அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-74) – நிராஜ் டேவிட்
இந்தியப் படையினர் மிகுந்த இழப்புகளுடன் யாழ் நகரைக் கைப்பற்றியிருந்த போதிலும், அவர்கள் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது.
முதலாவதாக காயமைடைந்த இந்தியப் படைவீரர்களுக்கு சிகிட்சை அளிப்பதில் அவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்தார்கள்.
ஏனெனில் இந்தியப் படையினர் எதிர்பார்த்ததை விட சண்டைகளில் காயமடைந்தவர்களின் தொகை பல மடங்கு அதிகமாக காணப்பட்டது.
யாழ் நகரைக் கைப்பற்றுவதற்கான முதற்கட்ட சண்டைகளில் இந்தியப் படையினர் தரப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டிவிட்டிருந்தது.
இது இந்தியப் படைத்தரப்பு எதிர்பாராத ஒன்று.
காயமடைந்த இந்தியப் படையினருக்கு சிகிட்சைகள் வழங்குவதில் இந்திய அதிகாரிகள் அதிக சிரமத்தை எதிர்கொண்டார்கள்.
காயமடைந்தவர்களுக்கான அவசர சிகிட்சைகளையும், முதலுதவிகளையும் யாழ் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ வைத்தியப் பிரிவிலும், பலாலி இராணுவத்தளத்தில் இருந்த இராணுவ வைத்தியசாலையிலும் மேற்கொண்ட போதிலும், மேலதிக சத்திரசிகிட்சைகள் வழங்குவதற்கு அங்கிருந்த வசதிகள் போதுமானதாக இருக்கவில்லை.
குறிப்பாக கைவசம் இருந்த இரத்தச் சேமிப்பு காயமடைந்தவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
அடுத்ததாக, காயமடைந்து சிகிட்சைக்காக வரும் படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே இருந்தன.
அதிலும் காயமடைந்து சிகிட்சைக்காக வந்த இந்தியப் படையினரில் அதிகமானவர்கள் புலிகளின் பொறிவெடிகளில் அகப்பட்டுத் தமது கால்களை இழந்து வந்தவர்கள். இதனால் உடனடியாக சிகிட்சை அளித்து அவர்களை திருப்பி அனுப்ப முடியாமல், வைத்திய நிலையங்களிலேயே அவர்களைத் தங்கவைத்து சிகிட்சை வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இது இரண்டு வகைகளில் இந்தியப் படையினருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
முதலாவது இடவசதி.
அடுத்தது, அவயவங்களை இழந்து தவித்த படையினரை அடிக்கடி பார்க்கும் மற்றய படையினருக்கு ஏற்படக்கூடியதான உளவியல் தாக்கம்.
இவை இரண்டையும் மனதில் கொண்டு காயமடைந்து வரும் படையினரை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் படைத்துறைத் தலைமைக்கு ஏற்பட்டிருந்தது.
காயடைந்து வந்தவர்கள் அவசரஅவசரமாகச் சென்னை தாம்பரத்தில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தார்கள்.
பலாலியில்; இருந்து விமனத்தில் சென்னைக்கு அரை மணித்தியாலங்களுக்குள் சென்றுவிடலாம் என்பதாலும், இந்திய அமைதிகாக்கும் படையின் கட்டுப்பாட்டு தலைமையகம் சென்னையிலேயே நிறுவப்பட்டிருந்ததாலும், காயமடைந்து வரும் இந்தியப் படையினரைக் கவணிக்கும் ஏற்பாடுகளும் சென்னையிலேயே செய்யப்பட்டிருந்தன.
ஆனால் சென்னையிலும் காமடைந்து வந்த படையினருக்கு சிகிட்சை அளிப்பதில் மற்றொரு பிரச்சனையை இந்தியப் படைத்துறைத் தலைமை எதிர்கொண்டது.
சென்னை தாம்பரத்திலிருந்த இந்திய இராணுவ வைத்தியசாலையில் 100 படுக்கைகள் மட்டுமே இருந்தன. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆரம்பச் சண்டைகளில் 1039 இந்தியப் படைவீரர்கள் காயமடைந்திருந்தார்கள்.
பொறி வெடிகளில் அகப்பட்டவர்களுக்கு மாதக்கணக்கில் சிகிட்சையளிக்கவேண்டி இருந்ததால், மேலதிகமாகக் காயமடைந்து கொண்டுவரப்பட்டவர்களுக்குச் கிட்சைகள் அளிப்பதில் பெருத்த சிரமங்களை எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டது.
ஸ்ரீலங்காப் படையினரைப் போன்று காயமடைந்த இந்தியப் படையினரை பொது மருத்துவமனைகளில் பொதுமக்களுடன் வைத்துச் சிகிட்சை அளிக்கும் வழக்கம் இந்தியாவில் கிடையாது.
அதிக அளவில் இந்தியப் படையினர் காயமடைந்து வர ஆரம்பிக்க அவர்களை கீழே நிலங்களில் கிடத்தி சிகிட்சை அளிக்கவேண்டி ஏற்பட்டது.
காயமடைந்த இந்தியப் படைவீரர்களைப் பார்வையிடவென இந்திய இராணுவ வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த உறவினர்களுக்கும், தொண்டர் அமைப்புக்களுக்கும் இது அதிக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்குக்கூட காய்சல் வரும் போதிலெல்லாம் முதல்தரச் சிகிட்சை வழங்கும் இந்திய அரசு, நாட்டுக்காக சண்டையிட்டு அவயவங்களை இழந்து வரும் படைவீரர்களை நிலத்தில் கிடத்தி கேவலப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அதனைத் தொடர்ந்து காயமடைந்து வரும் இந்தியப் படையினரை பங்களூர் மற்றும் புனே போன்ற இடங்களில் உள்ள இராணுவ வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைத்து சிகிட்சை வழங்கினார்கள்.
சென்னையிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கும்; அவசர அவசரமாக மேலதிக படுக்கைகள், உபகரணங்கள் வரவளைக்கப்பட்டு காயமடைந்து வரும் இந்தியப் படை வீரர்களுக்கு நல்ல முறையிலான சிகிட்சைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியப் படையினர் முகத்தில் பூசப்பட்ட கரி:
இதற்கிடையில் யாழ் நகரை இந்தியப் படையினர் கைப்பற்றிய போதும் இந்தியப் படையினர் முகத்தில் புலிகள் கரியைப் பூசியிருந்தார்கள்.
யாழ் நரில் இருந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளை தாம் சுற்றிவழைத்து விட்டதாகவும், பிரபாகரனும் அவரது ‘சாரன் கட்டிய குழுவினரும்’ தம்மிடம் சரனடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே சண்டைகள் ஆரம்பமாக காலம் முதற்கொண்டு இந்தியப் படை அதிகாரிகள் தெரிவித்து வந்தார்கள்.
இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அந்தக் காலகட்டங்களில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடுகளில் கூட, இந்தியப் படையினரின் பூரண முற்றுகைக்குள்ளாகி இருக்கும் விடுதலைப் புலிகள் சரணடைவார்களா அல்லது சயனைட் உட்கொண்டு தமது உயிர்களை மாய்த்துக் கொள்வார்களா என்றுதான் விவாதம் நடைபெற்று வந்தது.
ஏதே ஒரு வகையில் யாழ் நகரை இந்தியப் படையினர் கைப்பற்றும் போது, பெருமளவில் புலி உறுப்பினர்கள் இந்தியப் படையினரால் கைப்பற்றப்படுவார்கள், அல்லது கொல்லப்படுவார்கள் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாழ்நகர் தம்மால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக இந்தியப் படையினர் உத்தியோகபூர்வமாக அறிவித்தபோது, அங்கிருந்த புலிகள் பற்றி அவர்கள் எதுவுமே கூறவில்லை.
“அங்கிருந்த விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது?|| என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
“நாங்கள் சுற்றிவளைக்கும் போது அங்கு நின்று சண்டை பிடித்துக்கொண்டிருந்த புலிகள், நாங்கள் யாழ் நகரைக் கைப்பற்றியபோது திடீரென்று மாயமாக மறைந்துவிட்டார்கள்|| என்று இந்திய இராணுவத்தின் அந்த உத்தியோகபூர்வ பேச்சாளர் தடுமாற்றத்தில் வாய் தவறி உளறித்தொலைத்துவிட்டார்.
அந்த இந்திய இராணுவ அதிகாரியின் அறிக்கை ஊடங்களில் மிகுந்து கேலிக்குள்ளாகி வெளியிடப்பட்டது.
யாழ் நகரைக் கைப்பற்றியபோதும், புலிகளையோ அல்லது புலிகளின் தலைவரையோ கைப்பற்றமுடியாமல் போன இந்தியப் படையினரின் கையாலாகத்தனத்தை இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கேலி செய்தன.
புதிய தலைமை:
இது இவ்வாறு இருக்க, யாழ் நகரைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அதிக இழப்புக்கள் ஏற்பட்டதற்காக, ஷபவான் இராணுவ நடவடிக்கையை| நெறிப்படுத்திய லெப்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங் இற்கு எதிராக விசாரணை நடைபெற்றது.
அவர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் மிக முக்கிய அதிகாரிகள் ஐவர் தமது படைஅணிகளுடன் யாழ் குடாவிற்கு அவசரஅவசரமாக அனுப்பிவைக்கப்பட்டர்கள்.
ஈழத் தமிழர்கள் மீது மிக மோசமான கொடுமைகளைப் புரிந்த அந்த ஐந்து அதிகாரிகள் பற்றியும் அவர்கள் தலைமையில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைப் பிரிவுகள் பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்.
அந்த ஐந்து அதிகாரிகளுடன் வந்த இந்தியப் படையணிகள் ஈழத்தில் நிகழ்த்திய அவலங்கள் பற்றியும் தொடர்ந்து வரும் வாரங்களில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
தொடரும்..