அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-33) – நிராஜ் டேவிட்
குமரப்பா வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் அயர்லாந்து நாட்டில் கடற்-பொறியில் கற்கைகளை மேற்கொண்டவர். ஐரோப்பா முழுவதும் வலம்வந்தவர். மேற்குலக நாடொன்றிலேயே நிரந்தர வதிவிட வசதி பெற்று தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் பலவற்றை பெற்றிருந்தவர்.
70களில் ஈழ விடுதலை தொடர்பான சிந்தனைகளை தனதாகக் கொண்டு செயற்பட ஆரம்பித்திருந்த குமரப்பா, 1983ம் ஆண்டு இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து, ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.
இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு யாழ்பாணம் வந்தடைந்த குமரப்பா, மட்டக்களப்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறை மற்றும் படுவான்கரை பிரதேசத்தில்; தங்கியிருந்து, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருந்தார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த ரஜனி என்பவரை காதலித்து மணம் முடித்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொர்ந்து யாழ்ப்பாணத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு முதற் சாட்சியாக அன்டன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருந்திருந்தார். இவரது திருமணச் சடங்கில் பல இந்தியப் படை உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குமரப்பாவின் திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் புலேந்திரனின் திருமணம் நடைபெற்றிருந்தது.
தமிழ் நாடு திருப்போரூர் முருகன் கோவிலில் சுபா என்ற பெண்ணை அவர் மணம் முடித்திருந்தார். (இந்த ‘தமிழ் நாடு திருப்போரூர் முருகன் கோவிலில்தான்| விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும், மதிவதனி அவர்களுக்கும் 01.10.1984 அன்று திருமணம் நடைபெற்றது.)
இந்த இரண்டு தளபதிகளுமே திருமணம் முடித்து இரண்டு மாதங்களைக்கூட கடந்துவிடாத நிலையில், இப்படியான ஒரு சோதனையைச் சந்தித்திருந்தார்கள்.
குமரப்பா புலேந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சந்திக்க, புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் புறப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் இரண்டு தளபதிகளும் இந்தியப் படை அதிகாரிகளுக்கு நன்கு பரிட்சயமானவர்கள் என்பதால், உடனடியாக அவர்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் இடம்பெற்றுவிடச் சந்தர்ப்பம் எதுவும் இல்லை என்ற எண்ணத்துடன், ஓரளவு அசுவாசப்பட்ட மனதுடன்தான் அவர்களைப் பார்க்க திரு அன்டன் பாலசிங்கம் புறப்பட்டார்.
ஆனால் நிலமை நினைத்த அளவிற்கு சுமுகமாக இல்லை என்பதை அங்கு அவர் சென்றதும் உணர்ந்துகொண்டார்.
துப்பாக்கிகளை நீட்டியபடி சிங்கள இராணுவம் மூர்க்கமாகச் சூழ்ந்து நிற்க, விடுதலைப் புலிகள் அமைப்பின் மறவர்கள் குற்றவாளிகள் போன்று வைக்கப்பட்டிருந்தது, திரு அன்டன் பாலசிங்கத்தை மிகவும் கலவரப்படுத்தியிருந்தது.
விடுதலைப் புலிப் போராளிகளை ஷவிசாரணைக்காக| உடனடியாக கொழும்புக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்ற ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவு பற்றி, பாலசிங்கத்திற்கு எடுத்துக் கூறப்பட்டது.
மிகவும் சினமடைந்த பாலசிங்கம், இது பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறிவித்தார்.
புலிகளின் தலைவரது ஆலோசனையின் பெயரில் அவர் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித்தைத் தொடர்பு கொண்டு, ‘தீட்ஷித் தனது இராஜதந்திர வல்லாண்மையைப் பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டிருக்கும் 17 போராளிகளையும் விடுதலை செய்யவேண்டும்| என்று கோரிக்கை விடுத்தார்.
“எமது போராளிகளில் சிலர் மூத்த தளபதிகளாகவும், போர்கள நாயகர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரும் பட்சத்தில், விளைவுகள் விபரீதமாக இருக்கும்|| என்றும் தீட்ஷித்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
போராளிகளை விடுவிக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக, தீட்ஷித் பாலசிங்கம் அவர்களுக்கு உறுதிமொழி அளித்தார்.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் விசாரணைகள்:
‘விசாரணை| செய்வதற்காகவே விடுதலைப் புலி உறுப்பினர்களை தாம் கொழும்புக்குக் கொண்டு செல்லப்போவதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்திருந்தது.
ஸ்ரீலங்கா அரசின் பாஷையில் ‘விசாரணை| என்ற வார்த்தைக்கு, ‘சித்திரவதை| என்றுதான் அர்த்தம்.
ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் நேரடி கண்காணிப்பில் செயற்பட்டு வந்த ஸ்ரீலங்காவின் புலனாய்வுப் பிரிவினரின் சித்திரவதைகள் அக்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம்.
வகைவகையான சித்திரவதை முறைகளை, நுணுக்கமாக மேற்கொள்ளுவதில் ஸ்ரீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் கைதேர்ந்தவர்கள்.
ஸ்ரீலங்காப் புலனாய்வு பிரிவினர் அக்காலங்களில் தமிழ் இளைஞர்கள் மீது மேற்கொண்டிருந்த சித்திரவதை விசாரணை முறைகள் பற்றி எழுதுவதானால், இன்றும் ஐந்து அத்தியாயங்கள் அதற்கென தனியாக ஒதுக்கவேண்டும்.
கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து, விசாரித்து, அவர்களை தொலைக் காட்சியின் முன்பு தோன்றச் செய்து, தமிழ் இயக்கங்கள் பற்றிய மாற்றுக் கருத்துக்களை அவர்கள் வாயாலேயே கூறவைக்கும் நடைமுறையை அக்காலத்தில் ஸ்ரீலங்காப் படையினர் கடைப்பிடித்து வந்தார்கள். மிகவும் மோசமான சித்திரவதையை அனுபவித்த தமிழ் இளைஞர்கள், வலி தாங்க முடியாமல், ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவனர் கூறுவதையெல்லாம் தொலைக்காட்சி முன்பு ஒப்புவிப்பார்கள். இந்த தொலைக் காட்சி ஒலிப்பதிவு பின்னர் ரூபவாகினி ஊடாக காண்பிக்கப்படும்.
தமிழ் இயக்கங்களுக்கு எதிரான பிரச்சாரமாகவும், சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனும், இதுபோன்ற தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்தி வந்தது.
கைதுசெய்யப்பட்ட 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைத்துச் செல்ல லலித் அதுலத்முதலி விரும்பியதற்கு இதுவே பிரதான காரணம். விசாரணை என்ற பெயரில் இந்தப் போராளிகளைச் சித்தரவதை செய்து, தொலைக்காட்சி முன்பு அவர்களை நிறுத்தி, புலிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய எதையாவது அவர்கள் வாயால் கூறவைப்பதே, அதுலத் முதலியின் நோக்கமாக இருந்தது.
கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களும் இதனை நன்கு உணர்ந்திருந்தார்கள்.
தம்மைச் சந்திக்க வந்த அன்டன் பாலசிங்கம் அவர்களிடம் தமது தீர்மாணத்தைத் தெரிவித்தார்கள். பலவிதமான விவாதங்களின் பின்னர், தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அன்டன் பாலசிங்கம் ஊடாக அவர்கள் சில கடிதங்களை அனுப்பிவைத்தார்கள்.
போராளிகள் அனுப்பிவைத்த கடிதங்கள்:
அவர்களது கடிதங்களைப் படித்த தலைவர் வே.பிரபாகரன் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.
கடுஞ் சீற்றமும் கொண்டார்.
ஏகமனதாகவும், இரகசியமாகவும் அந்தப் போராளிகள் எடுத்துக்கொண்டிருந்த முடிவை, அவர்களது கடிதங்கள் புலிகளின் தலவருக்கு எடுத்துக் கூறியிருந்தன.
‘விசாரணை என்ற போர்வையில் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கும், அனேகமாக மரணத்திற்கும், சிங்கள அரசால் தாம் உள்ளாக்கப்படுவதைக் காட்டிலும், விடுதலைப் புலிகளின் மரபுப்படி தமது உயிரை தாமே மாய்த்துக்கொள்ள தாம் விரும்புவதாக| புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அந்தக் கடிதங்களின் மூலம் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஷசிங்கள இனவாத அரசின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்துகொடுத்தால், அது தங்கள் எதிரிக்கு எதிராக நடாத்தும் தற்காப்புப் போரின் நீண்ட, உறுதியான வரலாற்றைக் கறைபடுத்திவிடும் என்றும், அதற்கு நேரெதிராக, கௌரவமான மரணத்தைத் தழுவத் தாம் விரும்புவதாகவும், அக்கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
சயனைட் குப்பிகளை அனுப்பி வைக்கும்படியும், அக்கடிதத்தில் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்…