அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-75) – நிராஜ் டேவிட்
யாழ் குடாவைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியப் படையினர்
அதிக இழப்புக்களைச் சந்தித்திருந்ததால், இந்திய அமைதிகாக்கும் படையினரின் இராணுவ நடவடிக்கைகளை முன்நின்று நெறிப்படுத்திக்கொண்டிருந்த லெப்.ஜெனரல் ஹரிகிரத் சிங் அவசர அவசரமாக புது டில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தியப் படைத்தரப்பில் ஏற்பட்டிருந்த அதிகளவிலான உயிரிழப்பிற்காக அவர் இராணுவ தலைமையின் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார். (அவர் தனது ஆரம்பகட்டத் தோல்விகளுக்காகத் தெரிவித்த காரணங்கள் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.)
கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் மீளவும் அவர் யாழ்குடாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
இதேவேளை, யாழ் குடாவில் இராணுவ நடவடிக்கையை முனைப்புடன் தொடர்வதற்கு இந்திய இராணுத்தில் கடமையாற்றும் முக்கிய படைத்துறை அதிகாரிகளை, அவர்களுடைய படையணிகளுடன் சேர்த்து அனுப்புவதற்கு இந்தியப் படைத்துறைத் தலைமை தீர்மாணம் எடுத்தது.
புலிகளை எப்படியாவது தோற்கடித்து யாழ்பாணத்தை முற்றாகக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் இந்தியப் படைத்துறை அவசரம் காண்பித்தது.
இந்தியாவின் அரசியல் தலைமை அந்த அளவிற்கு அழுத்தத்தை இந்தியப் படைத்துறை மீது பிரயோகித்திருந்தது.
எந்த அதிகாரிகள் இலங்கைக்கு புதிதாக அனுப்பிவைக்கப்படவேண்டும் என்ற விவாதம் எழுந்த போது, “மிகவும் சிறந்த அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும்|| என்பது இந்தியப் பிரதமரின் உத்தரவாக இருந்தது.
இராணுவ உயரதிகாரிகள் தமது தெரிவுகளை முடித்து விட்டு, தாம் அந்த அதிகாரிகளைத் தெரிவு செய்ததற்கான காரணங்களையும் இந்தியப் பிரதமரிடம் அறிவித்திருந்தார்கள்.
இந்திய இராணுவத் தலைமை தெரிவுசெய்த உயரதிகாரிகள் இவர்கள்தான்:
1. பிரிகேடியர் குல்வந்த் சிங்
2. மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட்
3. பிரிகேடியர் ஆர்.ஐ.எஸ்.காலோன்
4. பிரிகேடியர் மஜித் சிங்
5. பிரிகேடியர் சாமி ராம்
இலங்கையின் வடக்கு-கிழக்கில் புலிகளை முற்றாகத் தோற்கடித்து இந்திய இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்திய படைத்துறைத் தலைமையால் தெரிவுசெய்யப்பட்டிருந்த முக்கிய இராணுவ அதிகாரிகள் இவர்கள்தான்.
இதில் பிரிகேடியர் குல்வந்த்சிங் இந்திய இராணுவத்தின் 54வது டிவிசனின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் (Deputy General Officer Commanding 54 division). இவர் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பத்தில் கவசவாகனப் பிரிவில் (Armoured Corps) ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து ராஜ்புத்தான ரைபிள் (Rajputana Rifles) படையணியிலும் நீண்ட காலம் உயரதிகாரியாகக் கடமையாற்றி நீண்ட அனுபவத்தைப் பெற்றிருந்தார். இந்தியப் படைத்துறையில் மிக நீண்ட அனுபவத்தைப் பெற்ற ஒருவர் என்பதுடன் படைத்துறை உயரதிகாரிகளிடையே மிகவும் மதிக்கப்பட்ட ஒருவரும் கூட. எதிர்காலத்தில் இந்திய இராணுவ பிரதம தளபதி பதவி இவருக்கே வழங்கப்படும் என்று அந்தக் காலகட்டத்தில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டவர்.
மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் (Senior Staff Officer) இந்தியாவில் மிகவும் பிரபல்யமான இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய இராணுவத்தின் 8வது கூர்க்கா ரைபிள்ஸ் (Gorgha Rifles) படையணியில் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தவர். இங்கிலாந்தில் உள்ள Institute of Strategic Studies என்ற மிகவும் பிரபல்யமான இராணுவக் கல்லூரியில் உயர் கல்வியைப் பெற்ற ஒரே இந்தியர் இவர்தான். (பின்நாட்களில் ஹரிக்கிரத் சிங் இற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் படையின் பொறுப்புக்களைக் கையேற்ற இராணுவ அதிகாரி இவர்தான்)
பிரிகேடியர் ஆர்.ஐ.எஸ்.காலோன் இவரும் இராணுவத் துறையில் நிறையக் கற்ற ஒருவர். அமெரிக்காவிலுள்ள Fort Leavenworth அதிகாரிகள் கல்லூரியில் இராணுவத்துறை தொடர்பான உயர்கற்கையை மேற்கொண்டவர். இந்தியாவின் National Defence College இல் அதிகாரிகளுக்கு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோதே, இவர் இலங்கையில் பணியாற்றுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்;தார்.
பிரிகேடியர் மஜித் சிங் மராத்திய ரெஜிமென்டில் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்னர் இந்தியாவின் ஜம்மு மற்றும் கஷ்மீரில் அந்த பிரிகேட்டை தலைமை தாங்கி பல களம் கண்டவர். இந்திய இராணுவத்தின் 41வது காலட் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை இவர்; ஏற்று சில மாதங்களே ஆகியிருந்தக. நீண்டகாலமாக பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்துவந்த இவர் இந்திய இலங்கை ஒப:பந:தம் இடம்பெறுவதற்கு சில மாதங்கள் முன்னரே அமெரிக்காவிலுள்ள இந்தியப் பெண்மணி ஒருவரை மணம் புரிந்திருந்தார்.
பிரிகேடியர் சாமி ராம் -இந்திய இராணுவத்தின் Grenadiers என்ற பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரி எதிர்-கெரில்லாப் போரியலில் (Counter Insurgency) நீண்ட அனுபவத்தைப் பெற்றவர்.
இந்த ஐந்து இராணுவ உயரதிகாரிகளும் தமது பிரத்தியோப் படையணிகளுடன் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
புலிகளது தொடர் தாக்குதல்களை கட்டுப்படுத்தி வடக்கு-கிழக்கை இந்திய இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவர்களது நோக்கமாக இருந்தது.
புதிய படை அணிகள் AN-32, IL-76, AN-12B ரக விமானங்கள் மூலம் பலாலி இராணுவத் தளத்தில் தரையிறக்கப்பட்டன.
கடல் மூலம் கனரக ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டன.
புதிய படை அணிகளைக் களமிறக்கிய புலிகளை முற்றாகவே அழித்தொழிக்கும் ஒரு புதிய வியூகத்தை உருவாக்கியது இந்திய இராணுவம். யாழ்குடா மாத்திரமல்ல வடக்கு கிழக்கு முழுவதிலும், அங்கு புலிகள் பதுங்கிவிடக்கூடும் என்று எதிர்பார்கப்பட்ட காடுகளிலும் கூட விடுதலைப் புலிகளை தேடிச் சென்று அழிக்கும் நோக்கத்துடன் இந்தியப் படை புதிய வியூகங்களை வகுத்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா போன்றோரை கொலைசெய்யும் திட்டமும் இந்தியப்படையினரின் அந்தப் புதிய வியூகத்தில் அடங்கியிருந்தது.
இந்திய இராணுவம் உருவாக்கிய அந்தப் புதிய வியூகம் பற்றியும், அந்தப் புதிய வியூகத்தில் இந்திய இராணுவத்திற்கு ஏற்பட்ட சவால்கள் பற்றியும்;, புதிதாகக் களமிறக்கப்பட்ட இந்தியப் படையணிகளினால் விடுதலைப் புலிகள் சந்தித்த நெருக்கடிகள் பற்றியும் தொடர்ந்துவரும் வாரங்களில் சற்று விரிவாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
இந்தியப் படையினரால் யாழ் நகரம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு முழுவதிலும் இந்திய இராணுவம் மேற்கொண்ட நகர்வுகள், இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மேற்கொண்ட புலனாய்வு மற்றும் உளவியல் நடவடிக்கைகள், அந்தக் காலகட்டத்தில் இந்திய இராணுவத்தின் சில பிரிவுகள் ஈழ மண்ணில் மிக மிக இரகசியமாக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பற்றியும்கூட நாம் சற்று ஆழமாகப் பார்க்க இருக்கின்றோம்.
இந்திய இராணுவ நடவடிக்கைகளின் பொழுது ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட சொல்லமுடியாத அவலங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகள், இந்தியப் படையினர் தமது கைக்கூலிகளை வைத்து மேற்கொண்ட படுகொலைகள்.. இவைகள் பற்றியும் கூட நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
இன்றைக்குத் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு, ஈழத் தமிழர்களுக்காகப் பச்சாத்தாபப்பட்டுக்கொண்டு தமிழர்களின் பிரதிநிதிகளாக வலம் வந்துகொண்டிருக்கும் பல பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் இந்தியப் படையினரின் கைக்கூலிகளாக எப்படி எப்படியெல்லாம் செயற்பட்டார்கள் என்றும், அவர்கள் என்னென்னவகையிலான அவலங்களையெல்லாம் ஈழத்தமிழருக்கு விளைவித்தார்கள் என்றும் நாம் இந்தத் தொடரில் ஆதாரங்களுடன் ஆராய இருக்கின்றோம்.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர் அனுபவித்த சொல்லொனா அவலங்களின் ஒரு தொகுப்பாக வெளிவந்துகொண்டிருக்கும் அவலங்களின் அத்தியாயங்கள் என்ற இந்தத் தொடரில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதற்கான திருத்தங்களையும், இந்தத் தொடர் பற்றிய விமர்சனங்களையும் தயவுசெய்து எங்களுக்கு அனுப்பிவைத்தால், இந்தத் தொடரை மேலும் சிறப்பாக்க உதவியாக இருக்கும்.
அவலங்கள் தொடரும்…