இந்தியப் படையினரைத் தூண்ட ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்ட சதிகள்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-41) – நிராஜ் டேவிட்

ஈழத் தமிழ் மக்களின் காவலன் என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இலங்கைக்கு வந்த இந்தியா, சிங்களத் தலைவர்கள் விரித்த வலையினுள் தெரிந்துகொண்டே விழுந்திருந்த சந்தர்ப்பங்கள் பற்றி கடந்த சில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருந்தோம்.
இந்தியப் படைகளையும், விடுதலைப் புலிகளையும் சின்டு முடித்து வேடிக்கைபார்க்க விரும்பிய சிங்களத் தலைவர்கள், திட்டமிட்டுக் காரியமாற்றிக்கொண்டிருந்த அதேவேளை, சிங்கள இராணுவத்தினரும் தம்பங்கிற்கு இந்தியப் படையினரை திசைதிருப்பக்கூடிய பல சதிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள். இந்தியப் படையினர் இதனை நன்கு அறிந்திருந்த போதிலும், அந்தச் சதியில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாமல், காப்பாற்றிக்கொள்ளவும் விரும்பாமல், ஈழத்தமிழருக்கு எதிரான தமது துரோகங்களை தொடர்ந்ததுதான் வேடிக்கை.
இந்தியப்படையினரைத் தாக்கிய ஸ்ரீலங்கா இராணுவத்தினர்:
தமிழ் மக்களையும், அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரனாக நின்றுகொண்டிருந்த விடுதலைப் புலிகளையும் தனிமைப் படுத்த ஸ்ரீலங்கா படைகள் எப்படியான தந்திரங்களையெல்லாம் கையாண்டிருந்தன என்பது பற்றி, இந்தியப் படைகளின் தளபதிகள் பின்நாட்களிலேயே தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் நினைவுகூர்ந்திருந்தார்கள்.


இது பற்றி, இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதியாக இருந்த லொப்.ஜெனரல் திபீந்தர் சிங், இவ்வாறு தெரிவித்திருந்தார்:

‘கிழக்கு மாகாணத்தின் இனவிகிதாசாரம் தமிழ், முஸ்லிம் சிங்களச் சமுகங்களிடையே சமமாகப் பிரிந்து காணப்பட்டது. தமது சமுகமே அங்கு பெரும்பாண்மையாக உள்ளதாக ஒவ்வொரு சமுகத்தைச் சேர்ந்தவர்களும் தெரிவித்து வந்தார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கை இணைப்பது சம்பந்தமாக கிழக்கில் மேற்கொள்ளப்பட இருந்த சர்வசன வாக்கெடுப்பில் சிங்களவர்கள் இணைப்பிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் முஸ்லிம் சமுகத்தினர் இந்த இணைப்பிற்கு சார்பாக வாக்களிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. அதனால் உண்மையிலேயே வடக்கும், கிழக்கும் இணைய வேண்டியது அவசியமென்று தமிழ் மக்கள் விரும்பினால், அவர்கள் தம்முடன் முஸ்லிம் சமுகத்தினரையும் அரவணைத்துச் செல்லவேண்டியது அவசியமாக இருந்தது. அவர்கள் அவ்வாறுதான் நடந்துகொள்ளவும் தலைப்பட்டார்கள். ஆனால் கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கு வன்முறைகள் வெடித்தன. சில முஸ்லிம்கள் கடத்தப்பட்டார்கள். காணாமல் போனார்கள். புலிகளே முஸ்லிம்களைக் கடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது தமிழ்-முஸ்லிம் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும்படியாக அமைந்தது. படிப்படியாக தமிழ்-முஸ்லிம் கலவரமாகவும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. ஆனால் உண்மையிலேயே முஸ்லிம்களைக் கடத்திய சம்பவங்களின் பின்னால், ஸ்ரீலங்காப் படைகளின் கரங்கள் காணப்பட்டது அப்பொழுது எவருக்கும் தெரியாது. விடுதலைப் புலிகள் உடனடியாகவே இதனை வெளிப்படுத்தியிருந்தார்கள். வடக்கு கிழக்கு இணைவது தொடர்பான அபிப்பிராய வாக்கெடுப்பின் பொழுது முஸ்லிம்கள் அதற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் முஸ்லிம்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பிளவை உண்டுபண்னுவதற்காக ஸ்ரீலங்கா பொலிஸாரே இந்தக் கொலைகளைப் புரிந்துவருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருந்தார்கள். புலிகளின் இந்தக் கூற்று உண்மையாக இருந்த போதிலும் இந்திய அமைதிகாக்கும் படையினால் எதுவுமே செய்ய முடியாத நிலையே இலங்கையில் காணப்பட்டது. திருகோணமலையைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்காப் பொலிஸ் படையில் பெருமளவில் சிங்களவர்களே இருந்ததால், எங்களால் இதுபோன்ற சதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.|| இவ்வாறு திபீந்தர் சிங் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக ஸ்ரீலங்காப் படையினர் நேரடியாகவே சதிகளில் இறங்கியிருந்த சந்தர்ப்பங்கள் பற்றியும், திபீந்தர் சிங் எழுதியிருந்த The IPKF in Sri Lanka என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். இந்தியப் படையினருக்கு எதிராக ஸ்ரீலங்காப் படையினர் தாக்குதல்களை நடாத்திவிட்டு, விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடுவதற்கு முயன்றதாகவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்: ஷஷதிருகோணமலையில் இந்திய அமைதிகாக்கும் படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. சாதாரண ஆடைகள் அணிந்து ஒரு ‘வானில்| வந்த சிலரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். இந்தியப் படையினரும் பதில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். எங்கள் தரப்பில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எங்கள் துருப்புக்கள் பதில் தாக்குதலை மேற்கொண்டதைத் தொடர்ந்து தாக்குதலை நடாத்தியிருந்த வாகனம் தப்பிச் சென்றது. தொடர்ந்து எமது துருப்புக்கள் அந்த வாகனத்தைத் துரத்திச்சென்றபோது, அந்த ‘வான்| நேரடியாக ஸ்ரீலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் நுழைவதை எனது துருப்புக்கள் அவதானித்தார்கள். அதே வாகனம் திருகோணமலையில் உள்ள ஸ்ரீலங்கா இராணுவ முகாம் ஒன்றினுள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதை பின்னர் எமது துருப்புக்களில் சிலர் உறுதிசெய்தார்கள்.

இந்தியத் துருப்புக்கள் மேற்கொண்ட பதில் தாக்குதல்களினால் ‘வானில்| ஏற்பட்டிருந்த ஓட்டைகளையும் எமது துருப்புக்கள் இலகுவாக அடையாளம் கண்டுகொண்டார்கள்.

இதுபற்றி நாங்கள் ஸ்ரீலங்காப் படை அதிகாரிகளிடம் கூறியபோதும், அவர்கள் அதனை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.
அதேபோன்று மற்றுமொரு சந்தர்ப்பத்தில், சாதாரண ஆடையில் வந்த ஒரு இளைஞன் இந்தியப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு நேரடியாகவே ஸ்ரீலங்காப் படைமுகாம் ஒன்றிற்குள் ஓடி மறைந்ததை எமது படைவீரர்கள் கண்டுள்ளார்கள்.||
இவ்வாறு திபீந்தர் சிங் தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, இந்தியப் படைகளுக்கு எதிராக ஸ்ரீலங்காப் படையினர் நேரடியான நகர்வுகளில் இறங்கியிருந்த சம்பவங்களும் ஆங்காங்கு நடைபெறத்தான் செய்தன.
ஸ்ரீலங்காப் படைகளையும், அதன் அரச சக்திகளையும் பொறுத்தவரையில், அரசியல் அரங்கில் அவர்களுக்கு பல அவசரத் தேவைகள் இருந்தன.
முதலாவது இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பிரச்சினைகளை உண்டுபண்ணுவது. இரண்டாவது இந்தியப் படைகளுக்கு இலங்கையில் ஏதோ ஒரு வழியில் சிக்கல்களை உருவாக்குவது.(இந்த நோக்கத்தை அடைவதற்கு வெளிநாடுகளின் அனுசரனையும் ஸ்ரீலங்காவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.)

தமது அரசியல் இருப்புக்கும், சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்கும் இந்தக் காரியங்களைச் செய்யவேண்டிய தேவைகள் அவர்களுக்கு இருந்தன.
அதற்காகவே திருகோணமலையில் குழப்பத்தை ஏற்படுத்தி, தமது நகர்வுகளை ஆரம்பிக்க முயன்றார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் வவுனியாவில் இருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒரு படைப்பிரிவை திருகோணமலைக்கு அனுப்புவதற்கு எத்தனிக்கையில் இந்தியப் படைகள் அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். திருகோணமலையில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கென்று கூறி ஸ்ரீலங்காவின் ஒரு படைப்பிரிவு திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது. நகர்வை மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்காப் படைகளை இந்தியப் படையின் 340வது காலாட் படைப்பிரின் அதிகாரி இடைமறித்து எச்சரித்து திருப்பி அனுப்பினார். இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல் மூழும் சந்தர்ப்பம் கூட ஏற்பட்டது.
இதேபோன்று ஸ்ரீலங்காவின் படைப்பிரிவு ஒன்றை வான்வழி; மூலமாக திருகோணமலையில் தரையிறக்கும் நகர்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா விமானப்படை அதிகாரி எயார் மார்ஷல் ஏ.டபிள்யூ.பெர்னாண்டோ தலைமையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த இந்தியப்படையினர் தமது சில யுத்தத் தாங்கிகளை திருகோணமலை விமானத்தள ஓடுபாதையில் நிறுத்தி, ஸ்ரீலங்காப் படைகளின் தரையிறக்கத்தை தடுத்திருந்தார்கள்.
இந்தியப் படைகளுக்கு நெருக்கடிகளை உருவாக்குவதற்காகவும், கஷ்டங்களைக் கொடுப்பதற்காகவுமே, ஸ்ரீலங்காப் படைத்துறைத்தலைமை இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தலைப்பட்டது.
இதனை இந்தியா நன்கு உணர்ந்திருந்தும், நிதானமாக நடந்துகொள்ளத் தவறியதுதான், இந்தியா தமிழ் மக்களுக்கு இழைத்திருந்த துரோகமாக இங்கு குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்காவின் அரசியல்தலைவர்களும், அதன் படைத்துறையும், இந்தியாவைச் சிக்கலில் மாட்டவைக்கும் நகர்வுகளையெல்லாம் செய்துவந்தபோது, இந்தியா அவற்றை நன்றாகவே அறிந்திருந்தது. அப்படியிருக்க, இந்தியா எதற்காக மறுபடியும் ஸ்ரீலங்காவின் சதிகளில் தன்னை சிக்கவைத்துக்கொண்டது என்பதுதான் விடைதெரியாத கேள்வியாக இன்றும் இருக்கின்றது.

ஈழத்தமிழருக்கு எதிரான பயணங்கள்:
இது இவ்வாறு இருக்க, இந்தியா ஸ்ரீலங்கா விரித்திருந்த வலையில் முழுமையாக அகப்பட்டுக்கொள்ளும் தனது அடுத்த நகர்வை மேற்கொள்ள ஆரம்பித்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அது பற்றி கலந்தாலோசிக்க இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கே.சீ.பந்த் கொழும்புக்குப் பயணமானார்.
அதே நோக்கத்துடன் இந்திய இராணுவத்தின் பிரதம தளபதி ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியும் பலத்த பாதுகாப்புடன் யாழ்பாணத்தில் வந்திறங்கினார்.

இந்திய வரலாற்றில், இந்தியாவிற்கு மிகவும் மோசமான ஒரு அவப்பெயரைப் பெற்றுத்தருவதற்கு காரணமாக அமைந்திருந்த பயணங்களாக இந்த இரண்டு முக்கியஸ்தர்களின் பயணங்களும் அமைந்திருந்தன.
இந்த இருவரது பயணங்களும், இந்தியாவை நம்பியிருந்த ஈழத்தமிழர்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடக்கூடிய பயணங்களாக மட்டும் அமைந்துவிடாது, முழு ஈழத்தமிழர்களையுமே அழித்துவிடக்கூடிய பயணங்களாகவும் அமைந்திருந்தன.

பகிரல்

கருத்தை பதியுங்கள்