புலிகளுடன் முஸ்லிம்கள் செய்துகொண்ட ஒப்பந்தம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-92) – நிராஜ் டேவிட்

இந்தியப்படையினர் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் மீது அவர்கள் வெளிப்படுத்திய வெறுபுணர்விற்கான சில மாதிரிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.
கிழக்கு முஸ்லிம்களின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு மோசமான அவலநிலையை அவர்கள் சந்தித்த காலம் என்று இந்தியப்படையின் ஆக்கிரமிப்பு காலத்தைக் குறிப்பிடலாம்.
அதேவேளை முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிக நெருக்கத்தினை ஏற்படுத்திய காலப்பகுதி என்றும் அந்தக் காலப்பகுதியைக் குறிப்பிடலாம்.
ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு இந்தியப்படையினரைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள். கால ஓட்டத்தில் அவ்வாறு செய்யவும் தலைப்பட்டார்கள். மட்டக்களப்பு தரவை, தாண்டியடி, கிளிநொச்சி போன்ற இடங்களில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏராளமான முஸ்லிம் மாவீரர்களின் கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.(சிறிலங்காப் படைகளால் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்படும்வரை முஸ்லிம்களின் கல்லறைகள் அங்கு பேணப்பட்டுவந்தன)
இந்தியப்படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், அந்தப் பங்களிப்பினால் இலங்கையின் இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட அவலங்கள் பற்றியும் மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். அதற்கு முன்பாக இந்தியப்படை காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


முஸ்லிம்களும் ஈரோஸ் அமைப்பும்
தமிழீழ போராட்ட அமைப்புக்களிலேயே ஈரோஸ்(EROS- Eelam Revolutionary Organisation of Students) அமைப்புத்தான்; கிழக்கு முஸ்லிம்களையும் உள்ளடக்கியதான ஒரு விரிந்த போராட்டப்பாதையை உருவாக்கி அதில் பயணிக்கவும் தலைப்பட்ட முதலாவது அமைப்பு என்று கூறலாம்.
1975ம் ஆண்டு இளையதம்பி இரட்ணசபாபதி மற்றும் பொறியியலாளர் ஏ.ஆர். அருட்பிரகாசம்(அருளர்) போன்றவர்களால் லண்டனில் வைத்து ஈரோஸ் அமைப்பு உருவாக்கப்பட்டபொழுதே கிழக்கு வாழ் இஸ்லாமியர்களின் தேவைகள், இருப்பு, எதிர்காலம் போன்றனவற்றையும் கருத்தில் கொண்டே அந்த அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள் போன்றன வடிவமைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இஸ்லாமியர்களின் தனித்துவம் போணப்படவேண்டும் என்பது ஈரோஸ் அமைப்பின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாவே இருந்துவந்தது.
ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் கிழக்குவாழ் முஸ்லிம்களை தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாகவே கருதி அவர்களைக் கையாள முற்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற பார்வையைத் தனதாகக் கொண்ட ஒரே தமிழ் போராட்ட அமைப்பு ஈரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான தேசிய இனமாகக் கருதி அவர்களை அனுகவில்லை என்றுதான் கூறவேண்டும்.
(இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட இருந்த வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகசபையின் பிரதிநிதிகளாக சில இஸ்லாமிம்களை புலிகள் பிரேரித்திருந்தாலும், அந்த முஸ்லிம் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதைவிட புலிகள் அமைப்பின்; முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற அடையாளத்தையே அப்பொழுது கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது)
இப்படியான பின்னணியில்தான் 17.04.1988 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் ஒரு வரலாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
இலங்கையின் இனவிடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு தமிழ் அமைப்பிற்கும் இஸ்லாமியச் சமூகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முதலாவது ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தூதுக்குழு
சென்னை அடையாற்றில் உள்ள இந்திரா நகரில்தான் புலிகளின் அலுவலகம் இருந்தது. அலுவலகத்திற்கு பொறுப்பாக கஸ்ரோ இருந்தார். புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியம், கிட்டு போன்றோரும் அங்கு இருந்தார்கள். இந்தியப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலகட்டத்திலும் இந்த அலுவலகம் செயற்பட்டுக்கொண்டுதான் இருந்தது. சென்னையில் இருந்த கிட்டு உட்பட பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்த பொழுதும் இந்திரா நகரில் இருந்த புலிகளின் அலுவலகம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. அந்த அலுவலகத்தில் இருந்த சக்திவாய்ந்த தொலைத்தொடர்புக் கருவிகளினுடாக வன்னியில் இருந்த புலிகளின் தலைமையுடன் கிட்டு தொடர்ந்து தொடர்பில் இருந்துவந்ததும் குறிப்பிடத்தக்கது.
(புலிகளின் நடவடிக்கை தொடர்பான முக்கியமான தகவல்களை ஒட்டுக்கேட்டு அறிந்துகொள்ளமுடியும் என்ற காரணத்தால் இந்த தொலைத்தொடர்பு கருவிகளை புலிகள் சென்னையில் வைத்திருப்பதற்கு இந்தியப் புலனாய்வுத்துறை தெரிந்தே அனுமதித்திருந்தது)
1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் துதுக்குழு விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை சென்னை அடையாற்றில் இந்திரா நகரில் இருந்த புலிகளின் அலுவலகத்தின் ஆரம்பித்தது.
இந்த பேச்சுவார்தைக்கு முஸ்லிம்கள் தரப்பில் பதியுதீன் முகமட் தலைமை தாக்கினார். கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான எம்.ஐ.எம். மொகைதீன் அவர்களும் அங்கம் வகித்திருந்தார். புலிகள் தரப்பில் தளபதி கிட்டு தலைமைதாங்கினார். பேபி சுப்ரமணியம் உட்பட சில முக்கியஸ்தர்கள் புலிகள் தரப்பில் கலந்துகொண்டார்கள்.

முன்னர் சிறிலங்காவின் கல்வி அமைச்சராக இருந்த பதியுதின் முகமட் பற்றிப் பெரிதாக எனக்குத் தெரியாது. வியாபாரத்ததையே முதன்மையாக நினைத்துக்கொண்டிருந்த கிழக்கு முஸ்லிம்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை கல்விப்பாதையில் நடப்பித்த ஒரு முஸ்லிம் தலைவர் என்பதைத் தவிர அவர் பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. ஆனால் முஸ்லிம்களின் துதுக்குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்ர் எம்.ஐ.எம்.முகைதீன் எனக்கு நன்கு பரிச்சயமானவர். முஸ்லிம்கள் தொடர்பான ஆழ்ந்த அக்கரை உள்ளவர். அதேவேளை தமிழ் முஸ்லிம் உறவு நீடித்து நிலைக்கவேண்டும் என்பதில் அதிக கரிசனை உள்ளவர். 2002 சமாதான காலத்தில் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையினால புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் குலைக்கும் சதிகளுக்கு இந்தியா கிழக்கின் முஸ்லிம்களைப் பயன்படுத்த நினைத்த நேரத்தில், இந்தியச் சதியை முறியடிக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறையை வெளிப்படுத்தியவர் முகைதீன். கிழக்கு முஸ்லிம்களின் பிரதான பிரச்சனை அவர்களது வயல் நிலங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் இருப்பதுதான் என்பதை உணர்ந்துகொண்டு, புலிகளுடன் இதுபற்றிப் பேசி, முஸ்லிம்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களிலுள்ள தமது வயல்நிலங்களில் பயிர் செய்யும் ஏற்பாட்டை தனி மனிதனாக நின்று மேற்கொண்டவர் முகைதின். புலிகளின் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் தொடர்சியான கலறந்துரையாடல்களை ஏற்பாடு செய்து, அந்தச் சந்திப்புக்களினூடாக கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவரம் ஏற்படால் தடுத்தவர் ஜனாப் முகைதீன் என்றால் மிகையாகாது.

இப்படியான சில பேச்சுவார்தைகளில் ஒரு ஊடகவியலாளனாகக் கலந்துகொண்டவன் என்கின்ற ரீதியிலும் தமிழ் சமூகத் தலைவர்களிடையேயான சில சந்திப்புக்களை ஏற்பாடுசெய்து ஒருங்கமைப்பாளனாகக்; கடமையாற்றியவன் என்கின்ற ரீதியிலும் ஜனாப் எம்.ஐ.எம்.மொகைதீன் அவர்கள் பற்றியும், தனது இனம் தொடர்பான அவர் கொண்டிருந்த வைராக்கியமும் பற்றியும், தமிழ் முஸ்லிம் உறவின் எதிர்காலம் பற்றிய அவரது ஆழ்ந்த அக்கறை பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். எனவே புலிகளுடனான அந்தப் பேச்சுவார்த்தை சம்பிராயபூர்வமானது என்பதைக் கடந்து தமிழ் முஸ்லிம் உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் உயரிய நோக்கத்துடன் கூடியதாக இருந்திருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.
1988 ஏப்ரல் 15ம் திகதி ஆரம்பமான பேச்சுவார்த்தை 16ம் திகதியும் நடைபெற்றது. முஸ்லிம்களின் தனித்துவம், முஸ்லிம்களின் தாயகம், அதிகாரப் பகிர்வு போன்ற முக்கியவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பேச்சுவார்தையில் பேசப்பட்ட அத்தனை விடயங்களும் வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்கு தொலைத்தொடர்பு கருவிகளினூடாக அறிவித்தபடி இருந்தார் கஸ்ரோ.
ஒப்பந்தம் பற்றிய முடிவு புலிகளின் தலைமையினால் தொலைத்தொடர்பினூடாக அறிவிக்கப்பட்டதும், 17ம் திகதி புலிகளுக்கும் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.
அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட விடயங்களில் சில:
1. இலங்கைவாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட, தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இனக்குழு என்பதையும், வடக்கு கிழக்கு மாகானம் ஏனய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமாக உள்ளது போலவே முஸ்லிம்களினது பாரம்பரிய தாயகமாக உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.
2. 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது.
3. தமிழ் பேசும் சமூகத்தின் தாயகத்தற்கும் ஒருமைப்பாட்டிற்கும் முஸ்லிம்கள் குந்தகம் விளைவிக்கக்கூடாது.
4. ஒன்றிணைந்த வடக்கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் 30வீதமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்க உரித்துடையவர்கள்.
5. பொதுத்துறை வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள் அந்தந்தப் பிரதேசத்தில் விகிதாசார அடிப்படையில் தெரிவுசெய்யப்படவேண்டும்.
6. வடக்க கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் முறைப்படி தெரிவுசெய்யப்படாத பட்சத்தில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்படவேண்டும்.
7. தமிழ்பேசும் மக்களின் தாயகத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அங்குள்ள இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் வகையிலும் அவர்களது பொருளாதார அரசியல் நிர்வாகப் பலத்தினை முறியடிக்கும் கொள்கையுடனும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரச குடியேற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை களையும் வகையில் ஒரு குடியகல்வுக் கொள்கை உருவாக்கப்படவேண்டும்.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் முக்கியமான விடயங்கள் இவைதான்.
புலிகள் தரப்பில் கிட்டுவும், முஸ்லிம்கள் தரப்பில் பதியுதீன் முகமட் அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள்.
இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் தரப்பும் முஸ்லிம்கள் தரப்பும் முதன்முதலாக ஒரு உடன்பாட்டுக்கு வந்த சந்தர்ப்பம் என்ற வகையில் இந்த ஒப்பந்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
அத்தோடு, விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம்தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி உடன்பாடுகண்ட முதலாவது சந்தர்ப்பம் என்ற வகையிலும் இந்த உடன்படிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

தொடரும்

பகிரல்

கருத்தை பதியுங்கள்