பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-66) – நிராஜ் டேவிட்

இரண்டு நாட்களுக்குள் யாழ் நகரைக் கைப்பற்றிவிடுவோம் என்று கூறி இந்தியப் படையினர் ஆரம்பித்திருந்த ‘ஒப்பரேஷன் பவான்| இராணுவ நடவடிக்கை இரண்டு வாரங்களைக்; கடந்தும் தொடர்ந்து கொண்டே இருந்தது. யாழ் நகரை நெருங்குவதற்கே இந்தியத் துருப்புக்களுக்கு 12 நாட்கள் வரை பிடித்தது.

அதற்கும் அவர்கள் கொடுத்த விலை மிகப் பெரியது என்றே கூறப்படுகின்றது. பலமான உயிர் மற்றும் பொருள் இழப்புக்களைச் சந்தித்தே அவர்களால் யாழ் நகரை ஓரளவிற்கு நெருங்க முடிந்தது. புலிகளின் எதிர்ப்புக்கள் அவர்கள் நினைத்துப் பார்த்ததைவிட மிகவும் கடுமையானதாக இருந்தது. அவர்கள் எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் புலிகள் தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தார்கள். புலிகளின் மன உறுதிக்கும், திறமைகளுக்கும், அர்ப்பணிப்புக்களுக்கும் முன்பு, உலகின் நான்காவது பெரிய இந்திய இராணுவம் தடுமாறிக்கொண்டிருந்தது.

அதுவரை இடம்பெற்ற தமது நேரடியான தாக்குதல்களில் 154 இந்திய இராணுவத்தினரை தாம் கொன்றுவிட்டதாகவும், 21 இந்திய ஜவான்களை உயிருடன் பிடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள். நூற்றுக் கணக்கான இந்தியப் படையினரை காயப்படுத்தி யுத்த களத்தில் இருந்து அகற்றியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்திருந்தார்கள். இந்தியப் படையினருக்குச் சொந்தமான 52 எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளையும், வௌ;வேறு ரகத்திலான 54 இயந்திரத் துப்பாக்கிகளையும், 4 ரொக்கேட் லோஞ்சர்களையும், ஆயிரக் கணக்கான ரவைகளையும் கைப்பற்றியுள்ளதாக புலிகள் தமது உத்தியோகபூர்வ அறிப்பில் வெளியிட்டிருந்தார்கள். இந்திய இராணுவத்தினருக்குச் சொந்தமான ஒரு ஷடிரக்| வாகனம், இந்தியப் படை பயன்படுத்திய -இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான ஒரு ஷஜீப்| வண்டி, ஒரு சிறிய பீரங்கி, ஒரு கவச வாகனம் போன்றனவும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் மேலும் அறிவித்திருந்தார்கள். இந்தியப் படையினருக்குச் சொந்தமான 14 யுத்த தாங்கிகளும், 5 வேறு வகை வாகனங்களும் தமது தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
புலிகளின் நேரடித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களது தொகையையே புலிகள் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் யாழ் நகரைக் கைப்பற்றுவதற்கான ஆரம்பச் சண்டைகளில் இந்தியப் படையினர் தரப்பில் 319 பேர் கொல்லப்பட்டதாக இந்தியப் படைத்துறை அதிகாரி ஒருவர் பின்னாளில் தெரிவித்திருந்தார். இவர்களில் கேணல் தரத்திலான இரண்டு உயரதிகாரிகள் உட்பட மொத்தம் 43 அதிகாரிகளும் கொல்லப்பட்டிருந்தார்கள்.; அதிகாரிகள் உட்பட 1039 இந்தியப் படையினர் காயம் அடைந்திருந்தார்கள்.
இந்தியா வெளியிட்ட கொலைப் பட்டியல்:
இந்தியப் படையினர் தாம் கொலை செய்த அப்பாவித் தமிழ் மக்களையும் சேர்த்து தாம் 1100 புலிகளைக் கொன்றுவிட்டதாக அறிவித்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியத் துருப்புக்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் அனைவருமே புலிகளாகவே பட்டியலிட்டிருந்தார்கள். 167 துப்பாக்கிகளும், 17 உயர் ரகத் துப்பாக்கிகளும், 8 ரொக்கட் லோஞ்சர்களும், 23 இயந்திரத் துப்பாக்கிகளும், 70 மோட்டார்களும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் படையினர் சென்னையில் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்திய ஜனாதிபதியின் சந்தேகம்:
சண்டைகளில் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி இந்தியப் படைத்துறை வெளியிட்ட கணக்குகள் தொடர்பாக அக்காலகட்டத்தில் பலத்த சந்தேகம் தெரிவிக்கப்பட்டன. ஸ்ரீலங்க, இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் இந்தியப் படையினர் தமது இழப்புக்கள் தொடர்பாக வெளியிட்டுவந்த கணக்குகளை நம்பவில்லை.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜி. ஜெயில் சிங் அவர்களும், இந்தியப் படையினர் தமது இழப்புக்கள் பற்றி வெளியிட்டு வரும் கணக்குகள் தொடர்பாக இந்தியப் படை உயரதிகாரியாக லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கிடம் ஒரு தடவை தனது சந்தேகத்தைத் தெரிவித்திருந்தார். இந்திய நாட்டிற்காக யுத்தம் புரியும் வீர அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற ‘சிரோமணி| விருதைப் பெறுவதற்கு புதுடில்லி சென்றிருந்த லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கிடம், “இலங்கையில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என்ன?|| என்று இந்திய ஜனாதிபதி வினவினார். திபீந்தர் சிங் அந்த விபரங்களை ஜனாதிபதியிடம் வழங்கினார். இந்திய உயரதிகாரி வழங்கியிருந்த இழப்பு விபரங்களை நம்ப மறுத்த இந்திய ஜனாதிபதி, “ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜெயவர்த்தனா எனக்குத் தந்த தகவல்களின்படி இந்தியப் படையினரின் இழப்புக்கள் நீங்கள் கூறும் கணக்கை விட அதிகமாக இருக்கின்றதே, நான் யாருடைய கணக்கை நம்புவது? உங்களுடையதையா அல்லது ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியினுடையதையா?|| என்று கேள்வி எழுப்பி இருந்தார்.


இந்தியப் படை அதிகாரி திகைத்துவிட்டார். இந்திய ஜனாதிபதியிடம் இருந்து அப்படியான ஒரு கேள்வி எழுந்து தன்னை இத்தனை தூரத்திற்கு சங்கடப்படவைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. ஜனாதிபதியுடன் இந்தச் சம்பாசனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் அருகே இருந்தார்கள். இது மேலும் அவரைச் சங்கடப்பட வைத்தது.
“இழப்புக்களைச் சந்தித்த இந்தியப் படை வீரர்களுக்கு நாங்களே ஓய்வுதியப் பணம் வழங்கவேண்டும் என்பதால், ஸ்ரீலங்கா ஜனாதிபதியினுடையதை விட எனது கணக்கை நம்புவதே நல்லது|| என்று கூறிச் சமாளித்துவிட்டு வந்தார்.
பீ.பீ.சி எழுப்பிய சந்தேகம்:
இதேபோன்று, இந்திய இராணுவத்தின் உயரதிகாரி லெப். கேணல் திபீந்தர் சிங்கை ஒரு தடவை பீ.பீ.சி. யின் பிரபல ஊடகவியலாளரான மார்க் ரூலி செவ்வி கண்டுகொண்டிருந்தார். யாழ்பாணத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த வீர சாகாசங்கள் பற்றியெல்லாம் இந்திய அதிகாரி புழுகிக் கொண்டிருந்தார். இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி திபீந்தர் சிங் தெரிவிக்க ஆரம்பித்த போது, அந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ளத் தாம் தயங்குவதாக அந்த பீ.பீ.சி. ஊடகவியலாளர் தெரிவித்தார். இராணுவ அதிகாரி தமது தரப்பு இழப்புக்கள் பற்றி தாம் வெளிட்ட தொகை சரியானது என்று தொடர்ந்து வாதாடினார். ஆனால் பீ.பீ.சியின் ஊடகவியலாளர் அதனை கடைசி வரை ஏற்றுக்கொள்ளவேயில்லை.
அந்தச் செவ்வியின் இடைநடுவே பீ.பீ.சி. ஊடகவியலாளர் மார்க் ரூலி அந்தச் செவ்வியை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த உபகரணத்தின் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டு, ஒரு கேள்வியை திபீந்தர் சிங்கிடம் வினவினார். அதைக்கேட்ட திபீந்தர் சிங் அதிர்ந்து விட்டார்.
அடுத்து என்ன கூறுவது என்று அவருக்கு தெரியவில்லை…
தொடரும்…

பகிரல்

கருத்தை பதியுங்கள்