உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-2) – நிராஜ் டேவிட்

0

புலம்பெயர் தமிழரைக் குறிவைத்து தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட இருக்கின்ற மிகப் பெரிய உளவியல் யுத்தங்களை எதிர்கொள்வதற்கு உலகத் தமிழினம் தயாராக இருக்கின்றதா?
என்னிடம் யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டால், சிறிது நேரம் யோசித்துவிட்டு ‘இல்லை’ என்றுதான் பதில் கூறுவேன்.
ஏனென்றால், எம்மில் அனேகருக்கு இந்த உளவியல் நடவடிக்கை என்கின்ற விடயம் பற்றிய தெளிவு சரியாக இல்லை. நான் பேசிய பல தமிழ் ஊடகவியலாளர்கள், பல ஊடக நிறுவனங்களை நடாத்துபவர்கள், சமூகத் தலைவர்கள் இந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றிய அறிவையும், தெளிவையும் கொண்டிராதவர்களாகவே இருக்கின்றார்கள்.
இன்றைய நவீன உலகைப் பொறுத்தவரையில் ; psychological operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகளை ஊடகங்களைப் பாவித்துதான் உலகின் பெரும் சக்திகளான அமெரிக்கா முதற்கொண்டு தமிழர்களின் எதிரிகளான சிறிலங்கா இந்தியா போன்றதேசங்கள் வரை மேற்கொண்டு வருகின்றன.
எனவே ஈழத் தமிழரது ஊடகங்கள் உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற விடயம் பற்றி அதிக கவனத்தை தமதாகக் கொண்டிருப்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது.


உளவியல் நடவடிக்கைகள் அல்லது உளவியல் போர் என்கின்ற விடயத்தில் பல அங்கங்கள், வகைகள் இருந்தாலும் முக்கியமான இரண்டு வகையான உளவியல் போர்கள்தாம் உலகத் தமிழரைக் குறிவைத்து தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு வகையான உளவியல் போர்கள் பற்றித்தாம் நாங்கள் தற்பொழுது அதிக அக்கறையைச் செலுத்தவேண்டிய நிலையிலும் இருந்துகொண்டிருக்கின்றோம்.
1. தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவது. (உள்ளூர் பாஷையில் கூறுவதானால்: ‘தமிழர்களைப் பப்பாசி மரத்தில் ஏற்றிவிட்டு, அடி மரத்தை வெட்டிவிடுவது…’)
2. தமிழ் மக்களின் உளவியலை ஒருவித அச்ச நிலைக்குக் கொண்டு சென்று, அந்த அச்ச நிலையில் பலவிதமான தடுமாற்றங்களை அவர்களுக்கு ஏற்படுத்தி, ஒரு பலவீனமான, விரக்தியான மனநிலையில் அவர்களை வைத்திருப்பது.
இந்த இரண்டு வகையான உளவியல் நடவடிக்கைகள் பற்றித்தான் நாம் முதலில் ஆராய இருக்கின்றோம்.
2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ 3 நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானியா வந்திருந்தார். அந்த நேரத்தில் செஞ்சோலைப் பாடசாலை மாணவிகள் படுகொலை, கொழும்பில் தமிழர்கள் கடத்தல், யாழ்குடாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் என்று மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர் தமிழர்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள்.
பிரித்தானியா வந்த மகிந்தவை பீ.பீ.சி உட்பட சர்வதேச ஊடகங்கள் செவ்வி கண்டன. விடுதலைப் புலிகளே சமாதானத்தை முறித்து யுத்தத்தை ஆரம்பித்தாகத் தெரிவித்த மகிந்த வேறு வழியில்லாமல் தாம் பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வந்ததாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை மிகவும் கொடுரமான பயங்கரவாதிகளாக வர்ணித்த அவர், ஒரு விடயத்தை மாத்திரம் நேரடியாகவே ஒப்புக்கொண்டிருந்தார். அதாவது வெளிநாடுகளில், குறிப்பாக மேற்குலக நாடுகளில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை சீரமைப்பதிலும், சிறப்பானதொரு ஊடக வலையமைப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்வதிலும் அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுவருகின்றதை அவர் தனது செவ்விகளில் ஒப்புக்கொண்டிருந்தார். புலம்பெயர் மக்களைத் திரட்டி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதிலும் புலிகள் அமைப்பின் வெளிநாட்டுப் பிரிவினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும் மறைமுகமாகப் பாராட்டி இருந்தார். சர்வதேச சமூகத்தைக் குறிவைத்த பிரச்சார விடயத்தில், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்கள் சரியாகச் செயற்படத் தவறி இருந்தன என்று குற்றம் சுமத்திய மகிந்த, இந்த விடயத்தில் வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல் பாரிய வெற்றி பெற்றுவருவதாகத் தெரிவித்திருந்தார்.
அடுத்த வருடமும் மகிந்த பிரித்தானியா வந்திருந்தார்.
பிரித்தானிய கடற்படைத் தளபதி Admiral Jonathan Band இனது அழைப்பின் பெயரில் Dartmouth இல் உள்ள Britannia Royal Naval College இல் 13.12.2007 இல் நடைபெற்ற Devon passing out parade இல் கலந்து கொள்வதற்காக மகிந்த பிரித்தானியா வந்திருந்தார்.
அந்த நேரத்திலும் சந்வதேச ஊடகங்கள் மத்தியில் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரச்சாரப் பலத்தைப் பாராட்டும் விதமாக மகிந்த கருத்துத் தெரிவித்திருந்தார்.
புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கோ இருப்புக் கொள்வில்லை. வானத்திற்கும் பூமிக்குமாகத் துள்ளிக் குதித்தார்கள் சந்தோஷத்தால். எதிரியியே எங்களைப் பாராட்டும் அளவிற்கு நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்ற பெருமிதம் அவர்களுக்கு. தமது செயற்பாட்டு வெற்றியை அறிக்கைகளாக எழுதி வன்னிக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் உண்மையில் மகிந்த சர்வதேச ஊடகங்களைப் பாவித்து ஒரு வகையிலான உளவியல் யுத்தத்தை நடத்திவிட்டுச் சென்றுள்ளார் என்கின்ற உண்மையை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுத்தன.
இலங்கையில் தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதாக, இன அழிப்பொன்று சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கூறுவது சாதாரண புலம்பெயர் தமிழர்கள் அல்ல. மாறாக விடுதலைப் புலிகளே அவ்வாறு பொய்யாகக் கூறுகின்றார்கள். மேற்குலகால் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு வெற்றிகரமாகச் செய்துவரும் பிரச்சாரம் மாத்திரமே அது என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்; மகிந்த. புலிகள் தமது திறமையான வலைப்பின்னலைப் பாவித்து சிறிலங்காவிற்கு எதிராக வெற்றிகரமாகப் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அப்படியான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய அளவிற்கு வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காத் தூதரங்களால் வெற்றிகரமாகச் செயற்பட முடியாமல் போயிருந்தது என்றும் மகிந்த ஒருவிதமான உளவியல் வாதத்தை முன்வைத்து விட்டுச் சென்றார்.
அதாவது புலம் பெயர் தமிழர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, மிருந்த பிரயாசைகளுடன், உணர்சிகரமாக மேற்கொண்ட அத்தனை போராட்டங்களையும், ஒரு சில வார்த்தைகளினாலேயே சுக்குநூறாக்கிவிட்டுச் சென்றிருந்தார் மகிந்த.
அந்த நேரத்தில் பல மில்லியன் டொலர்கள் செலவில் சிறிலங்கா அரசாங்கத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த வெளிநாட்டு பரப்புரை(உளவியல் நடவடிக்கை) நிறுவனம் ஒன்றே மகிந்தவை இவ்வாறு செவ்வி கொடுக்கும்படி ஆலோசனை வழங்கியிருந்ததாக பின்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.


கடைசிவரையில்- அதாவது முள்ளிவாய்கால் சம்பவம்வரையில் புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் அனைத்தையும் புலிகளே நெறிப்படுத்தினார்கள் என்கின்ற மகிந்தவின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பது போலவே எங்களுடைய புலம்பெயர் தமிழ் ஊடகங்களும், பணியாளர்களும், செயற்பட்டார்கள். மகிந்த தலைமையிலான இராணுவத்தின் கொடுரச் செயல்கள் பற்றி புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த அனைத்து ஆதாரங்களுமே, செய்திகளுமே விடுதலைப் புலிகள் அமைப்பின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் என்ற மகிந்தவின் கூற்றை நிரூபிப்பது போலவே புலம்பெயர் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் செயற்பட்டன. அதவது உலகின் 32 நாடுகளில் பயங்கரவாதிகள் என்று கூறித் தடைசெய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக மேற்கொண்ட பிரச்சாரங்களே அவைகள் என்று உலகம் நினைக்கும் வகையில் நாம் நடந்துகொண்டுள்ளோம்.(அந்தக் காலகட்டத்தில் உலகில் 32 நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கவாதிகள் என்று கூறி அந்த இயக்கத்தை தடை செய்திருந்ததால், புலிகளின் பிரச்சாரம் என்ற அடையாளத்துடன் வெளிவந்த பல விடயங்களை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.)
எங்களை உற்சாகப்படுத்துவதாக, எங்களுக்கு ஒரு கம்பீரத்தை வழங்குவதாக நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்ற பல விடயங்கள், உண்மையிலேயே எமக்கு எம்மையறியாமலேயே பின்னடைவை ஏற்படுத்துகின்ற சதிகள் என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒரு சிறிய உதாரணம் மாத்திரமே.
அண்மையில் மகிந்த ராஜபக்ஷ மறுபடியும் பிரித்தானியா வந்த பொழுது இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தையும் இங்கு நாம் கவனத்தில் எடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அந்த நேரத்தில் இசைப்பிரியா என்கின்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்காப் படைகளால் மிகவும் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. சண்டைகளின் பொழுது தம்மால் கொல்லப்பட்டவராக சிறிலங்கா இராணுவத் தலைமையால் உரிமை கோரப்பட்ட இசைப்பிரியா என்கின்ற ஊடகவியலாளர், உண்மையிலேயே சிறிலங்கா இராணுவத்தால் நிராயுதபாணியாகக் கைதுசெய்யப்பட்டு, மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஆதாரங்களை வெளியிட்ட பிரபல்யமான ஒரு சர்வதேச செய்தி தாபணம், சிறிலங்கா மேற்கொண்ட ஒரு மிகப் பெரிய போர் குற்றமாக அதனை அடையாளப்படுத்தியிருந்தது.
ஆனால் சர்வதேச ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவந்த மறுதினம் எங்களுடைய புலம்பெயர் தமிழ் இணையத்தளங்கள் இசைப்பிரியா தொடர்பான ஒரு பரபரப்புச் செய்தியை வெளியட்டிருந்தார்கள். அதாவது, இசைப்பிரியா சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் வீரனொருவனை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும், அதற்கு பழிதீர்க்க கொல்லப்பட்ட சிறிலங்கா வீரனின் சகாக்கள் ஒரு சதி செய்ததாகவும், தம்மிடம் சரணடைந்திருந்த சாதாரண பெண் ஒருவரை மிரட்டி காயம்பட்ட நிலையில் தவிப்பவர் போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த இசைப்பிரியாவை தந்திரமாகத் தமது எல்லைக்குள் வரவளைத்து, சற்றும் எதிர்பாராத முறையில் அவரை சிறிலங்காப் படைத்தரப்பு கைது செய்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இசைப்பிரியாவினால் கொல்லப்பட்ட சிறிலங்காப் படை வீரனின் நன்பர்கள் கோபத்தில் இசைப்பிரியாவைத் தாக்கி பழிவாங்கியதாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.
தமிழ் ஊடகங்கள் சில போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்ட இந்தச் செய்தியானது, சிறிலங்கா இராணுவத்தின் ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறலுக்கான ஆதாரத்தை, ஒரு கொடுரமான போர்குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை சில நொடிகளிலேயே சுற்குநூறாக்கிவிட்டிருந்தது.


இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர் அல்ல அவர் ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்கின்ற ஒரு செய்தி தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளில் கூறப்பட்டிருந்தது. அவர் ஒருவரை படுகொலை செய்தார் என்கின்ற ஒரு தகவலும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் சிறிலங்காப் படைகளிடம் சரணடையவில்லை என்கின்ற ஒரு தகவலும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக, சில இராணுத்தினர் தமது நன்பன் கொல்லப்பட்டதால் உணர்ச்சிவசப்பட்டு செய்த ஒரு கொலையே அது என்ற நியாயப்பாட்டையும், எமது ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினுடாக நாம் வழங்கியிருந்தோம்.
அதாவது நிராயுதபாணியாக சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்த ஒரு ஊடகவியளாளரை, சிங்கள இராணுவம் கொடுரமாகப் படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டை, தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி முற்றாகவே பலமிழக்கச் செய்திருந்தது.
இத்தனைக்கும், இப்படியான தகவலை எதிரியின் ஊடகங்களோ., அல்லது நடுநிலையான சர்வதேச ஊடகங்களோ வெளியிடவில்லை. முழுக்கமுழுக்க ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்ற, தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை பெருமையுடன் கூறிக்கொள்கின்ற ஊடகங்களே இந்தத் தகவல்களை வெளியட்டிருந்தன.
எதிரி மிகவும் கவனமாக இதுபோன்ற தகவலை தமிழ் ஊடகங்களுக்கு கசிய விட்டிருந்தான். எமது ஊடகங்களுக்கும் இதுபோன்ற செய்திகள் மிகவும் கவர்ச்சிகரமாகவே தோன்றின. இசைப்பிரியாவையும், அவரது வீரத்தையும், விடுதலைப் புலிகளின் பெருமையும் உயர்த்துவதாக நினைத்துத்தான் எம்மவர்கள் இந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளிட்டும் இருந்தார்கள். ‘நாமாவது சரணடைவதாவது..’ என்ற வெட்டி வீரத்துக்கு வலுச் சேர்ப்பதாக இருந்ததால்தான், அவர்கள் இந்தச் செய்தியை உற்சாகத்துடன் பிரசுரித்தும் இருந்தார்கள்.
ஆனால், தம்மை அறியாமலேயே எதிரியின் ஒரு மிகப் பெரிய உளவியல் போருக்கு எமது ஊடகங்கள் அந்தச் சந்தர்பத்தில் அனியாயமாகப் பலியாகிப் போயிருந்தன.
தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவது என்பது எம்மைக் குறிவைத்து எதிரி இன்று மேற்கொண்டு வருகின் ஒரு முக்கியமான உளவியல் நடவடிக்கை.
இதற்கு நம்மை அறியாமலேயே நாம் அடிக்கடி பலியாகிவிடுகின்றோம் என்பதூன் சோகம்.
‘விடுதலைப் புலிகள் திரள்கின்றார்கள்.. லட்சத் தீவுகளில் நான்காயிரம் பேர் இருக்கிரார்கள், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறிய புலிகள் வன்னிக்காட்டுக்குள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கின்றார்கள்.. இதோ வருகிறார்.. அதோ அடிவிழப் போகிறது…’ – எமது ஊடகங்களில் அடிக்கடி வெளிவருகின்ற இது போன்ற செய்திகள் எமக்கு உற்சாகம் அழிப்பதாக இருப்பது உண்மைதான். ஆனால் இந்தச் செய்திகள் எமக்கு தருகின்ற மகிழ்சியை விட எதிரிக்கு அளிக்கின்ற பலன் மிக மிக அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணரத் தவறிவிடுகின்றோம். இன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும், அவசரகாலச் சட்டத்தையும் தொடர்ந்து நீடித்துவைத்திருப்பதற்கும், சரணடைந்த போராளிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கும், ஒரு இன அழிப்பை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், வன்னியில் ஒரு இலட்சம் படையினரை தொடர்ந்து தங்கவைப்பதற்கும், அவர்களது குடும்பங்களை வன்னியில் நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கும்.. இதுபோன்ற செய்திகள் எமது எதிரிக்கு மிகவும் பயன்படுகின்றன.


சற்று ஆராய்ந்து பார்த்தால் இதுபோன்ற செய்திகளை ஈழத் தமிழ் அமைப்புக்கள் எதுவுமே வெளியிட்டிருக்காது. சிறிலங்கா தரப்பில் இருந்தோ அல்லது இந்திய தரப்பில் இருந்தோதான் இதுபோன்ற செய்திகள் வெளியே கசியவிடப்பட்டிருக்கும். ஆனால் ஈழத் தமிழருக்கு இனிப்பான செய்திகள் போலவே இவை தெரிவதால், இந்தச் செய்திகள் ஈழத் தமிழ் ஊடகங்களில்தாம் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருக்கும்.
தமிழர்களின் உளவியலை உற்சாகப்படுத்தி, அவர்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுது அவர்களது திசையை அவர்களறியாமலேயே மாற்றிவிடுவதான இந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி நாம்- குறிப்பாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எதிரிகளின் இந்த வகையான உளவியல் நடவடிக்கை தொடர்பாக பல உதாரணங்களை என்னால் காண்பிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னதாக மற்றொரு முக்கிய உளவியல் நடவடிக்கை பற்றி நாம் எமது பார்வையைச் செலுத்தியாகவேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது.
அதாவது, தமிழ் மக்களின் உளவியலை ஒருவித அச்ச நிலைக்குக் கொண்டு சென்று, அந்த அச்ச நிலையில் பலவிதமான தடுமாற்றங்களை அவர்களுக்கு ஏற்படுத்தி, ஒரு பலவீனமான, விரக்தியான மனநிலையில் அவர்களை வைத்திருக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படுகின்றதான உளவியல் நடவடிக்கைகள்.
இந்தவகையான உளவியல் நடவடிக்கைகள்தாம் எதிர்காலங்களில் உலகத் தமிழரைக்; குறிவைத்து மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட இருப்பதாக நம்பப்படுகின்றது.
எனவே, இந்த வகை உளவியல் நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்..

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்