அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-36) – நிராஜ் டேவிட்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் சயனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, தமிழீழம் முழுவதும் மிக இறுக்கமான ஒரு சுழ்நிலை உருவானது.
துக்கம், கோபம், ஆவேசம், பயம் என்று பலவித உணர்வுகள் கலந்த நிலையில் தமிழ் மக்கள் காணப்பட்டார்கள்.
இந்த 12 போராளிகளின் மரணம் பற்றியும், அது தொடர்பான மற்றய நிகழ்வுகள் பற்றியும் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் திரு.அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், ‘சுதந்திர வேட்கை’ என்ற அவரது சுயசரிதையில் மிகவும் உணர்வு பூர்வமாக, அழகாக விபரித்திருந்தார். இந்தச் சம்பவம் நடைபெற்ற காலத்தில் அவர் யாழ்பாணம் வல்வெட்டித் துறையில் தங்கியிருந்தார். மரணமடைந்த குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களின் குடும்பங்களுடன் அன்னியோன்யமான நெருக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தச் சம்பவம் பற்றி அவர் தனது நூலில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
“விடுதலைப் புலிப் போராளிகளின் கூட்டுத் தற்கொலைச் செய்தி பொதுமக்களுக்கும், எனக்கும் அறிவிக்கப்பட்டது. ஒக்டோபர் 5ம் திகதி மாலையிலேயே வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலித் தளத்தில் இருந்து ‘வாக்கி ரோக்கி’ மூலம் செய்தி அறிவிக்கப்பட்டது. அழுத்தம் திருத்தமாக, ஆறுதலாக பெயர்கள் படிக்கப்பட்டன: ‘குமரப்பா போய்விட்டார்;…, புலேந்தி அம்மான் போய்விட்டார்…’ அதன் பின்னர் ஒவ்வொரு பெயராக, இந்த அவலத்தின் பெயர்ப்பட்டியல் முழுமையாகப் படிக்கப்பட்டது. எனது செவிகளையே நம்பமுடியாதவளாக விக்கித்துப் போய் உட்கார்ந்தேன். இது எப்படி நடந்திருக்கலாம்? இது உண்மையாக இருக்கமுடியாது. என்ன நடந்தது?
அதன் பின்னர் தூரத்தில் இருந்து ஓலம் ஒன்று சன்னமாகக் கேட்டது. எமது வீட்டில் இருந்து ஒரு கால் மைல் தூரத்தில் குமரப்பாவின் மனைவிக்குத் தகவல் தரப்பட்டிருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் இருந்து வருத்தமும், துயரமும் கலந்த உணர்ச்சி ஒப்பாரி ஓவென்று கேட்டது. இது இன்னொரு குடும்பத்திற்குத் தகவல்.
அதன் பின்னர் இன்னொன்றுளூ இன்னொன்றுளூ இப்படியே கிராமம் முழுவது ஒரே செத்த வீடாக ஒப்பாரி ஓலம் ஓங்கியது.
மறக்கமுடியாத மரணச் சடங்கு:
தமிழ்ச் சமுதாய மரபுப்படி, மக்கள் செத்த வீட்டுக்குப் போய் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவது மரபு. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த வல்வெட்டித்துறை போன்ற சிறிய கிராமத்தில் அது பொதுவான ஒன்று. மாவீரராகப் பலர் உயிர் நீத்து தேசிய வீரர்களாகிவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த மாவீரர்களின் தீரத்திற்கு வணக்கம் செலுத்தவும், அவர்களது குடும்பத்தினரோடு துயர் பகிரவும், எல்லோரும் விரும்பினார்கள். மறுநாள் காலை, வல்வெட்டித்துறையில் வாழ்ந்துகொண்டிருந்த மூத்த விடுதலைப் புலி போராளியான நடேசன் அவர்களுடைய மனைவி வனித்தாவுடன் மாவீரர்களாகிவிட்ட அனைவரது வீடுகளுக்கும் சென்றோம். வனிதா ஒரு சிங்களப் பெண்மணி. கிராம மக்களும் மாறிமாறி ஒவ்வொரு வீட்டுக்குப் போவதும், இந்தச் துயரமான சம்பவம் பற்றிக் கூடிப் பேசுவதுமாக இருந்தார்கள். ஆற்றாமை, துயரம் ஆகிய இரண்டு உணர்வுகளும் எங்கும் வியாபித்திருந்தன. ஆண்கள் கூடிக் கூடி கீழ் குரலில் உரையாடினார்கள். பெண்கள்- உறவினர்களும் சரி, சினேகிதர்களும் சரி, தரையில் இருந்து மார்பில் அடித்து ஒப்பாரி வைத்தார்கள். தங்கள் கூட்டுத் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பாலா வீடு திரும்பும்வரை காத்திருந்து குமரப்பாவின் இளம் மனைவி ரஜனியைப் பார்க்க மறுநாட் காலையிலேயே போனேன். ரஜனியைச் சந்திப்பதை நினைக்க எனக்கு உள்ளூர நடுக்கம். இந்த இளம் பெண்ணின் முகத்தை நான் எப்படித்தான் பார்க்கப்போகிறேனோ? என்ன கூறப் போகிறோம்? அவர் வீட்டுக்குப் போவதற்காக ஆடை மாற்றும் போது எனது வயிறு பிசைந்தது.
துயர் தோய்ந்து ஆடிப்போயிருந்த கிராமத்தின் ஊடாக, குமரப்பாவின் வீட்டிற்கு நடந்து சென்றோம். அங்கேதான் ரஜனி இருந்தார். வீட்டுக்கு அருகே வரும்போது, அதே பக்கமாக ஊர்ந்துகொண்டிருக்கும் சனத்திரளில் நாமும் அங்கமானோம். வீட்டுக்கு அருகே செல்லச்செல்ல ஒப்பாரியும் பலத்து ஒலித்தது. குமரப்பாவின் வீட்டுக்குள் செல்லும் வாயிலில் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றார்கள். ஆனாலும் நாம் உள்ளே செல்வதற்காக பிரிந்து வழிவிட்டார்கள்.
ரஜனி நாராய் கிழிந்து கிடந்தார். துயரத்தால் உருக்குலைந்திருந்தார். பிதற்றிக்கொண்டிருந்தார். தமது துயரத்தை எங்கே எவ்வாறு போக்குவது என்று வகையறியாது தவித்துக்கொண்டிருந்தார். முன் வாயிலுக்கு சில யார் தூரத்தில் எம்மைக் கண்டதும் பிய்த்தெறிந்து என்னிடம் பாய்ந்து வந்தார். என்னைக் கட்டி அணைத்து வேலியோடு சாய்ந்து, நெஞ்ச அவலத்தோடு ஓலமிட்டார். ‘அன்ரி, அன்ரி என்ரை அவர்.. என்ரை அவர்..’ என்று கதறினார். எனது தோழில் சாய்ந்தவராக ஆற்றமுடியாதவராக விம்மினார். அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றேன். எண்ணுக்கணக்கற்ற சொந்தக்காரப் பெண்கள் தரையில் அமர்ந்திருந்தார்கள். ரஜனியோடும், குமரப்பா குடும்பத்தோடும் துயர் பகிர்ந்து, ஆறுதல் கூற அங்கே எல்லோரும் கூடியிருந்தார்கள்.
ரஜனியின் வீட்டில் துயர் பகிர்வதோடு செத்தவீட்டுச் சடங்கு முடியவில்லை. பிரதான ஈமச் சடங்குகள் மறுநாள் மாலை நடைபெற இருந்தன.
கிராமத்தின் விளையாட்டு மைதானத்தில், ஒரு பெரிய பொதுவான இறுதிச் சடங்காக நடத்த ஏற்பாடாகி இருந்தது.
பலியாகிவிட்ட விடுதலைப் புலி மாவீரர்களுக்கு ஒரு தேசிய பிரியாவிடை வீர வணக்கம் செலுத்த ஏற்பாடாகிக் கொண்டிருந்த அதேசமயம், மீட்கப்பட்ட மாவீரரின் உடலங்கள் இறுதி இராக் காவலுக்காக அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
வல்வெட்டித்துறை மைதானம் சனத்திரளால் நிரம்பி வழிந்தது. வீழ்ந்து பட்ட பன்னிரெண்டு மாவீரர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டிருந்தார்கள். துயரக் கனதி எங்கும் வியாபித்திருந்தது. திறந்திருந்த உடலப் பேளைகளைக் கடந்து மக்கள் மரியாதையுடன் வரிசையாக நடந்தார்கள். தமக்குத் தெரிந்த வீரரின் காலடியில் நின்று சிலர் விம்மினார்கள். ரஜனியும், புலேந்திரனின் மனைவி சுபாவும் அலறியடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உறவினர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தியபடி நின்றார்கள். கரனின் மனைவி குகாவும், அவருடைய இரண்டு பிள்ளைகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். விம்மலும் ஓலமும், ஒப்பாரியும், ஒவ்வொரு திக்கிலும் கேட்டன. கவிதை, பாடல் இரங்கல் உரை என்று புகழாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிபரப்பிகளை நிறைத்தன. இன்னும் சில நாட்களில் இந்தியப்படையுடன் நடைபெற இருந்த சமரில் உயிர்துறக்க இருந்த சந்தோசமும் புலிகள் சார்பில் அன்று உரை நிகழ்த்தியவர்களில் முக்கியமான ஒருவர்.
விசுவாசிகளுக்கு வீரவணக்கம்:
கனத்த இதயங்களோடும், சுரத்தே இல்லாதவர்களுமாக பிரபாகரன் அவர்களும், ஏனைய விடுதலைப் புலித் தலைமை உறுப்பினர்களும் உடல் பேழைகளை மெதுவாகக் கடந்து சென்றார்கள். கடந்துபோன ஆண்டுகளில் பிரபாகரன் அவர்களைப் பின்பற்றிய மிகுந்த விசுவாசமும், நம்பிக்கையும் உடைய சில மூத்த விடுதலைப் புலிப் போராளிகளினுடைய உடல் பேழைகளைக் கடக்கும் போது கால்கள் தயங்கின, பழைய நினைவுகள் சுரந்து வந்தன.
பிரபாகரன் அவர்கள் அங்கிருந்து அகன்றதும், தீ மூட்டுவதற்கு முன்னதாக, தமிழ் மரபுப்படி, அந்தக் களத்தில் இருந்த ரஜனியும், சுபாவும், குகாவும் அகற்றப்பட்டார்கள். ஒவ்வொன்றாக, மிகக் கண்ணியமாக ஒரு வரிசையில் சுமந்து செல்லப்பட்ட உடல் பேழைகள் அடுக்கப்பட்ட சிதைகளில் வைக்கப்பட்டன. இராணுவ மரியாதை வேட்டுக்கள் காற்றில் கலந்த பின்னர் சிதைகளுக்கு தீ மூட்டப்பட்டது.
உப்பிய கரும் புகைத் திரள் வானை ஊடறுத்ததுளூ மக்கள் விறைத்து நின்றார்கள்ளூ பொருமல் ஒலி அந்தப் பெருங்கூட்டத்தில் இருந்து விம்மலாக எகிறியது. எல்லாமே ஒரு கோரக் கனவாகத் தோன்றியது.
ஏன் இது நேர்ந்தது? இத்தனை தொகை மக்களின் இதயங்கள் ஏன் சீலம் சீலமாகக் கிழிந்தன? இத்தனை பேரிழப்பையும், துயரத்தையும் அடைய மக்கள் அப்படி என்ன கொடுமை புரிந்தார்கள்? போரோய்வு ஒன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் போது மக்கள் இத்தனை துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டமையும், போராட்டம் இத்தகைய சோதனைக்கு உட்பட்டமையும் இயல்புக்கு மாறான புதிரல்லவா?
திலீபன் பலியானதை உடனடுத்து இப்படி ஒரு பேரிடர் நேர்ந்தமை, மக்களை வகையறாத் திகைப்புக்கு உள்ளாக்கியது. பொதுமக்கள் பார்வையில் இந்திய அமைதிப்படையும்,, புதுடில்லி நிர்வாகிகளும் சாயம் வெழுத்து நின்றார்கள். கொழும்பு மீதிருந்த அவநம்பிக்கையும் அதிகரித்தது. காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை என்றுமே பூரண குணம் காணும் என்று எனக்குப் படவில்லை||.
இவ்வாறு திருமதி அடல் பாலசிங்கம் தனது புத்தகத்தில் தனது அனுபவங்களை உணர்ச்சிகளாகக் கொட்டியிருந்தார்.
ஈழ மக்கள் எதிர்கொண்ட பல துயரச் சம்பவங்களுள் இந்தச் சம்பவமும் ஒன்று என்பது உண்மையானாலும், ஈழத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைந்த சம்பவம் இது என்பதால், இந்தச் சம்பவத்தின் பரிமானத்தை வாசகர்களுக்கு சற்று அழுத்தமாக ஞாபகப்படுத்தவே இங்கு இந்தச் சம்பவத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்;தேன்.
இந்தச் சம்பவம் பற்றிய உண்மையான உணர்வினை வெளிப்படுத்த, திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுடைய வரிகளை விட சிறந்த எழுத்துக்கள் வேறு எதுவுமே இல்லை என்பதனால்தான், அவரது அனுபவ வரிகளை அப்படியே இங்கு தந்திருந்தேன்.
இந்த தேசிய துயரச் சம்பவத்தின் துரதிஷ்டவசமான வெளிப்பாடக இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்.