இந்தியப் புலனாய்வுப் பலவீனங்களும் அதன் விளைவுகளும்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-78) – நிராஜ் டேவிட்

இந்தியாவையும், அதன் தென் பிராந்தியப் பாதுகாப்பையும் பொறுத்தவரையில் இந்து சமுத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருந்து வருகின்றது.
இந்தியாவைப் பாதுகாப்பதாக இருந்தால், இந்து சமுத்திரத்தில் பலமான கட்டுப்பாட்டைச் செலுத்தவேண்டும் என்பதை இந்தியா பல தடவைகள் அனுபவரீதியாவே உணர்ந்திருக்கின்றது. இந்தியாவின் எந்தவொரு மேலாதிக்க நகர்வுகளானாலும் கூட, அது இந்து சமுத்திரக் கடலில் இந்தியா தனது பலத்தைப் பேனுவதன் மூலமும், தென் இந்தியாவில் பலமான ஒரு இராணுவக் கட்டமைப்பை நிறுவுவதன் மூலமுமே சாத்தியமாகும் என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, இந்தியா மீதான ஐரோப்பிய ஆக்கிரமிப்பு இந்தக் கடல் வழியாகவே ஆரம்பமாகி இருந்தது.

ஐரோப்பிய ஆதிக்கம்
இந்து சமுத்திரக் கடல் வழியாக வந்த ஐரோப்பியர்கள்; 1639 ம் ஆண்டில் சென்னையின் கடற்கரையில் ஒரு சிறிய கோட்டையைக் கட்டி நிலை கொண்டதன் மூலம்; தமது இந்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு வித்திட்டிருந்தார்கள்.
1750ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ரொபர்ட் கிளைவ் 500 படையினருடன் சென்று ஆர்கொட்டை(Arcot) கைப்;பற்றியதைத்; தொடர்ந்து இந்தியா மீதான வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு முனைப்புப்பெற ஆரம்பித்தது.

இதேபோன்று 1970களின் ஆரம்பத்தில் இந்து சமுத்திரக் கடல் வழியாக அமெரிக்கா ஏற்படுத்தியிருந்த ஒரு அச்சுறுத்தலும் இந்தக் கடற் பிராந்தியத்தை மிகவும் பலமாகக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தியாவிற்கு உணர்த்தியிருந்தது.

1971ம் ஆண்டு இடம்பெற்ற இந்தியாப்-பாக்கிஸ்தான் (பங்காளதேஷ் விடுவிப்பு நடவடிக்கை) யுத்த காலத்தில், பாக்கிஸ்தானுக்கான தனது ஆதரவை அமெரிக்கா இந்த இந்து சமுத்திரத்தின் ஊடாகவே வெளிப்படுத்தியிருந்தது.
இந்திய-பாக்கிஸ்தான் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அந்த காலப்பகுதியில், அனுசக்கிதியில் இயங்கும் USS Enterprises என்ற அமெரிக்க விமானந்தாங்கி; கப்பல் ஒன்றின் வழிநடத்தலில் அமெரிக்காவின் விஷேட படையணி ஒன்று இந்து சமுத்திரம் வழியாக இந்தியாவிற்கு அருகில் வந்தது. வங்காளவிரிகுடா பகுதிக்குள் பங்காளதேஷிற்கு அருகாக நடமாடிய அந்தப் படையணி, பாக்கிஸ்தனுக்கான அமெரிக்காவின் ஆதரவையும், இந்தியாவிற்கான அமெரிக்காவின் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தும் முகமாக செயற்பட்டது.
இந்தியாவை எச்சரிக்கும் விதமாக அமைந்திருந்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்து சமுத்திரத்தில் பலத்துடன் திகழவேண்டியதன் அவசியத்தை இந்தியாவிற்கு மற்றொரு தடவை உணர்த்தியிருந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்து சமுத்திரக் கடற்பரப்பில் இந்தியா பலமான கடற்படைக் கட்டமைப்பை கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், தென் இந்தியாவிலும் இந்தியா தனது பலமான ஒரு படைஅணியை நிறுவவேண்டும் என்றும் இந்திய இராணுவ வல்லுனர்கள் இந்தியாவை வலியுறுத்த ஆரம்பித்திருந்தார்கள்.
இந்து சமுத்திரத்திலும், அதேவேளை இந்தியாவின் தென் பிராந்தியத்திலும் பலமான பாதுகாப்புக் கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்கவேண்டும் என்பது நீண்ட காலமாகவே பல அறிஞர்களாலும் வலியுறுத்தப்பட்டே வருகின்றது.

இந்தியாவின் அலட்சியம்
அத்தோடு இப்பிராந்தியத்தில் இந்தியா தொடர்ந்து பலமுடன் பிராந்திய வல்லரசாகத் திகழ வேண்டுமானால், அயல் நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பல விட்டுக்கொடுப்புக்களுடன் பேணவேண்டும் என்று, 1973 முதல் 1976ம் ஆண்டு வரை இந்தியாவின் கடற்படைத்தளபதியாகக் கடமையாற்றிய அட்மிரல் எஸ்.என்.கோலி தெரிவித்திருந்தார். தென் இந்தியாவில் தனது கடற்படைப்பலத்தைப் பெருக்கும் அதேவேளை, சகிப்புத்தன்மையுடன் கூடிய தலைமைத்துவப் பண்புகளை இந்தியா தன்னுள் வளர்த்துக்கொள்ளுவதன் மூலமுமே இந்தப் பிரதேசத்தின் பிராந்திய வல்லரசாக அதனால் நிலைக்கமுடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு விடயங்களில் ஒரு விடயத்தை மட்டுமே அது ஓரளவு கரிசனையுடன் நிறைவேற்றியிருந்தது.
அதாவது தனது தென் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் தனது படைப்பலத்தைப் பெருக்கும் முயற்சியைத்தான் இந்தியா சிரம்மேற்கொண்டு நிறைவேற்றியிருந்தது.
அயல்நாட்டை கவரும் முயற்சிபற்றி இந்தியா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அந்த விடயத்தில் இந்தியா அலட்சிய மனோபாவத்துடனனேயே நடந்துகொள்ளத் தலைப்பட்டது.
அயல்நாடுகளுடன் நல்லுறவைப் பேனுவது என்பது இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத ஒரு விடயமாகி இருந்தது. இந்தியாவைச் சூழ உள்ள அனைத்து நாடுகளையும் ஏதோ ஒரு காரணத்தில் பகைத்துக்கொண்டே காலம் தள்ளி வந்தது.
இந்தியா மீட்டுக்கொடுத்த பங்காளதேஷ் கூட இந்தியாவை மிகவும் வெறுக்கும் ஒரு நாடாகவே இருக்கின்றது.

தென் பகுதியில் மிகக் கிட்டிய அயல்நாடான ஸ்ரீலங்காவும் கூட, ஏனோ தெரியவில்லை இந்தியாவை அதிகம் வெறுக்கும் ஒரு நாடாகவே இருந்து வந்தது.
1971இல் இந்தியா-பாக்கிஸ்தான் யுத்தம் நடக்கும் காலகட்டத்தில் தேவையில்லாமல் இந்தியாவிற்கு விரோதமான நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா எடுத்திருந்தது. பாக்கிஸ்தான் விமானங்கள் ஸ்ரீலங்கா வான்பரப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் அனுமதியை ஸ்ரீலங்கா வழங்கியிருந்தது.

சரி ஸ்ரீலங்காவில் இருந்து பிழவுபடத்துடித்த தமிழீழத்துடனாவது நட்பைப் பேனுவதற்கு இந்த்pயா முயற்சித்ததா என்றால், அதற்கும் இந்தியா தயாரில்லாததாகவே நடந்துகொண்டது. ஈழத்தமிழர்களை ஒரு நட்பு சக்தியாகக் கருதாமல், தமிழ் மக்கள் விடயத்தில் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளை செய்து அவர்களையும் பகைத்துக்கொண்டது.

படைக்கட்டமைப்பு
மறுபக்கம், இந்தியாவின் தென்பகுதியில் ஒரு பலமான படைக்கட்மைப்பை அமைக்கவேண்டிய தேவையை இந்தியா ஓரளவு நிறைவேற்றியிருந்தது என்றுதான் கூறவேண்டும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த இராணுவக் கவனமும் அதன் வட எல்லைப் பகுதிகளிலேயே தங்கியிருந்த அதேவேளை, தென்பகுதியில் ஒரு பலமான படைக்கட்டமைப்பை அமைப்பதற்கு இந்தியா தவறவில்லை.
தென்பகுதியைப் பலப்படுத்தவேண்டும் என்ற யுத்த வல்லுனர்களின் எச்சரிக்கையைக் கணக்கில் எடுத்து இந்தியா தனது நகர்வுகளை மேற்கொண்டிருந்தது.


இந்தியாவின் தென்பகுதியைப் பாதுகாக்கவென்று அக்காலகட்டத்தில் இந்தியா அதன் இராணுவத்தின் 54வது காலட்படைப் பிரிவை நிறுத்தி வைத்திருந்தது. தென் இந்தியாவின் கேரள மானிலத்தின் திருவானந்தபுறத்தில் இந்தப் படைப்பிரிவு நிறுத்திவைக்கபட்டிருந்தது.
அந்தமான், நிக்கோபார் தீவுகள் மீது ஏதாவது அவசர அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வதற்கென்றே இந்த 54வது காலட் படைப்பிரிவு உருவாக்கப்பட்டு நிறுத்திவைக்கபட்டிருந்தது.
விஷேட கடல்வழித் தரையிறக்கத்திற்கென்று சிறப்புப் பயிற்சி பெற்ற ஒரு படைப்பிரிவாகவே இந்தப் படைப்பிரிவு திகழ்ந்து வந்தது.
அத்தோடு சர்வதேச ரீதியான சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இந்தியா இராணுவத்தில் உருவாக்கப்பட்டிருந்த முதலாவது படைப்பிரிவும் இது என்றே கூறப்படுகின்றது.
இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சின் பிரதேசத்தில் உள்ள இந்திய கடற்படைத்தளத்துடன் தொடர்புபடுத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த 54வது காலட் படைப்பிரிவுதான் இலங்கையில் நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் வந்திறங்கி அதிக இழப்புக்களைச் சந்தித்த படைப்பிரிவும் இதுதான்.

புலனாய்வுப் பலவீனம்

விஷேட பயிற்சிபெற்ற இந்தியாவின் 54வது காலட்படைப் பிரிவு என்ன காரணத்தினால் இலங்கையில் இப்படியானதொரு பின்னடைவைச் சந்திக்கின்றது என்று இந்தியப் படைத்துறைத் தலைமைக்கும், இராணுவ ஆய்வாளர்களுக்கும் அக்கால கட்டத்தில் பெரிய அதிசயமாகவே இருந்தது.

இந்தியப் படையினரின் பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகளின் வீரம், தியாகங்கள், சிறந்த வழி நடத்தல்களே பிரதான காரணம் என்பது உண்மை என்றாலும், இலங்கை தொடர்பான இந்தியப் புலனாய்வு நடவடிக்கைகளில் காணப்பட்ட பலவீனமும் ஒரு காரணம் என்றே இந்திய இலங்கை விவகாரங்களைக் கூர்ந்து கவணித்துவந்த ஆய்வாரள்களும், இந்திய-புலிகள் யுத்தத்தில் பங்குபற்றிய அதிகாரிகளும் பின்நாட்களில் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியாவின் பிரபல போரியல் ஆய்வாரள் ராஜேஷ் கார்டியன் இந்திய புலனாய்வுப் பலவீனங்கள் பற்றி ஒரு விரிவான பார்வையை ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
INDIA’S SRI LANKAN FIASCO என்ற தலைப்பில் ராஜேஷ் கார்டியன் எழுதிய ஆய்வு தொகுதியில், தென் இந்தியப் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா கவலையீனமாக இருந்தது பற்றியும், இலங்கை விடயத்தில் இந்தியா மூக்கை நுழைத்த காலப்பகுதியில் ஸ்ரீலங்காவில் இந்தியாவின் புலனாய்வுப் பார்வை ஒன்றும் பெரிய அளவில் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு சம்பிரதாய புலனாய்வு நடவடிக்கையை மட்டுமே இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொண்டு வந்தது என்பதுடன், இலங்கையில் இந்தியா இராணுவ நடவடிக்கையில் இறங்கியபோது இலங்கை விவகாரங்கள் தொடர்பான போதியளவு தரவுகள் இந்தியாவிடம் இருக்கவில்லை என்றும் ராஜேஷ் கார்டியன் மேற்கொண்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் இந்தியாவினால் பாரிய வெற்றியை ஈட்ட முடியாமல் போனதற்கு இந்தியாவின் மிகவும் பலவீனமான புலனாய்வு நடவடிக்கைகளே காரணம் என்று, இலங்கையின் களமுனைகளில் இருந்த பல்வேறு படை அதிகாரிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்திய அமைதி காக்கும்படையின் ஒரு முன்னணிப் படை உயரதிகாரியான கேணல் ஜோன் டெயிலர் இந்திய இராணுவத்தின் தோல்விகள் பற்றிக் குறிப்பிடும் போது, ‘எங்களுடைய பெரும்பான்மையான தோல்விகளுக்கு இந்தியத் தரப்பின் மிகவும் பலவீனமான புலனாய்வுத் துறையே காரணமாக இருந்தது. இலங்கையில் மேற்கொள்ளப்ட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் புலனாய்வுப் பிரிவினரின் ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்பட்டு வந்ததால், மிகவும் பலவீனமாக இருந்த அந்தப் பிரிவே எமது பின்னடைவிற்கான காரணமாகவும் அமைந்திருந்தது. இலங்கையின் தமிழ் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் பற்றிய சரியானதும், துல்லியமானதுமான தகவல்கள் எங்களிடம் இருக்கவில்லை. வடக்குகிழக்கில் இருந்த மற்றைய போராட்ட அமைப்புக்களை விட புலிகள் பலம் மிக்கவர்கள் என்ற தகவல் மாத்திரமே எங்களிடம் இருந்தது. புலிகளின் தந்திரோபாய நடவடிக்கைகள் பற்றியோ, அவர்களிடம் இருந்த வளங்கள் பற்றியோ, அவர்களுக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட அமோகமான ஆதரவு பற்றியோ, முக்கியமாக அவர்கள் வசமிருந்த மிகவும் திறமையான புலனாய்வுக் கட்டமைப்பு பற்றியோ எங்களுக்குச் சரியாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. இதுபோன்ற தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எங்களுக்குத் தந்திருக்கவும் இல்லை|| என்று அந்த அதிகாரி பின்நாளில் ஒரு இணையத்தளச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

பிரபாகரனை பிடித்துவிடுவோம்

இதேபோன்று இந்தியப் படை நடவடிக்கையில் பங்குபற்றியிருந்த மற்றொரு முதன்மை நிலை அதிகாரி பின்நாட்களில் இவ்வாறு நினைவுகூர்ந்திருந்தார்: “IPKFஐ இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை முழுக்க முழுக்க இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ| இனது திட்டமிடலிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கையில் அமைதிப் படையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி இராணுவ உயரதிகாரிகளுடன் ராஜீவ் காந்தி திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது, புலிகளின் பலம் பற்றி அவர் கேள்வியெழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ‘றோ| உயரதிகாரி ஒருவர், “நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பிரபாகரனை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்| என்று அடித்துக் கூறியிருந்தார், என்று அவர் பின்னாட்களில் நினைவுகூர்ந்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில், ‘இந்தியப்படைகள் இலங்கையில் புலிகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்று ஆராய்ந்ததாகவும், அப்பொழுது இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் “புலிகள் 1977ம் ஆண்டு முதல் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்வர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்துமே எங்களுக்கு அத்துபடி. அவர்களில் பலர் எங்கள் சொல்லை மீறமாட்டார்கள்| என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பற்றி ஜே.என்.தீட்ஷித் எழுதி வெளியிட்டிருந்த Assignment Colombo என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் தனது புத்தகத்தில்ர    “ஒருவேளை இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுடன் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் ” என்று இந்திய ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி முன்நிலையிலேயே நான் இதனைக்; கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, “ஒரு இரவிற்குள் நாங்கள் அவர்கள் கதையை முடித்துவிடுவோம்| என்று தெரிவித்தார்.
இதே கேள்வியை இந்தியப் புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஆணந்வர்மாவிடம் ராஜீவ் காந்தி கேட்டபோது, அதற்கு அவர், ‘அவர்கள் எங்களுடைய பையன்கள். அவர்கள் எங்களுடன் உடன்படுவதற்குமாறாக எதுவும் செய்யமாட்டார்கள்| என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக தீட்ஷித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

றோ மேற்கொண்ட சதி
இதேபோன்று இலங்iயில் படைநடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு இந்திய அதிகாரிகளும், ஈழத்தில் விடுதலைப் புலிகளை இந்தியப் படையினரால் வெற்றிகொள்ள முடியாமல் போனதற்கு இந்தியப் புலானாய்வுப் பிரிவினரையே குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
பல்வேறு விமர்சனங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினரான ஷறோ|, புலிகளை வெற்றி கொள்வதற்கு என்று மற்றொரு நகர்வை எடுக்கத் தீர்மானித்தது.
இந்தியாவிற்கு மேலும் மோசமான அவப்பெயரைத் தேடித்தருவதற்குக் காரணமாக இருந்த இந்தத் திர்மானத்தை ஷறோ| துனிச்சலுடன் மேற்கொண்டது.

விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டு, மக்களில் ஒதுக்கிவைக்கப்ட்ட நிலையில் இந்தியாவில் தங்கியிருந்த மாற்றுக் குழுக்களை ஈழ யுத்தத்தில் இந்தியப் படைகளுடன் இணைத்துக் களமிறக்கும் திட்டத்தை இந்திய உளவுப் பிரிவான ஷறோ| தீட்டியிருந்தது.
ஏற்கனவே இந்தியாவின் ஒரு கூலிப்படையாகவே இருந்து வந்த சில தமிழ் இயக்கங்கள் ஈழயுத்தத்தில் களம் இறக்கப்பட்டன – கூலிக் குழுக்களாக.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் விட்ட மகா பிழைகளுள் மாற்றுத் தமிழ் குழுக்களை களம் இறக்கியதும் ஒன்று என்றே இந்தியப் படை அதிகாரிகள் பலர் பின்நாட்டகளில் விமர்சித்திருந்தார்கள்.

இந்திய புலனாய்வுப் பிரிவான றோவினால் ஈழமண்ணில் களமிறக்கப்பட்ட ஈபிஆர்எல்எப், டெலோ, ஈஎன்டீஎல்எப் போன்ற தமிழ் குழுக்கள் ஈழத்தில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் சமூகவிரோத நடவடிக்கைகள் பற்றியும் இந்தத் தொடரில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

அதற்கு முன்பதாக இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி அடுத்தவாரம் முதல் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அவலங்கள் தொடரும்…

பகிரல்

கருத்தை பதியுங்கள்