அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-50) – நிராஜ் டேவிட்
‘பவான் இராணுவ நடவடிக்கை| (Operation Pawan) –
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இந்திய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இந்தியப் படையினர் இட்ட பெயர்.
‘பவான்| என்ற ஹிந்தி வார்த்தைக்கு காற்று என்று அர்த்தமாம். இந்தியப்படையினர் காற்றைப் போல யாழ்ப்பாணத்தினுள் உடுருவி, யாழ்ப்பாணம் முழுவதையும் வியாபித்து நிற்கும் நோக்குடன்தான் அவ்வாறு பெயரிட்டார்களோ தெரியவில்லை.
ஆனால், நடைமுறையில் இந்தியப் படையினரால் காற்றைப் போன்று இலகுவாக யாழ்ப்பாணத்தினுள் ஊடுருவ முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்தியப்படையினர் வைத்த ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு புதைகுழிகளாகவே இருந்தன. அங்கு அவர்கள் சந்தித்த ஒவ்வொரு வீடுகளும் அவர்களது எதிரியின் காப்பரன்களாக மாறியிருந்தன. அவர்கள் சென்ற பாதைகளில் இருந்த பனை மரங்களும், படலைகளும் கூட, அவர்களை தடுத்து நிறுத்தும் எதிரிகளாகவே உருப்பெற்றிருந்தன.
இந்தியப்படையினர் திட்டமிட்டபடி யாழ்ப்பாணத்தில் எதுவுமே நடக்கவில்லை.
யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட சீக்கியப்படைவீரர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுவிட, கொக்குவில் கிராமசபைக்கு அருகாமையில் தரையிறக்கப்பட்ட சுமார் 100 பராக் கொமாண்டோக்கள், தமது அடுத்த கட்ட நகர்வென்ன என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.
பிரம்படி வீதியில் அமைந்துள்ள புலிகளின் தலைவரது இருப்பிடத்தைச் சுற்றிவழைத்து புலிகளின் தலைவரைக் கைதுசெய்து அழைத்துச் செல்லுவதே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதான பணி. அவ்வாறு புலிகளின் தலைவரைக் கைது செய்து அவரை ஹெலிக்காப்டரில் கொண்டு செல்வதற்கு வழி சமைக்கும் வகையில், ஹெலிக்காப்டர் இறங்குவதற்கு ஒரு தளப் பிரதேசத்தை தயார்படுத்துவதே பரசூட்டில் தரையிறங்கிய சீக்கியப் படையினரின் பணி. தளப்பிரதேசத்தை தயார்படுத்தும் பணியினை மேற்கொள்ளவென வந்த சீக்கியப் படையினரின் பணியினை விடுதலைப் புலிகள் முற்றாகவே முடக்கிவிட்டதால், பராக்கொமாண்டோக்கள் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனை கைப்பறினாலும், தளம் எதுவும் அங்கு அமைக்க முடியாத நிலையில் அவரை எந்த வழியாகக் கொண்டு செல்லுவது என்று இந்தியப்படை அதிகாரிகளால் தீர்மாணிக்கமுடியவில்லை.
பலாலி விமாணத்தளத்தில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த இந்தியப்படை உயரதிகாரிகளின் கவனம் முழுவதுமே, யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறங்கி புலிகளின் முற்றுகைக்குள் இலக்காகிக் கொண்டிருந்த சீக்கிய வீரர்களை மீட்பதிலேயே இருந்ததால், பராக் கொமாண்டோக்களின் நகர்வுகள் பற்றிய உத்தரவை வழங்குவதில் பலத்த காலதாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டிருந்தன.
அத்தோடு புலிகள் தரப்பில் இருந்து காண்பிக்கப்பட்ட எதிப்புக்களும், பராக் கமாண்டோக்கள் இலகுவாக நகர முடியாதபடிக்கு பல தடைகளைப் போட்டிருந்தன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்கள், இந்தியக் கமாண்டோக்களின் நகர்வினை திசைமாற்றியும் விட்டிருந்தது.
புலிகள் இந்த அளவிற்கு தயாராக இருந்து யுத்தம் புரிவார்கள் என்று இந்தியப்படை அதிகாரிகள் கனவிலும் நினைக்கவில்லை. புலிகளின் எதிர்ப்பு அவர்கள் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு அதிகமாகவும், கடுமையானதாகவும் இருந்ததால் அடுத்து என்னசெய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்ததைப் போன்று, பிரம்படி வீதியிலும் இந்தியப் பராக் கமாண்டோக்களை மடக்குவதற்கு புலிகள் ஏதாவது பொறிகளை வைத்திருப்பார்களோ என்ற பயமும், கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த இந்தியப்படை உயரதிகாரிகளைப் பிடித்துக்கொண்டது. இவற்றின் காரணமாக, பராக்கமாண்டோக்களின் நகர்வினை சற்று தாமதிக்குமாறு இந்தியப் படை நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கவேண்டி ஏற்பட்டது.
பிரபாகரனின் வீடு எங்கே?
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் வசித்து வந்த ராஜா என்பவர், நள்ளிரவு முதல் கேட்டுக்கொண்டிருந்த தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டு சத்தத்தை மிகுந்த அச்சத்துடன் அவதானித்துக்கொண்டிருந்தார். பாரதூரமாக ஏதோ நடந்துகொண்டிருக்கின்றது என்பது மட்டும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெளிவாகப் புரிந்தது. அதிகாலை நான்கு மணியளவில் அவரது வீட்டின் வாசல்கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி. ஆயுதம் தரித்த சுமார் ஐம்பது இந்தியப் படையினர் அங்கு நின்றார்கள். அவர்களின் முகங்களில் கோபமும், பதட்டமும் தெரிந்தது.
அவரது அனுமதி இன்றியே வீட்டினுள் நுழைந்த சில இந்தியப் படை அதிகாரிகள், புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும், சாரா என்பவர் பற்றியும் விசாரித்தார்கள். அவர் தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்லும்படி கூறிவிட்டு வீட்டை முழுவதுமாகச் சோதனையிட்டார்கள். வீட்டின் சுவரில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைக் காண்பித்து ‘இது பிரபாகரனது படமா?| என்று ஒரு வீரர் கேட்டார். அதற்கு ராஜா, “இல்லை இது குருமகாராஜின் படம்|| என்று தெரிவிக்கவே, படத்தின் மீது டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு “மன்னித்துக்கொள்ளுங்கள்|| என்று அந்த வீரர் கூறினார்.
இந்தியப் படைக் கமாண்டோக்கள் ராஜாவின் வீட்டில் அதிகாலை ஐந்துமணிவரை தங்கியிருந்தார்கள்.
இந்த இராணுவ நடவடிக்கையை நெறிப்படுத்திக்கொண்டிருந்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவைப் பெறுவதற்காகவே அவர்கள் இவ்வாறு தாமதித்திருக்கலாம். பின்னர் மேலிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய அதிகாலை இந்தியப் படை கொமாண்டோக்கள் ராஜாவின் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள்.
பிரபாகரன் வீட்டிற்கு வழி காண்பிக்க தம்முடன் வருமாறு கூறி ராஜாவையும், அவரது மருமகன் குலேந்திரனையும் அழைத்துக்கொண்டு இந்தியப் படைக் கமாண்டோக்கள் புறப்பட்டார்கள்.
எத்தனையோ கெஞ்சியும் ராஜாவையும், குலேந்திரனையும் அவர்கள் விடவில்லை.
பிழையான வழிநடத்தல்?
இந்தியப் படையினரின் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் பற்றி பின்நாட்களில் புத்தகங்கள் எழுதிய லெப்.ஜெனரல். திபீந்தர் சிங், எம்.ஆர்.நாராயன்சுவாமி, ராஜேஸ் காடியன், போன்றவர்கள், அக்டோபர் 12ம் திகதி புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை அடையாளம் காண்பிக்கவென்று இந்தியப் படையினர் அழைத்துச் சென்ற நபர் இந்தியப் படையினரை பிழையான பாதையில் வழிநடத்திச் சென்றதாலேயே, இந்தியப் படையினரால் தமது இலக்கினை அடைய முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தமது தோல்விக்கும், இயலாமைக்கும் காரணம் கற்பிக்கவே இந்தியத் தரப்பினர் இவ்வாறு வீன்பழிபோடச் சந்தர்ப்பம் இருக்கின்றது. அதேவேளை, புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை காண்பிக்கவென்று ராஜா என்பவரை அழைத்துச் சென்ற இந்தியப் படையினரால் சரியான இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது. அத்தோடு, ராஜாவின் மருமகனான குலேந்திரன் 12ம் திகதி இந்தியப் படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றார். இவை அனைத்துமே, அந்த இரண்டு நபர்களும் தமது வரலாற்றுக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி இருப்பதற்கான சாத்தியத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
இரத்தப் பாதையில் இந்தியப் படைகள்:
ஆடுத்த சில நாட்களில் ஈழத்தமிழர் வரலாற்றில் மிகவும் துன்பகரமான ஒரு அத்தியாயம் இந்தியப் படையினரால் எழுதப்பட்டது. அது ஈழத்தமிழரின் இரத்தினாலேயே எழுதப்பட்டதுதான் இன்றும் பெரிய சோகம்.
புலிகளின் தலைவரைப் பிடிப்பதற்கென்று கூறி, தமது அடுத்த கட்ட நகர்வினை மேற்கொண்ட இந்தியக் கமாண்டோக்கள் சென்ற பாதை ஈழத்தமிழர்களின் இரத்தத்தால் நனைக்கப்பட்டதாகவே அமைந்திருந்தது. செல்லுமிடமெல்லாம் கொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்புக்களையும் மேற்கொண்டபடிதான் இந்தியப் படையினர் தமது அமைதிகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
தமக்கு பாதுகாப்பாக இருப்பார்கள், சிங்களப் படையினரிடம் இருந்து தம்மை காப்பாற்றுவார்கள், தமக்கு ஒரு நிரந்தரச் சமாதானச் சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பார்கள் என்றெல்லாம் ஈழத்தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப்படையினர், ஈழத்தமிழர்களை அழித்தொழிப்பதில் என்றுமில்லாதவகையில் முனைப்புக் காண்பித்தார்கள்.
புலிகளின் தலைவரைப் பிடிப்பதற்கென்று வந்திருந்த பராக் கொமாண்டோக்கள், தமது முயற்சி கைக்கூடாமல் போனதினால் ஏற்பட்ட ஆத்திரத்தை அப்பிரதேசத்தில் இருந்த அப்பாவித் தமிழ் மக்களின் மீது திருப்பியிருந்தார்கள். புலிகளின் பலத்தை எதிர்கொண்டு தமது நகர்வினைத் தொடர முடியாது தவித்துக்கொண்டிருந்த பராக் கொமாண்டோக்கள், தமக்கு உதவி வந்து சேரும் வரை அப்பிரதேசத்தில் ஒரு தளத்தை அமைத்து நிலைகொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த உதவியும் அவர்களை நோக்கி வர ஆரம்பித்திருந்தது. ஈழத்தமிழர்களின் உடல்களை நிலத்தில் கிடத்தி; அவற்றின் மீது கவசவாகனங்களை செலுத்தியே அந்த உதவிகள் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தன.