மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-30)- நிராஜ் டேவிட்
தனது எதிர்கால நகர்வுகளுக்கு வளைகுவில் தனது இருப்பு மிக மிக அவசியம் என்பதை நன்குணர்ந்த அமெரிக்கா, அந்தப் பிராந்தியத்தில் தனது அடுத்த கட்ட ஆட்டத்திற்கு தயாரானது.
குறிப்பாக தனக்கு விரோதமாக மாற ஆரம்பித்திருந்த ஈரானை தண்டிப்பதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நகர்வெடுக்க ஆரம்பித்தது.
வியட்னாமில் செய்தது போலவோ அல்லது வடகொரியாவில் செய்தது போலவோ அடித்துப்பித்துக்கொண்டு ஈரானில் தனது படைகளை இறக்குவதற்கு அந்த நேரத்தில் விரும்பவில்லை அமெரிக்கா.
பனிப்போர் காலமென்பதால் ஈரானுக்கு சோவியத் எந்த நிபந்தனைகளும் இன்றி உதவிகள் செய்ய ஆரம்பித்துவிடும்.
அதைவிட, பாலைவனத்தில் பரிட்சயமில்லாத தனது படை வீரர்கள் வீனாக உயிரிழப்பதை அமெரிக்க மக்கள் இலகுவில் அனுமதிக்கவும் மாட்hர்கள்.
எனவே வேறு ஒரு வழியாகத்தான் காய்கள் நகர்த்தவேண்டும்.
அந்த வேறு வழி என்ன என்று தேடிக்கொண்டிருந்தபோதுதான், ஈராக் தலைவர் சதாம் ஹுசைன் அமெரிக்கப் புலனாய்வாளர்களின் கண்களில் பட்டார்.
சதாமின் மூலமாகத்தான் ஈரானைத் தண்டிக்கவேண்டும்.
ஆனால் எப்படி?
சதாமோ அமெரிக்க ஆதரவாளர் அல்ல.
அமெரிக்காவையும், மேற்குலகையும் சதாமும் வெறுப்புடன்தான் அனுகிக்கொண்டிருந்தார்.
அப்படியிருக்க, எப்படி சதாமை வைத்துக் காய் நகர்த்துவது?
இந்த இடத்தில்தான் – இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்த இரண்டு மதக் கருதுகோள்கள் மெது மெதுவாக வெளிவர ஆரம்பித்தன.
அந்த இரண்டு வேறு வேறான நம்பிக்கைகளும், வளைகுடாவில் தான் இலகுவாக கால் பதிக்கவும், பதித்த கால்களை பரப்பியபடி நீண்டகாலம் நிலைத்து நிற்கவும் துணையாக இருக்கும் என்று உறுதியாக நம்பியது அமெரிக்கா.
பிரித்தாழும் தந்திரோபாயத்துடன் வளைகுடாவை நோக்கி தனது கழுகுக் கண்களை விரித்துப் பார்த்தது- அமெரிக்காவின் சீ.ஐ.ஏ.