அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-14) – நிராஜ் டேவிட்
ஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர புலிகளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. புலிகள்
தமது ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில், புலிகளிடம் இருந்து பலவந்தமாக ஆயுதங்களை களையவும் இந்தியப்படைகள் தயாராக இருந்தன.
அதனால் தமது உயிரிலும் மேலாக புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு புலிகள் முன்வந்திருந்தார்கள்.
ஆயுத ஒப்படைப்பு தினம், 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி என்று தீர்மாணிக்கப்பட்டிருந்தது. பாலாலி விமானப்படைத்தளத்தில் முதலாவது ஆயுத ஒப்படைப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆயுத ஒப்படைப்பு மிகவும் சுமுகமாக ஆரம்பமானது. ஸ்ரீலங்காவின் அரச பிரதிநிதிகளாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல, ஸ்ரீலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க, ஸ்ரீலங்கா இராணுவத்தின் வடபிராந்திய தளபதி பிரிகேடியர் ஜெரி.டி.சில்வா போன்றோர் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் பல உயரதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள்.
இந்திய அமைதிகாக்கும் படைகள் சார்பாக, ஜெனரல் திபீந்தர் சிங் (OFC, IPKF), மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் (GOC, 54 Division, IPKF), பிரிகேடியர் பெர்ணான்டஸ் (Pacification Specialist, IPKF) உட்பட மேலும் பல இராணுவ உயரதிகாரிகளும் சமுகம் அளித்திருந்தார்கள்.
புலிகளின் ஆயுத ஒப்படைப்பை தமது ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக மாற்றிவிடும்; ஆர்வத்திலும், வேகத்திலும், உள்ளுர் மற்றும் வெளியூர் ஊடகவியலாளர்கள் பலர் அங்கு திரண்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்பட இருந்த ஆயுதங்களை ஏற்றியபடி புலிகளின் ஷபிக்கப்| வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பலாலி விமானப்படைத் தளத்தை நோக்கி வந்தன. தமிழீழ இலக்கத் தகடுகளுடனும், புலிக் கொடிகளைப் பறக்கவிட்டபடியும், புலிகளது வாகனங்கள் அணிவகுத்து வந்த காட்சி, அங்கு திரண்டிருந்த அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டது.
விடுதலைப் புலிகளின் சார்ப்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகி, ஆயுத கையளிப்பின் அடையாளமாக, ஒரு கைத்துப்பாக்கியை, ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமது ‘பிக்கப்| வாகனங்களில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கி அணிவகுத்து வந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக ஒப்படைத்தார்கள்.
ஆயுத ஒப்படைப்பைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல, ஸ்ரீலங்கா சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து, அவர்களை விடுதலை செய்வதற்கான, ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அறிவித்தலை பகிரங்கமாக வெளியிட்டார்.
சேபால ஆட்டிக்கல கூறும்போது, “…ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இன்றைய தினம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும். இரத்தம் சிந்துதல் மற்றும் வன்முறை போன்றனவற்றால் எமது ஜனநாயக சமுகம் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வந்ததை, இந்த ஆயுத ஒப்படைப்பு இன்று முடிவிற்குக் கொண்டுவந்துள்ளது. இன்றய தினத்தில் இருந்து, இலங்கையர்களாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய சொந்த நாட்டில் சமாதானமாகவும், நல்லினக்கத்துடனும் வாழுவோம் என்று நான் உண்மையாகவே எண்ணுகின்றேன்…|| என்று குறிப்பிட்டார்.
சுவாரஸ்யமான நிகழ்வுகள்:
மிகவும் சுமுகமாக நடைபெற்று முடிந்த இந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வுகளின் போது, ஒருசில சுவாரசியமான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன:
புலிகள் சார்பாக முதன்முதலில் ஆயுதத்தை ஒப்படைத்த யோகி, மிகவும் கவலை அடைந்த மன நிலையுடன், ஏனோதானோ என்று நடந்துகொண்டார். மிகவும் வேகமாக அவர் தனது கைத்துப்பாக்கியை சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்து விட்டதால், அவர் ஆயுதத்தை ஒப்படைக்கும் காட்சியை தமது கமராக்களில் படம் பிடித்துக்கொள்ளுவதற்கு, புகைப்படப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் தவறிவிட்டார்கள். எனவே, மீண்டும் ஒரு தடவை ஆயுத கையளிப்பை மேற்கொள்ளும்படி அவர்கள் யோகியிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் யோகியோ அதற்கு ஒரேயடியாக மறுத்துவிட்டார்.
மறுபடியும் அடையாள ஆயுதக் கையளிப்புக் காட்சியை நடாத்துவதற்கு சேபால ஆட்டிக்கல தயாராக இருந்த போதிலும், யோகி அதற்கு உடன்பட உறுதியாக மறுத்துவிட்டார். இதனால், ஆயுதக் கையளிப்பை பதிவு செய்வதற்கு படப்பிடிப்பாளர்களால் முடியவில்லை.
யோகியால் கையளிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, அங்கிருந்த மேசை ஒன்றின் மீது வைக்கப்பட, அதன் மீது சேபால ஆட்டிக்கல தனது கைவைத்தபடி புகைப்படங்களுக்கு காட்சி தந்தார். இந்தப் படங்களே பின்னர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி இருந்தன.
புலிகளின் ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக, யோகியால் ஒப்படைக்கபட்டிருந்த கைத்துப்பாக்கியை, ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆரிடம் கையளிக்க வேண்டும் என்று கூறிய சேபால ஆட்டிக்கல, அதனை தன்னுடன் எடுத்துச் சென்றார்.
ஆயுத ஒப்படைப்பு நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு என்று கூறி, ஒரு தொகுதி இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை, இந்தியா தனது விமானங்களின் முலம் யாழ்பாணத்திற்கு அழைத்து வந்திருந்தது. கடவுச் சீட்டுக்களோ, விசாக்களோ|, ஸ்ரீலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியோகூட இல்லாமல், இவ்வாறு அழைத்துவரைப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள், ஆயுதக் கையளிப்பு நடைபெற்ற கட்டிடத்தில் முன்னுரிமை கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
இலங்கை ஊடகவியலாளர்கள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருக்கையில், இந்தியாவின் தூரதர்ஷன் உட்பட, இந்தியாவில் இருந்து விஷேட விமானத்தில் வந்த ஊடகவியலாளர்களுக்கு, நிகழ்வுகளை பதிவுசெய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விஷேட விமானத்தில் பலாலியில் வந்திறங்கியிருந்த ஊடகவியலாளர்கள், பலாலி விமானத்தளத்தின் அனைத்து இராணுவ நிலைகளையும் பார்வையிடவும், வீடியோ படம் பிடிக்கவும் அனுமதிக்கப்பட்டார்கள். அது, ஸ்ரீலங்கா பாதுகாப்பு படை அதிகாரிகளின் முனுமுனுப்புக்கு இலக்கானது. ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், இந்திய ஷறோ| உளவாளிகளும் அங்கு வந்துள்ளதாக, ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப்படை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தார்கள்.
இந்திய அதிகாரிகள், புலிகளுடனும், ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளுடனும்;, ஊடகவியலாளர்களுடனும் புலிகளது ஆயுத ஒப்படைப்பு பற்றி பேசும் போது, Surrender’ (சரணாகதி) என்ற வார்த்தைப் பிரயோகத்தை பாவிக்காது தவிர்த்துக்கொண்டார்கள். ‘ஆயுதக் கையளிப்பு|, ‘ஆயுத ஒப்படைப்பு| (Arms Handing over) என்றுதான் குறிப்பிட்டார்கள்.
புலிகளும், தாங்கள் ஆயுதங்களை கைவிட்டதாகவோ அல்லது தாம் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டதாகவே (Lay down) எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவேயில்லை.