் இருந்தார்கள். மறுபக்கம் இந்திப்படையினருடனான யுத்தத்தில் சின்னாபின்னமான நிலையிலேயே விடுதலைப் புலிகள் இருப்பதாக சிறிலங்கா படையினர் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். 1ம் கட்ட ஈழ யுத்தத்தில் புலிளுடன் சேர்ந்து நின்று போராடிய புளொட், ஈ.பி.ஆர்எல்.எப:; இனது ராசிக் குழு, டெலோ, ஈரோசின் ஒரு பிரிவு – என்று பல அமைப்புக்கள் சிறிலங்கா இராணுவத்துடன் கைகோர்த்துப் புலிகளுக்கு எதிராகக் களமிறங்கியிருந்ததும், அவர்களுக்கு பாரிய உளவுரத்தை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு, உலகின் பல வல்லரசு நாடுகளின் ஆயுத உதவிகள், ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றினால் பாரிய உள உரத்தைப் பெற்ற நிலையில் புலிகளின் பிரதேசங்களை ஆக்கிரமிக்கப் புறப்பட்டிருந்தார்கள் சிறிலங்காப் படையினர்.

வெற்றிப் பெருமிதத்துடன் வீறுநடைபோட்ட சிறிலங்காப் படையினரை தடுத்துநிறுத்திய ஒரு முக்கியவிடயமாக, புலிகளின் ‘ஜொனி| பொறிவெடிகளையே போரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


நூற்றுக்கணக்கணக்கில், ஆயிரக்கணக்கில் புலிகளால் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஜொனி கன்னி வெடிகளே, வடக்கு கிழக்கில் சிறிலங்காப் படையின் எதிர்கொண்ட மிகப் பெரிய அச்சுறுத்தலாக அந்த நேரத்தில் இருந்தது.
மிகவும் குறைந்த செலவில், சிறிய தொழில்நுட்பத்தை மாத்திரமே பாவித்து புலிகளால் உருவாக்கப்பட்டிருந்த இந்த வகை பொறிவெடிகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் முன்னேற நினைத்த ஒவ்வொரு சிறிலங்காப் படையினரின் உளவியலையும் பெரிதும் பாதிப்பதாகவே அமைந்திருந்தது.

எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது, எப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்று தெரியாமல், ஜொனி பொறிவெடியில் அகப்பட்டுக்கொள்பவர்கள், தமது கால்களை மறந்துவிடவேண்டியதுதான். சிறிங்காப் படைத்தரப்பில், இவ்வாறு ஜொனி வெடியில் அகப்பட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை என்பது, பல ஆயிரம்.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி வெளியான ளுரனெயலவுiஅநள என்ற ஆங்கில பத்திரிகையில் டுவைவடந துழலெ’ள னநயனடல அளைளழைn என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில் புலிகளின் இந்த ஜொணிக் கன்னிவெடிகள் பற்றி விரிவாக ஆராய்ந்திருந்தார்கள். சிறிலங்கா இராணுவத் தரவுகளை ஆதாரம் காண்பித்து வரையப்பட்ட அந்தக் கட்டுரையில் ஒரு முக்கிய விடயம் கூறப்பட்டிருந்தது. அதாவது, இதுவரை நடைபெற்ற யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளில் சரியாக அரைவாசி இழப்புக்கள் புலிகள் விதைத்திருந்த ஜொனி பொறிவெடிகளாலேயே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அளவிற்கு எதிரிக்கு அச்சுறுத்தலான ஒரு ஆயுதமாக ஜொனி வெடிகளை புலிகள் தமது சண்டைகளின் பொழுது பயன்படுத்தியிருந்தார்கள்.
இந்த ஜொனி வெடிகள் பற்றி கருத்துக்கூறும் போரியல் வல்லுனர்கள், இந்த வகை பொறிவெடிகள் சிறிலங்காப் படையினருக்கு நேரடியாக ஏற்படுத்தும் பாதிப்புக்களை விட மறைமுகமாக ஏற்படுத்தும் பாதிப்புக்கள்தாம் அதிகம் என்று கூறுகின்றார்கள்.
அதாவது சிறிலங்கா படைவீரர்கள் ஜெனி வெடிகளினால் நேரடியாக உடற் பாதிப்புக்குள்ளாகி அங்கவீனர்களாவதை விட, உளவியல் ரீதியாக படைத்தரப்பிற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களே அதிகம் என்று போரியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

முதலாவதாக புலிகள் தயாரித்த அந்த ஜொனி வெடிகள் படையினரைக் கொல்லும் நோக்கத்தில் அமைக்கப்படவில்லை. அந்த வெடியில் அகப்படும் படையனர் தமது கால்களை மாத்தரமே இழக்கவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன.

எதற்காக ஜொனி மிதி வெடிகளை புலிகள் இவ்வாறு வடிவமைத்திருந்தார்கள்?

களமுனைகளில் நகர்வினை மேற்கொள்ளும் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டால், விடயம் அத்துடன் முடிந்துவிடும். வீழ்ந்துகிடக்கும் படைவீரரை ஒரு துணியால் மூடிவிட்டு, முன்னேறிக்கொண்டே இருப்பார்கள் மற்றய படைவீரர்கள்.
ஆனால் ஜொனி வெடியில் அகப்பட்டு குற்றுயிராகக் கிடக்கும் படைவீரரை விட்டுவிட்டு மற்றைய படையனர் முன்னேற முடியாது. வீழ்ந்துகிடந்து உயிருக்குப் போராடும் படைவீரரை திரும்பக்கொண்டுபோகும் கடமை களமுனை வீரர்களுக்கு வந்துவிடும். இதற்காக, ஜொனி மிதி வெடியில் அகப்பட்ட ஒவ்வொரு வீரனுக்கும் குறைந்தது நான்கு மேலதிக வீரர்கள் தேவைப்படுவார்கள்.
அடுத்ததாக ஜொனி மிதி வெடியில் அகப்பட்டு வீழ்ந்துகிடக்கும் ஒரு வீரன் வெளியிடும் அலரலின் சத்தம் மற்றய களமுனை வீரர்களுக்கு உளவியல் ரீதியாகப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாகவும், அவர்களை பாரிய அளவில் அச்சமடையவைப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனால் அவர்களால் தொடர்ந்து முன்னேற்ற நகர்வினை மேற்கொள்ளுவதில் பாரிய தடங்கல் ஏற்பட்டிருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், களமுனையில் ஒரு படைவீரன் இறந்துவிட்டால், ஒன்று அந்தப் படைவீரன் காணமல் போய்விட்டதாக அறிவித்துவிட்டு வாழாதிருந்துவிடுவார்கள். அல்லது, ஒரு இலட்சம் ருபாவை குடும்பத்திற்கு வழங்கிவிட்டு, கதையை முடித்துவிடுவார்கள். ஆனால் ஒரு படைவீரன் ஜொனி மிதி வெடியில் அகப்பட்டு தனது கால்களில் ஒன்றை இழந்துவிட்டால், அவனை அவனது வாழ்நாள் முழுவதும் போஷிக்க வேண்டும். கால்களை இழந்த நிலையில் மக்கள் மத்தியில் வலம்வரும் அந்தப் படைவீரரின் நிலை, மற்றைய இளைஞர்களை இராணுவத்தில் இணைவதற்கு ஊக்குவிக்காத அதேவேளை, மற்றைய படையினருக்கும் பாரிய உளவியல் அச்சத்தையும் ஏற்படுத்திவிடும்.
இவ்வாறு, புலிகளின் ஜொனி மிதி வெடி என்பது சிறிலங்காப் படையினருக்கு பாரிய உளவியல் அச்சத்தை ஏற்படுத்திய ஒரு விடயமமாகவே இருந்துவந்தது.

படையினரின் இந்த அச்சநிலையை மேலும் அதிகரிப்பதற்காக புலிகள் ஒரு உளவியல் நடவடிக்கையை செய்திருந்தார்கள்:
ஜொனி மிதி வெடிகளின் பின் பகுதிகளில் தொடர் இலக்கங்களை புலிகள் பொறிப்பார்கள். அந்தத் தொடர் இலக்கங்களும் கூட படையினருக்கு பாரிய உளவியல் பாதிப்பினை ஏற்படுத்தியதாக சிறிலங்காப் படைத்தரப்பு கூறுகின்றது.

அது எப்படி?
உதாரணத்திற்கு வெடிக்காத நிலையில், அல்லது வெடிக்கும் முன்னதாக ஒரு ஜொனி மிதி வெடியை சிறிங்காப் படையினர் கைப்பறிவிடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஜொனி மிதி வெடியில் 12172 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டிருக்கின்றது என்று உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம். இதனைக் கண்ட படையினருக்குப் பாரிய அதிர்ச்சி ஏற்பட்டுவிடும். தாம் கைப்பற்றிய ஜொனி மிதி வெடியுடன் சேர்த்து மேலும் 12ஆயிரம் வெடிகள் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகமும், அதனைத் தொடர்ந்து அச்சமும் அவர்கள் உள்ளங்களில் ஏற்பட்டுவிடும். அதன் பின்னர் களமுனைகளில் அவர்களது நகர்வுகள் என்பது எதிரில் வரும் புலிகளை விட, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவணிப்பதிலேயே தங்கிவிடும்.

ஜொனி மிதி வெடிகள் ஊடாக புலிகள் மேற்கொண்ட உளவியல் யுத்தத்தின் பாதிப்புக்களே, தமது தரப்பு எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் என்று சிறிலங்காவின் முன்னைநாள் படைத்தனைபதி லெப்.ஜெனரல் லயனல் பல்லேகல்ல (டுவ. புநநெசயட டுழைநெட டீயடடயபயடடந) ஒரு செவ்வியின் பொழுது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, தமது விடுதலைப் போராட்டங்களின் பொழுது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் ஏராளம்.
அவற்றில் சிலவற்றை சந்தர்பம் கிடைத்தால் தொடர்ந்து வரும் வாரங்களில் பார்ப்போம்.

தொடரும்..

 

பகிரல்

1 Comment

  1. 1. உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற தலைப்பில் நாம் மேற்கொண்டு வரும் இதுபோன்ற ஆய்வுகளை மேலும் தொடரவேண்டுமா?

    ஆம். உறுதியாக.

    2. ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றி இங்கு நாம் நடுநிலையாக ஆராய்வதை வாசகர்கள் விரும்புகின்றார்களா?

    ஆம் விரும்புகிறேன்.

கருத்தை பதியுங்கள்