அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-52) – நிராஜ் டேவிட்
போர் என்பது வேறு போராட்டம் என்பது வேறு.
போர் என்பது ஒரு இலக்கின் மீது, அந்த இலக்கை அழிக்கும் நோக்கில் அல்லது அந்த இலக்கை வெற்றிகொண்டு ஆக்கிரமிக்கும் நோக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை.
ஆனால் போராட்டம் என்பதோ, தம்மீது நிர்ப்பந்திக்கப்படும் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், தம்மீது திணிக்கப்படும் போரில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கும், ஒரு தரப்பு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை.
விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகளைப் பொறுத்தவரையில், இந்தியப் படைகள் புலிகள் மீது, அவர்களை அழித்தொழிக்கும் வகையிலான ஒரு போரை திணித்திருந்தார்கள்.
புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்து அவர்களை நீராயுதபாணிகளாக்கி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கவும், அவர்களை அழித்தொழிக்கவும், இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைதான் புலிகளுக்கு எதிரான அவர்களது போர் நடவடிக்கை.
அதேவேளை விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இந்தியப் படையினரின் யுத்த முனைப்புக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், இந்தியாவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கும், அவர்கள் வேறு வழியில்லாது மேற்கொண்ட அந்த தற்காப்பு நடவடிக்கையை ஷபோராட்டம்| என்று குறிப்பிடலாம்.
போரும், போராட்டமும்:
இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆருக்கு, ஈழத்தமிழர் மீது இந்தியா திணித்திருந்த போரைப் பற்றி கடிதம் எழுதியிருந்தார். இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணித்திருந்த யுத்தத்தில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும்படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர் தனது கடிதத்தில், ‘ஆயிரக்கணக்கான போராளிகள் யுத்தத்தில் மடியும் அதேவேளை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களும் இந்தியா திணித்துள்ள இந்த போரில் சிக்குண்டு மடியும் அபாயம் உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகள் என்பவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்டவர்கன் அல்ல. ஈழத் தமிழர்களில் ஒரு அங்கமே விடுதலைப் புலிகள். இது ஒரு மக்கள் அமைப்பு. மக்கள்தான் புலிகள்ளூ புலிகள்தான் மக்கள். எனவே எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத ஒரு யுத்தத்தை இந்தியா ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்துள்ளது. இந்த அநியாயத்தை இந்திய மக்கள், குறிப்பாக தமிழ் நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். தமிழ் நாட்டு மக்கள் மாத்திரம் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்பினால், எம் இனத்திற்கு எதிரான இந்தியாவின் அழித்தொழிப்பு யுத்தத்தை நிறுத்திவிடமுடியும். எனவே உண்மை நிலையை தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எமது மக்களின் போராட்டத்திற்கு சார்பான அலையை தமிழ் நாட்டில் உருவாக்கி எமது மக்களை இந்திய அரசின் அழித்தொழிப்பு போரில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்|| என்று எழுதியிருந்தார்.
இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இரண்டு அவசரக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.
அந்தக் கடிதங்களில் இந்தியப் படைகள் ஈழத் தமிழர்கள் மீது திணித்திருந்த போரினால் 150 ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 500 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டவென ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படைகள் ஈழத் தமிழருக்கு எதிராக முழு அளவிலான யுத்தமொன்றில் இறங்கியுள்ளது பற்றி தனது கவலையையும், அதிருப்தியையும் அவர் தனது கடிதங்களில் வெளியிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் மீது இந்தியா திணித்திருந்த போரை எதிர்த்து போராடுவரைத் தவிர தமக்கு வேறு எந்த வழியும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்த தலைவர் பிரபாகரன், அப்பாவி மக்கள் மீது இந்தியப்படை நடாத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
விடுதலைப் புலிகள் மீது என்று கூறி, ஈழத் தமிழர்கள் மீது இந்தியா தொடுத்திருந்த யுத்தத்தின் ஆரம்பத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் எழுதியிருந்த அந்தக் கடிதங்கள், தம்மீது திணிக்கப்பட்டிருந்த போரை விலக்கிக்கொள்ளும்படி அக்கடிதங்களில் அவர் விடுத்திருந்த வேண்டுகோள்கள் அனைத்துமே, விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்தத்தை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.
புலிகள் விரும்பாத ஒரு போரை இந்தியா புலிகள் மீது திணித்ததினாலேயே, வேறு வழி எதுவும் இல்லாமல் அந்தப் போரை எதிர்கொண்டு போராடவேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது.
புலிகளின் இழப்பு:
இந்தியாவிற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய போராட்டம் என்பது, புலிகளைப் பொறுத்தவரையில் அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்கவில்லை.
ஏற்கனவே, விடுதலைப் புலிகளை களமுனையில் வழி நடாத்திக்கொண்டிருந்த கிட்டு, புலேந்திரன், குமரப்பா, திலீபன் என்று பல முக்கிய போராளிகள் இல்லாத நிலையிலேயே புலிகள் இந்தியாவுடனான யுத்தத்தைச் சந்தித்திக்கவேண்டியிருந்தது.
யுத்தம் ஆரம்பமான முதலாவது நாளிலேயே, புலிகள் தரப்பு பல இழப்புக்களை சந்திக்க ஆரம்பித்திருந்தது.
இந்தியப் படையினருக்கு எதிராகப் போராடக் களமிறங்கிய பெண்புலிகள் தனது முதலாவது இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.
அக்டோபர் 10ம் திகதி, கோப்பாய் வழியாக முன்னேற முயன்ற இந்தியப் படையினரை இடைமறித்துத் தாக்குதல் மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி, இரண்டாவது லெப்டினட் மாலதி (பேதுறு சகாயசீலி-மன்னார்) என்ற போரளியை இழந்து நின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாவீரரான முதலாவது பெண் போராளி மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு மோதலில் புலிகள் அமைப்பின் மற்றொரு முக்கிய போராளியான லெப்டினட் கேணல் சந்தோசமும் வீரமரணம் அடைந்திருந்தார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விஞ்ஞாணபீட மாணவராக இருந்த இவர், புலிகள் அமைப்பில் இருந்த மிகச் சிறந்த போராளிகளுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று 11ம் திகதி நள்ளிரவில் யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படையினருடன் நடைபெற்ற சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான பொட்டு அம்மான் படுகாயம் அடைந்திருந்தார்.
இதேபோன்று புலிகள் அமைப்பின் பல முக்கிய போராளிகளும், இந்தியப் படையினருடனான சண்டைகளில் கொல்லப்பட்டும், காயமடைந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார்கள். எக்காரணம் கொண்டும், இந்தியப் படையினரிடம் சரணடைவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
இந்தியப் படையினரிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்து, அவமாணப்பட்டு மரணிப்பதைவிட, மானத்துடன் போராடி வீரமரணம் எய்துவது மேல் என்று ஒவ்வொரு புலி உறுப்பினரும் கங்கணம் கட்டிக்கொண்டு யுத்தமுனைக்குச் சென்றார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த யுத்தமுனை வெகு விரைவில் அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தது.