அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-35) – நிராஜ் டேவிட்
கைது செய்யப்பட்டிருந்த 17 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இந்தியப்படையினர் அதுவரை வழங்கிவந்த பாதுகாப்பை உடனடியாக விலக்கி;கொள்ளுமாறு புது டில்லி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தியப் படை ஜவான்கள் அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தார்கள்.
புலி உறுப்பினர்களின் பாதுகாப்பைப் பொறுப்பேற்ற ஸ்ரீலங்காப் படையினர், அவர்களை உடனடியாகக் கொழும்புக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
விமானத்தை தயார் நிலையில் வைத்துவிட்டு, புலி உறுப்பினர்களை அழைத்துச் செல்ல விரைந்த ஸ்ரீலங்காப் படை உயரதிகாரி பிரிகேடியர் ஜயரெட்னவிற்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. கைதுசெய்யப்பட்டிருந்த 17 புலி உறுப்பினர்களும் தமது கைகளில் ‘சயனைட்| குப்பிகளை வைத்திருந்தார்கள். தாம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால், தாம் ‘சயனைட்டை| உட்கொள்ளப்போவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
பிரிகேடியருக்கு இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஷபுலிகளின் கைகளில் திடீரென்று எங்கிருந்து ஷசயனைட்| குப்பிகள் முளைத்தன என்பது பிரிகேடியருக்கு புரியாமல் இருந்தது.
புலி உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், ஷசயனைட்டுக்கள்| என்பன படையினரால் அகற்றப்பட்டிருந்தன. அப்படி இருக்க தற்பொழுது புலிகள் எங்கிருந்த இந்த சயனைட்டுக்களைப் பெற்றிருந்தார்கள் என்பது, இலங்கைப் படை அதிகாரிக்கு விடை காண முடியாத கேள்வியாகவே இருந்தது.
பிரபாகரன் கொடுத்த சயனைட்
இந்தப் போரளிகளுக்கான ‘சயனைட்| குப்பிகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களே அனுப்பிவைத்திருந்தார்.
தாம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, எதிரியினால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதை விட, புலிகளின் மரபுப்படி தமது உயிரை தாமே மாய்த்துக் கொள்ள அனுமதிக்குமாறு, கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த 17 விடுதலைப் புலி உறுப்பிர்களும்; புலிகளின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். தமது விருப்பத்தை கடிதங்கள் மூலம் பிரபாகரன் அவர்களிடம் அனுப்பிவைத்திருந்தார்கள். அன்டன் பாலசிங்கம் கொண்டுவந்திருந்த அவர்களது கடிதங்களைப் படித்த புலிகளின் தலைவர் பெரும் சினம் கொண்டார்.
தடுப்புக் காவலில் உள்ள தமது போராளிகளின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவது தனது கடமை என்று அவர் உணர்ந்தார்.
முக்கிய தளபதிகளுடன் கலந்தாலேசித்துவிட்டு ஒரு முடிவிற்கு வந்தார்.
தனது கழுத்தில் இருந்த ‘சயனைட்| குப்பியைக் களட்டி மாத்தையாவிடம் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து அங்கு இருந்த மற்றய தளபதிகளும் தங்கள் கழுத்தில் இருந்த சயனைட் குப்பிகளை களட்டிக் கொடுத்தார்கள். கனத்த மனங்களுடனேயே அவர்கள் இதனைச் செய்தார்கள்.
அந்த ‘சயனைட்| குப்பிகளை, மாத்தையாவும், அன்டன் பாலசிங்கமும் தமது கழுத்துக்களில் மாட்டிக்கொண்டு, கைதுசெய்யப்பட்டிருந்த 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சந்திக்கப் புறப்பட்டார்கள். தயக்கத்தோடும், மனமின்றியும் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.
கைது செய்யப்பட்ட நிலையில் இருந்த புலி உறுப்பினர்களைச் சந்தித்த அவர்கள் ஷசயனைட்டுக்களை| இரகசியமாக ஒப்படைத்தார்கள்.
குமரப்பா தனது மனைவிக்கு கூறும்படி சில செய்திகளை தெரிவித்தார்.
குமரப்பா திருமணம் முடித்த ஒரு மாதமே ஆகியிருந்தது.
புலேந்திரனும் தனது மனைவிக்கு சில செய்திகளை தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.
திருமணமாகி இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு தந்தையாகி இருந்த கரன், தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஆவலை வெளியிட்டார்.
அன்டன் பாலசிங்கமும், மாத்தையாவும் அந்த 17 போராளிகளையும் விட்டுப் பிரிய மனமில்லாது, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
சோகமயமான அக்டோபர் 5:
1987ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதி, ஸ்ரீலங்காப் படை அதிகாரி பிரிகேடியர் ஜெயரெட்ன, பலாலி தளத்தில் இருந்த தனது படைவீரர்களை திரட்டினார். அவர்களுள் நல்ல திடகாத்திரமாக இருந்த 34 படைவீரர்களை அவர் தேர்ந்தெடுத்தார்.
புலிகள் ‘சயனைட்| உட்கொள்வதைத் தடுப்பதே அவரது நோக்கமாக இருந்தது. தேர்ந்தெடுத்த 34 படைவீரர்களுக்கும் கடுமையான உத்தரவுகளை வழங்கினார்.
இரண்டு இராணுவ வீரர்கள் – ஒரு புலிப் போராளியை சமாளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்களை வகுத்தார்.
‘சயனைட்| பற்றியும், அதனை எவ்வாறு புலிகள் உட்கொள்வார்கள் என்றும், அதனை எப்படித் தடுப்பது என்பது பற்றியும் விளக்கம் அளித்தார்.
புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையினுள், எந்த வாசல் வழியாக உள்நுழைவது, யார்யார் எவ்வாறு நடந்துகொள்வது, ஒவ்வவொரு படைவீரரும் எந்தெந்த புலி உறுப்பினரை கைப்பற்றுவது என்றெல்லாம் திட்டம் தீட்டப்பட்டது. ஓரிரு முறை ஒத்திகையும் பார்க்கப்பட்டது.
புலிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகே சகல வசதிகளுடனும் கூடிய மூன்று முதலுதவிக் கூடங்கள் அவசரஅவசரமாக அமைக்கப்பட்டன. திறமையான வைத்திய நிபுணர்கள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டார்கள். அம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. உட்கொண்ட நஞ்சை வயிற்றில் இருந்து வெளியேற்றத் தேவையான பம்புக்கள், உபகரனங்கள், மருந்துகள் சகலமும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
கடைசியில் படையினர் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
திடீரென்று புலிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையினுள் பல முனைகளில் இருந்தும் பாய்ச்சல் நடத்தினார்கள்.
ஆனால் அதேவேளை புலி உறுப்பினர்கள் 17 பேரும் சயனைட்டை உட்கொண்டு விட்டிருந்தார்கள்.
புலேந்திரன், குமரப்பா உட்பட ஒன்பது போரளிகள் அந்த இடத்திலேயே மரணம் அடைந்திருந்தார்கள். நான்கு போராளிகள் வைத்திய முகாமில் மரணம் அடைந்தார்கள். மிகுந்த போராட்டத்தின் பின்னர் நால்வரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது.
விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் மட்டுமல்ல, ஸ்ரீலங்காவின் சரித்திரத்திலும், ஏன் இந்தியாவின் சரித்திரத்திலும் கூட மிகவும் மோசமான விழைவுகளை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக இந்தச் சம்பவம் அமைந்திருந்தது.
இந்தியா ஈழத்தமிழர்களைக் காப்பாற்றும் என்பதில் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் இந்தச் சம்பவம் சிதறடித்தது.
எந்த ஒரு நிர்ப்பந்தங்களுக்கும் இனிப் பணிந்து பயனில்லை என்று, இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளை எண்ணவைத்தது.
தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு சோகத்தைத் தந்த ஸ்ரீலங்காவிற்கும், அதற்கு ஆசீர்வாதம் வழங்கியிருந்த இந்தியாவிற்கும் ஒரு பாடத்தைப் படிப்பிக்கவேண்டும் என்று புலிகளை நினைக்கவைத்தது.
ஸ்ரீலங்கையின் வரலாற்றிலும், இந்தியாவின் வரலாற்றிலும், தமிழ் மக்களின் வரலாற்றிலும் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள் அடுத்த சில நாட்களில் இடம்பெற ஆரம்பித்தன.