அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-73) – நிராஜ் டேவிட்
25.10.87 இல், கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமில் தங்கியிருந்த ஏழாயிரம் அகதிகளைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம்.
அகதிமுகாமின் வாசலில் வந்து நின்ற இந்தியப் படையினரின் யுத்தத்தாங்கி மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டு
அகதிமுகாமில் தங்கியிருந்த 24 அகதிகள் அந்த இடத்திலேயே துடிதுடித்து மரணித்தார்கள்.
கொக்குவில் அகதி முகாமை முற்றுகைக்குள் மூன்று நாட்களாக வைத்திருந்த இந்தியப் படையினர் அங்கிருந்தவர்களுக்கு உணவை வழங்க மறுத்திருந்தார்கள்.
அங்கிருந்தவர்கள் வெளியில் சென்று உணவை எடுத்து வருவதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
அங்கு தங்கியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பசியால் துடிதுடித்தார்கள்.
பசிக்கொடுமையால் அங்கு தங்கியிருந்த குழந்தைகள் ஓலமிட்டன.
ஆனால் அவை எதைப்பற்றியும் இந்தியப் படையினர் அக்கறை செலுத்தவில்லை.
ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகக் கழிந்தது.
மூன்று நாட்களின் பின்னர் ஒரு இந்தியப்படை அதிகாரி அந்த முகாமிற்கு வந்தார். தாங்கள் பசியால் செத்துக்கொண்டிருப்பதை அகதிகள் அந்த இந்திய அதிகாரிக்குத் தெரியப்படுத்தினார்கள்.
“அப்படியா?|| என்று கேட்டுக்கொண்ட அந்த அதிகாரி, “நாங்களும் பல நாட்களாக ஒன்றும் சாப்பிடவில்லை|| என்று அசட்டையாகப் பதிலளித்தார்.
பின்னர் பசியால் வாடிய அந்த அகதிகளைப் பார்த்துக் கூறினார், “உங்களுக்குச் சாப்பாடு வேண்டுமானால், இந்தப் பாடசாலையின் அருகில் இருக்கும் கோயில் தேரின் திரையை அகற்றவேண்டும்|| என்று இறுமாப்புடன் தெரிவித்தார்..
உடனடியாகவே அங்கிருந்தவர்கள் அந்தத் தேரின் மறைப்பை நீக்கினார்கள்.
பசிக் கொடுமையின் காரணமாக, தமது உத்தரவுகளுக்கெல்லாம் அங்கிருந்த மக்கள் ஆடுவதை புன்சிரிப்புடன் இந்தியப் படையினர் வேடிக்கை பார்த்தபடி நின்றார்கள்.
கொக்குவில் சண்டை:
கொக்குவில் பிரதேசத்தில் இந்தியப் படையினர் அதிக கடுமையாய் நடந்துகொண்டதற்கு ஒரு காரணம் இருந்தது.
கொக்குவில் பிரதேசத்தில் முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினர் மீது புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்களில் பல இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்தியப் படையினர் மக்களுடன் அதிக ஆத்திரத்துடன் நடந்துகொண்டதற்கும், பழிவாங்கும் உணர்வுடன் நடந்துகொண்டதற்கும் அதுவே காரணமாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
யாழ் நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் காங்கேசன்துறை வீதி வழியாக முன்னேறிய இந்திய இராணுவத்தின் ஒரு படையணி குளப்பிட்டிச்சந்திக்கு அருகில் ஆணைக்கோட்டைக்குச் செல்லும் பாதையில் புலிகளின் கன்னிவெடித் தாக்குதலுக்கு இலக்கானது.
கன்னிவெடித் தாக்குதல் இடம்பெற்று அதில் அகப்பட்டு கொல்லப்பட்டவர்கள் போக, அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்த சில இந்தியப்படைவீரர்கள் புலிகளின் அதிரடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இருபதிற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டார்கள்.
இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது ஷஇந்தியா டுடே| பத்திரிகையின் நிருபர் சியாம் தேக்வாணியும் புலிகளின் பாதுகாப்பில் களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் எடுத்திருந்த புகைப்படங்களே பின்னர் இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.(இத்துடன் காணப்படும் புகைப்படங்களும் கொக்குவில் சண்டைகளின் போது எடுக்கப்பட்டவைகளே.)
இதேபோன்று கொக்குவில் பூநாரி மரத்தடியிலும் இந்தியப் படையினர் மீது மற்றொரு தாக்குதல் நடைபெற்றிருந்தது.
இந்தத் தாக்குதலிலும் பதினைந்திற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தார்கள்.
இதுபோன்று கொக்குவில் பிரதேசத்தில் முன்னேறிய இந்தியப் படையினர் மீது பல அதிரடித்தாக்குதல்களைப் புலிகள் தொடுத்திருந்தார்கள்.
வீதிகள் எங்கும் இந்தியப் படையினரின் சடலங்கள் காணப்பட்டன.
இந்த சம்பவங்களினால் ஆத்திரமடைந்த நிலையில் இருந்த இந்தியப் படையினர், தமது இயலாமையின் வெளிப்பாடாகவே கொக்குவில் இந்துக் கல்லூரி அகதிமுகாம் மீது தாக்குதல் நடாத்தியிருந்தார்கள்.
அகதிகளையும் கண்ணியக் குறைவாக நடாத்தத் தலைப்பட்டார்கள்.