அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-71) – நிராஜ் டேவிட்
யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான விபரங்களை கடந்த வாரம் வரிவாகப் பார்த்திருந்தோம்.
இந்தியப் படையினர் யாழ் வைத்தியசாலையில் மேற்கொண்டிருந்த இந்தப் படுகொலைகள் உலகத்தின் கண்களில் இருந்து பெருமளவு மறைக்கப்பட்டிருந்தன.
அக்டோபர் 21ம் திகதி தீபாவளி தினத்தன்றே இந்தப் படுகொலைகள் நடைபெற்றன.
அசுரனை அழித்த தினமாகவே இந்துக்கள் தீபாவளி தினத்தை கொண்டாடுவது வளக்கம். அப்பாவிகளை அழிக்கும் தினமாக அந்த தீபாவளி தினத்தை இந்தியப்படையினர் அன்று யாழ் வைத்தியசாலையில் கொன்று-ஆடி மகிழ்ந்திருந்தார்கள்.
யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் கொலை வெறித் தாண்டவம் ஆடிமுடித்ததும் ஆஜானுபாகுவான ஒரு இந்திய இராணுவ உயரதிகாரி வைத்தியசாலையினுள் நுழைந்தார். உயிர்தப்பி எஞ்சியிருந்த வைத்தியர்கள், வைத்தயசாலை ஊழியர்கள், நோயாளர்கள் போன்றவர்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்தியப் படையினர் எந்தப் பிழையும் அங்கு செய்யவில்லை என்ற தொணியில் அவரது உரையாடல்கள் அமைந்திருந்தன. வைத்தியசாலையில் புலிகள் மறைந்திருந்து தாக்குதல்கள் நடாத்தியதாலேயே இத்தனை அனர்த்தங்களும் நடைபெற்றதாக அவர் அங்கு தெரிவித்திருந்தார். இந்தியப் படையினர் வேறு வழியில்லாமலேயே வைத்தியசாலைக்குள் நுழையவேண்டி ஏற்பட்டதாகவும், புலிகளுடன் சண்டையிட்டு இத்தனை புலிகளைக் கொல்லவேண்டி இருந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த 16 மணி நேரமாக வைத்தியசாலைக்குள் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த நேரடியாகவே கண்டுகொண்டிருந்த மக்களுக்கு அந்த அதிகாரி கூறுவது அப்பட்டமான பொய் என்பது நன்றாகவே தெரியும். அந்த அதிகாரி மீது அவர்களுக்கு கோபம் கோபமாக வந்தது. அவரது முகத்தில் காறி உமிழவேண்டும் போன்று அவர்களுக்குத் தோன்றியது.
ஆனால், அந்த அதிகாரி கூறிய அப்பட்டமான பொய்யைக் கேட்டுக்கொண்டு மௌனமாக இருப்பதைத் தவிர அங்கிருந்தவர்களால் எதுவும் செய்யமுடியாது இருந்தது.
ஏனெனில் அங்கிருந்த அத்தனை பேர்களின் உயிர்களும், அந்த இந்திய அதிகாரி வழங்கும் உயிர் பிச்சையில்தான் தங்கியிருந்தது. எப்படியாவது அன்றைய தினம் அங்கிருந்து தப்பிவிட்டால் போதும் என்று அங்கிருந்த ஒவ்வொருவரும் நினைத்தார்கள்.
இத்தனைக்கும் அந்த அதிகாரி அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது, 21 வைத்தியசாலை ஊழியர்கள் இந்தியப் படையினரால் கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்தர்கள். டாக்டர் ஏ.சிவபாதசுந்தரம், டாக்டர் கே.பரிமேலழகர், டாக்டர் கே. கணேஷரெட்ணம், மற்றும் மூன்று மருத்து தாதிகள் உட்பட 21 வைத்தயசாலை ஊழியர்கள் அங்கு படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அதைவிட 47 நோயாளர்கள் கண் பிதுங்கிய நிலையிலும், மண்டை சிதறிய நிலையிலும் அங்கு பிணமாகக் கிடந்தார்கள்.
சிலர் நோயாளர் கட்டில்களில் படுத்திருந்தபடியே துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரை விட்டிருந்தார்கள். அப்படியிருக்க அந்த இந்திய அதிகாரியோ தனது தரப்பின் பிழையை மறைக்கும் நோக்குடன் பேசிக்கொண்டே சென்றார்.
தனது பேச்சை முடித்துக்கொண்டு திருப்தியுடன் திரும்பினார் – தனது படையினரை அழைத்துக்கொண்டு.
அந்த இந்திய இராணுவ அதிகாரியின் பெயர் கேணல் ப்ரார்.
இந்தியப் படையினர் அவர் தலைமையில்தான் அன்றய தினம் அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள். ஆயுதத்தினால் மட்டுமே பேசத்தெரிந்த மனித இயந்திரங்களான சிப்பாய்களை விரும்பியபடி வெறித்தனமாட ஏவிவிட்ட அந்த அதிகாரி, தமது படைவீரர்களின் செயலை நியாயப்படுத்திவிட்டு திருப்தியுடன் திரும்பினார்.
உலகிலேயே மிகச் சிறந்த தத்துவ ஞானிகளையும், அகிம்சா நெறிகளையும், பண்பாடுகளையும், தன்னகத்தே கொண்டுள்ளது என்று பேசிக்கொண்டு பஞ்சமா பாதகங்களின் பாசறையாய்த் திகழும் பாரதத்தின் சுயவடிவம் அந்த அதிகாரியின் உருவில் தோன்றியதாக வைத்தியசாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவர் பின்னர் தெரிவித்திருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அவர்களுள் ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்:
“அதுவரை நெஞ்சத்தில் அடக்கிவைத்திருந்த துயரமெல்லாம் வெடித்து அழுகையாக வெளிவந்தது. உயிர் பிழைத்து நின்ற டாக்டர்களும், தாதியரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாய்விட்டு ஓ…! என்று கதறி அழுதார்கள். நாம் எமது படிப்பு, தகுதி அனைத்தையும் மறந்து அந்தக் கனத்தில் அனைவரும் குழந்தைகளாக இருந்தோம். முதல்நாள்வரை மற்றவர்கள் உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஓடிஓடி ஓயாது உழைத்த எமது வைத்தியசாலையின் எமது குடும்ப ஊழியர்களை, உயிரற்ற சடலங்களாய் சிதைந்து கருகிய அரைகுறை உடல்களாய் அங்கு காணும்போது பொங்கி உடைப்பெடுத்து வந்த அழுகையை யாராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை.. யாரை யார் தேற்றுவது???
அப்பொழுதுதான் ஒரு கடமையின் குரல் அங்கு உறுதியுடன் ஒலித்தது.
“அழுதது போதும். இனி இங்கு யாருமே அழ வேண்டாம். அழுவதால் எதுவித பயனும் இல்லை. இனி நாங்கள் செய்யவேண்டியது என்வென்று பார்க்க வேண்டும். இன்னும் இங்கு குற்றுயிராய்க் கிடக்கின்றவர்களைக் காப்பாற்ற வேண்டு;ம். அதை உடனடியாகச் செய்வோம்.|| அந்த வைத்தியரின் குரலுக்கு அங்கிருந்த அனைவரும் கட்டுப்பட்டார்கள்.
ஆவேசம் வந்தவர்கள் போன்று அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்கள் தமது கடமையினைத் தொடர ஆரம்பித்தார்கள். குற்றுயிராய் கிடந்தவர்களது உயிரைக் காப்பாற்றும் பணியினை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். பிணமாகக் கிடந்தவர்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அகற்றினார்கள்.
வைத்தியசாலையினுள் இறந்தவர்கள், மற்றும் வைத்தியசாலைச் சுற்று வட்டத்தில் இறந்தவர்கள் என்று நூற்றிற்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் திரட்டப்பட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எந்தஉடலையும் மரணச் சடங்கிற்காக வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்று இந்திய இராணுவம் கண்டிப்பாக கட்டளை பிறப்பித்திருந்தது.
இறந்தவர்களை பார்ப்பதற்கென்று வெளியில் இருந்து உறவினர்கள் உள்வருவதற்கும் இந்திய இராணுவம் அனுமதியளிக்கவில்லை.
புதிய வைத்தியப் பிரிவு கட்டுவதற்காக என்று வைக்கப்பட்டிருந்த மரங்கள் அன்று இறந்தவர்களை தகணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.
வைத்தியசாலையில் இந்தியர்கள்:
சம்பவம் நடைபெற்ற தினம் முதல் இந்தியப் படையினரின் பூரன கட்டுப்பாட்டிலேயே யாழ் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்தது.
வைத்தியசாலையின் செயற்படும் விஸ்தீரணம் இந்தியப் படையினரால் சுருக்கப்பட்டது. இந்தியப் படையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் ஒரு சிறிய பிரதேசத்தில் மட்டுமே நோயாளர்கள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் நடமாட அனுமதிக்கப்பட்டார்கள்.
புதிதாக இந்திய இராணுவ வைத்தியர்கள் தமது சேவையை யாழ் வைத்தியசாலையில் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
தொடர்ந்து இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க வைத்தியர்களும், தாதிகளும் யாழ் மக்களுக்கு வைத்திய சேவை புரிய வந்ததாகக் கூறிக்கொண்டு, காயமடைந்து வரும் இந்தியப் படை ஜவான்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
பழிவாங்கல் நடவடிக்கை.
இந்தியப் படையினர் காலத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய அவலம் பற்றி அடுத்ததாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி யாழ் கொக்குவில் பிரதேசத்தில் இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை நடாத்தியிருந்தார்கள்.
இந்தியப் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடித் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் முகமாக இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு யாழ் கொக்குவில் அகதி முகாமை நோக்கி நகர ஆரம்பித்தது.
அந்தப் படைப்பிரிவுக்கு தலமைதாங்கிய இந்தியப்படை அதிகாரியின் பெயர் கேணல் மிஸ்ரா.
ஈழத் தமிழர்களின் படுகொலைகளின் மற்றொரு அத்தியாயத்தை இரத்தத்தால் எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான இந்திய ஜவான்கள் கம்பீரமாக விரைந்துகொண்டிருந்தார்கள்.
அவலங்கள் தொடரும்..