உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற விடயம் பற்றி சற்று விரிவாக இப்பந்தியில் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம்.
தமது போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில வெற்றிகரமான உளவியல் நடவடிக்கைகள் பற்றி கடந்த சில வாரங்களில் பார்த்திருந்தோம்.
விடுதலைப் புலிகள் மிக மிகத் திறமையாக திட்டமிட்டு மேற்கொண்டிருந்த பல உளவியல்; நடவடிக்கைகளையும் கடந்து சிறிலங்காப் படைகளால் விடுதலைப் புலிகளை எவ்வாறு முறியடிக்க முடிந்தது?
விடுதலைப் புலிகளின் உபாயங்களை எதிர்கொள்ள சிறிலங்கா இராணும் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் என்ன?
இந்த விடயங்கள் பற்றிப் பார்பதற்கு முன்னதாக, இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில், இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்த்துவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன்.
உளவியல் நடவடிக்கைகளின் ஒரு முக்கிய அம்சம்: வதந்திகள்.
ஒரு போராட்ட அமைப்பு எதிராக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சகட்டுமேனிக்குப் பரப்பப்படும் வதந்திகள், அந்த போராட்ட குழு உறுப்பினர்கள் மத்தியிலும், அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியிலும் பெரியதொரு உளவியல் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது, உளவியல் போர் நிபுணர்களின் கணிப்பு.
வதந்திகளை ஆயுதமாக எடுத்து பாரிய உளவியல் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதென்பது, இன்றைய நவீன போரியல் உலகில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் முதல், சிறிலங்கா போன்ற வளர்முக நாடுகள் வரை கையாண்டு வருகின்ற சாதாரன யுக்திகள்.
இந்த வதந்திகளை ஆயுதமாகப் பாவித்து விடுதலைப் புலிகள் மீதும்;, அந்த அமைப்பின் ஆதரவுத்தளத்தின் மீதும் ஒரு சந்தர்பத்தில் பாரிய உளவியல் போரை கட்டவிழ்த்துவிட்டிருந்தது இந்திய இராணுவம்.
அப்படியான சில உளவியல் நடவடிக்கைகள் பற்றித்தான் இந்த வாரம் நாம் ஆராய இருக்கின்றோம்.
1987ம் ஆண்டியின் இறுதிப் பகுதிகளிலும், 1988 இன் ஆரம்பப் பகுதிகளிலும் வன்னிக்காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் மறைந்து தங்கியிருந்து, இந்திய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிரான போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்த காலப்பகுதியில், புலிகளின் தலைவருக்கு எதிராக இந்தியத் தரப்பினரால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளை எதிர்கொள்வதுதான் புலிகளைப் பொறுத்தமட்டில் பெரிய கஷ்டமான ஒரு விடயமாக இருந்தது.
வன்னிக் காட்டில் புலிகளின் முக்கியஸ்தர்கள் சகிதமாகத் தங்கியிருந்த புலிகளின் தலைவரை நெருங்கமுடியாமல் தவித்த இந்தியப் படையினரும், இராஜதந்திர ரீதியாக பாரிய பின்னடைவை கண்டு வந்த றோ அமைப்பினரும் திட்டமிட்டே பல வதந்திகளை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள்.
ஆற்றாமை காரணமாகவும், ஆதங்கம் காரணமாகவும், இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக்குழு உறுப்பினர்களும் புலிகளுக்கு எதிரான பல வதந்திகளைக் கட்டவிழ்த்து விடுவதில் இந்தியர்களுக்கு சற்றும் சளைக்காமல் முன்நின்றார்கள்.
24 மணி நேரத்திற்குள் புலிகளை தோற்கடித்துவிடுவோம் என்று கூறி களம் இறங்கிய இந்தியப் படையினரால், தமது முழுப் பலத்தையும் உபயோகித்தும் கூட புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதை அவர்களால் ஜீரனித்துக்கொள்ள முடியவில்லை.
அவர்கள் களத்தில் எதிர்கொண்ட தோல்விகளை ஓரளவு சமாளிக்க அவர்களுக்கு பெரிதும் உதவிய ஒரு முக்கிய ஆயுதம் வதந்திதான். எந்த குறையும் வைக்காமல் தம்பாட்டிற்கு பல கட்டுக்கதைகளை அவர்கள் கட்டி வந்தார்கள்.
மற்றொரு நோக்கத்தை அடிப்படையாக வைத்தும் இந்தியப் படையினர் புலிகளுக்கு எதிரான வதந்திகளைப் பரப்பி வந்தார்கள். அதுதான் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான உளவியல் யுத்தம் .
அபாண்டமான வதந்திகளை மக்கள் மத்தியில் தாராளமாகப் பரப்புவதுதான், புலிகளுக்கு எதிரான பிரதான உளவியல் போர் என்று நினைத்தக்கொண்டு, இந்தியத் தரப்பினர் காரியம் ஆற்றிக்கொண்டிருந்தார்கள்.
பாரிய இழப்புகளின் மத்தியில் இந்தியப் படையினர் நித்திகைக் குள முற்றுகையை முடித்துக்கொண்டு, வெறும் கைகளைப் பிசைந்தபடி திரும்பிக்கொண்டு இருக்கையில், ஒரு வதந்தி கனகச்சிதமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
“பிரபாகரனின் முகாமை இந்தியப் படையினர் சுற்றி வளைத்து, பிரபாகரனைப் பிடிக்கும் தறுவாயில், புதுடில்லியில் இருந்து ஒரு உத்தரவு வந்தது. பிரபாகரனை எதுவும் செய்யவேண்டாம் என்பதே அந்த உத்தரவு. இதனால்தான் இந்தியப் படையினர் ஒன்றும் செய்யாமல் திரும்பவேண்டி ஏற்பட்டது|| – இதுதான் அந்த வதந்தி.
இந்தியப் படையினரின் இயலாமைக்கு இப்படி ஒரு காரணம் கூறப்பட்டது. அதுவும் இந்தக் காரணத்தை இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் இயக்க உறுப்பினர்கள்தான் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்கள்.
எங்கே இந்தியப் படையினர் மண் கௌவிய விடயம் மக்களுக்கு தெரிந்துவிட்டால், இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கி வந்த தங்களது ‘இமேஜூம்| அடிபட்டுப்போய்விடுமோ என்கின்ற அச்சத்தில், தமிழ் இயக்க உறுப்பினர்கள் இப்படி ஒரு கட்டுக்கதையைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.
அதாவது புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய உயிருக்கு ஊறு நேருவதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதால், புலிகளின் தலைவரைக் கைது செய்வேண்டாம் என்று படையினருக்கு உத்தரவிடப்பட்டதாக அவர்கள் கதை பரப்பியிருந்தார்கள்.
தமிழ் இயக்க உறுப்பினர்கள் பரப்பிய இந்த கட்டுக்கதையை கவனமாக கைகளில் எடுத்த பத்திரிகைகள் அதற்கு கை, கால், மூக்கு எல்லாம் வைத்து தொடர் கதையாக வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். இந்தியப் படையினர் நித்திகைக் குளத்தில் புலிகளின் தலைவரை நெருங்கிய விதத்தையும், இந்திய அரசியல் தலைமை அதனைத் தடுத்தது பற்றியும் விதம் விதமாக கட்டுரை எழுத ஆரம்பித்தார்கள். ஒரு சில பத்திரிகைகள் சற்று மேலே சென்று, இந்தியப் படையினர் ஒரு சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து, பின்னர் விடுவித்ததாகவும் கூடக் கதைபரப்பியிருந்தார்கள்.
இதுபோன்ற கட்டுக்கதைகளை தற்பொழுது கூட நம்பிக்கொண்டிருக்கும் சில அறிவிலிகள் எமது சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் எமது சமூகத்தின் சாபக்கேடு.
உண்மையிலேயே இந்;தியாவைப் பொறுத்தவரையில், புலிகளின் தலைவரைத் தப்பவைக்கவேண்டிய ஒரு தேவை இருக்கவில்லை. புலிகளின் தலைவர் உயிருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு இருந்தது. புலிகளின் தலைவரை எப்படியாவது அழித்துவிட்டு, தமது அடுத்த காரியங்களைப் பார்ப்பதுதான் அவர்களது முக்கிய வேலையாக இருந்தது. அத்தோடு தமது படையினரின் வீரத்திற்கு களங்கம் விளைவித்துக்கொண்டிருந்த புலிகளின் தலைவரை எப்படியாவது பழிவாங்கிவிடவேண்டும் என்கின்ற வெறியும் அவர்களிடம் காணப்பட்டது. அப்படி இருக்க, புலிகளின் தலைவரை காப்பாற்றிப் பாதுகாக்க இந்தியத் தரப்பினர் விளைந்தார்கள் என்று கூறவது வேடிக்கையான ஒரு விடயம்தான்.
அப்படி புலிகளின் தலைவரை எதுவும் செய்யக்கூடாது என்கின்ற கொள்கை இந்தியாவிற்கு இருந்திருக்குமேயானால், அவர்கள் எதற்காக பல இந்தியப் படை வீரர்களை பலிகொடுத்து நித்திகைக்குள முற்றுகையை மேற்கொண்டிருக்க வேண்டும்? நித்திகைக்குளக் காட்டைச் சுறிவளைத்து தமது படையினரை நிலை நிறுத்தி புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாமே?
அடுத்ததாக, நித்திகைக்குள முற்றுகையின் போது சக்திவாய்ந்த குண்டுகள் பல புலிகளின் தளம் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் வீசப்பட்டன. இந்தியப் படையினரின் மிராஜ்-2000 என்கின்ற யுத்த விமானங்கள், எம்-24 ஹெலி;காப்படர்கள் நித்திகைக்குளக் காடு மீது, சகட்டுமேனிக்கு குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டன. நித்திகைக்குளக் காட்டை நோக்கி நூற்றுக்கணக்கான எறிகணைகள் பல முனைகளில் இருந்தும் வீசப்பட்டன. கார்ப்பெட் குண்டு வீச்சுக்களும் (Carpet bombing) மேற்கொள்ளப்பட்டன. புலிகளின் தலைவரை அழிக்கவேண்டும் என்கின்ற நோக்கம் இந்தியாவிற்கு இல்லை என்றால், அவர்கள் நித்திகைக்குளக் காட்டின் மிது வீசிய குண்டுகள் அனைத்திற்கும், “புலிகளின் தலைவரை மட்டும் தாக்கவேண்டாம்|| என்று உத்தரவிட்டா வீசியிருந்தார்கள்? அங்கு வீசப்பட்ட ஆயிரக்கணக்கான குண்டுகளில் ஒன்றாவது புலிகளின் தலைவர் இருந்த இடத்தில் வீழ்ந்து வெடித்திருந்தால், பலிகளின் தலைவர் உயிரிழக்க நேர்ந்திருக்கும். அப்படி இருக்க புலிகளின் தலைவரை தப்புவிக்கவேண்டும் என்று இந்தியா நினைத்தது என்று கதை விடுவதும், அந்தக் கதைகளை எது சமூகத்தில் சிலரே நம்புவதும் உண்மையிலேயே வேடிக்கைதான்.
ஆனாலும், விடுதலைப் புலிகளின் வீரம் தொடர்பாக ஈழத்தமிழ் மக்கள் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மத்தியில் இருந்த பிரமிப்பைச் சிதைக்கும் நோக்கத்தில் இப்படியான ஒருவித உளவியல் நடவடிக்கைகள் வதந்திகள் ரூபத்தில் மேற்கொள்ளப்பட்டன.
புலிகளின் தலைர் பற்றி பரப்பட்ட பல வதந்திகளுள், புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாகப் பரப்பட்ட மற்றொரு வந்தந்திதான் மிகவும் முக்கியமானது.
பின்றொரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், “உண்மையிலேயே நான் உயிருடன் இருக்கின்றேனா என்கின்ற சந்தேகம் எனக்கே ஏற்பட்டது|| என்று கூறும் அளவிற்கு குறிப்பிட்ட அந்த வதந்தி மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது.
அந்த சுவாரசியமான வதந்தி பற்றியும், வதந்தி மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்த உளவியல் நடவடிக்கை பின்நாட்களில் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடரும்..