அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-96) – நிராஜ் டேவிட்
இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியா எதற்காகத் தலையிடவேண்டிவந்தது என்று தற்பொழுது பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
இலங:;கையின் இனப்பிரச்சனை விடயங்களில் தமிழர்கள் தொடர்பில் ஒருவிதப் பாராமுகப் போக்கைக் கடைப்பிடித்துவந்த இந்தியா ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கைவிவகாரத்தினை நோக்கித் தனது பார்வையைச் செலுத்தியேயாகவேண்டிய நிலமை உருவானது.
1977ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் தனது அரசியல் பாதையில் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்த வெளிநாட்டுக் கொள்ளைகளே இந்தியாவை இலங்கையின் பக்கம் தனது பார்வையைத் திருப்பவைத்த ஒரு முக்கியமான காரணி என்று கூறலாம்.
‘இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம்| என்று கூறியபடி, திறந்த பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்த ஜே.ஆர். அரசு, மேற்கு நாடுகளின் பொருளாதாhரச் சந்தைகளுக்கு இலங்கையில் களம் அமைத்துக் கொடுத்திடும் ஒரு அதிரடி அரசியலை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது. இது இந்தியா அக்காலத்தில் கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு பாரியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததுடன், இலங்கையின் வளர்ச்சியையிட்டு இந்தியாவை பொறாமைகொள்ளவும் வைத்தது.
அத்தோடு, திருகோணமலையில் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற எண்ணெய் குதங்களை ஒரு அமெரிக்க நிறுவணத்திற்கு குத்தகைக்கு விடும் முயற்சியையும் இலங்கை அரசு திரைமறைவில் மேற்கொண்டிருந்தது.
கூட்டணி இரகசியமாக வழங்கிய ஆதாரங்கள்:
இலங்கை அரசினால் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் அனுதாபத்தை எப்படியாவது பெற்றுவிட பகிரதப்பிரயத்தனம் மேற்கொண்டிருந்த தமிழ் தலைவர்களுக்கு இந்த விடயம் அவலாகக் கிடைத்தது. எண்ணெய் குதம் விவகாரத்தை த.வி.கூ. தலைவர்கள் இந்தியாவின் காதுகளில் போட்டுவைத்ததுடன் அதற்கான ஆதாரங்களையும் இரகசியமாகத் திரட்டி இந்திய அரசின் பார்வைக்கு அனுப்பிவைத்தார்கள்.
இது இலங்கை விடயத்தில் இந்தியா அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த மற்றுமொரு காரணமாக அமைந்தது.
இந்தக் காலகட்டத்தில், இலங்கை அரசின் அடக்குமுறைகளினால் ஏற்கனவே இலங்கையை விட்டு வெளியேறி தமிழ் நாட்டில் தஞ்சமடைய ஆரம்பித்திருந்த ஈழப் போரளிகளின் தீவிரமான பிரச்சாரங்களும், செயற்பாடுகளும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் துன்பங்கள் பற்றிய ஆழ்ந்த அனுதாபத்தையும், உணர்ச்சி வேகத்தையும் ஏற்படுத்த ஆரம்பித்திருந்தன.
1981ம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது, உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிங்களப் படையினரால் குழப்பப்பட்டது, தமிழ் நாட்டில் இருந்து கதிர்காம யாத்திரை வந்த தனபதியின் கொலை போன்ற பல்வேறு சம்பவங்கள் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் கொந்தளிப்பின் விளைவாக ஏற்பட்ட அழுத்தங்கள், இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டேயாகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவின் மத்திய அரசிற்கு ஏற்படுத்தியது.
இந்திராவின் நிலைப்பாடு:
அனைத்திற்கும் மேலாக, 1980 ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறியிருந்த திருமதி. இந்திரா காந்தியின் கரிசனை ஈழத்தழிழர்களுக்குச் சார்பாக மாற ஆரம்பித்திருந்ததும், இந்திய நிலைப்பாட்டில் படிப்படியாக மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்தது.
தமிழ் நாட்டு மக்களிடம் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக அக்காலத்தில் ஏற்பட ஆரம்பித்திருந்த அணுதாபமும், தமிழ் நாட்டு அரசுடன் இந்திராவின் காங்கிரஸ் கட்சி அக்காலகட்டத்தில் செய்துகொண்டிருந்த தேர்தல் உடன்படிக்கையும், ஈழத்தமிழருக்குச் சார்பான ஒரு நிலைப்பாட்டை எடுத்தேயாகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவின் நடுவன் அரசிற்கு ஏற்படுத்தியிருந்தது.
விளைவு, இந்திரா தலைமையிலான இந்திய அரசின் தலையீடுகள் படிப்படியாக ஈழத்திழர்களுக்கு சார்பாக மாற ஆரம்பித்தது.
1983 ஜுனில் இலங்கை அரசினால் தமிழர்களது போராட்டங்களை அடக்குவதற்கென்று கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டப் பிரிவுகளை எதிர்த்ததன் மூலம் இலங்கையில் இந்தியாவின் தலையீடு ஆரம்பமானது. தொடர்ந்து இந்தியாவின் தலையீடுகள் 83 ஜுலைக் கலவரத்தில் தலையிட்டு சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது முதற்கொண்டு, இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட மனிதப் படுகொலையை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தியது, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய மண்ணில் புகலிடம் அளித்தது, ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியை வழங்கியது என்று தொடர்ந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கைப் பிரச்சனையில் ஈழத்தமிழருக்குச் சார்பான நிலைப்பாட்டை முழுமனதுடன் எடுத்திருந்ததுடன், அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் செயற்பட்ட முதலாவதும் இறுதியுமான ஒரே இந்திய தேசியத் தலைவர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் விடயத்தில் நம்பிக்கைத் துரோகமிழைத்த ராஜிவ் காந்தி:
திருமதி. இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து ஆட்சியைப் பொறுப்பேற்ற அவரது புதல்வர் ராஜீவ் காந்தி ஈழத் தமிழர் விடயத்தில் ஓரளவு அக்கரை காண்பிப்பவர் போன்று வெளிப்பார்வைக்கு செயற்படாலும், நிஜத்தில் அவர் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.
இந்தியாவின் சுயலாப நலன்களை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டங்களை மட்டுமே அவர் கையாண்டதுடன், ஈழத்தமிழர்கள் விடயத்தில் ராஜீவ் காந்தி ஒரு நம்பத்தகுந்த தலைவராக ஒருபோதும் நடந்துகொண்டதும் கிடையாது. அவரது சக்தியையும் மீறி தமிழ் நாட்டில் வளர்ந்துவிட்டிருந்த ஈழப் போராளிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்து, அவர்களை இந்தியாவின் ஒரு கூலிப்படையாக செயற்படவைக்கவே அவர் விருப்பம் கொண்டு செயற்பட்டு வந்தார்.
இந்திய உளவு அமைப்புக்களின் விருப்பமும், திட்டமும் கூட இதுவாகத்தான் இருந்தது. ஈழப் போரட்ட அமைப்புக்கள் இந்தியாவின் சொல்கேட்டு நடக்கக்கூடிய, இந்தியாவின் தேசிய நலன் சார்ந்து செயற்படக்கூடிய ஒரு கூலிப்படையாக செயற்படவேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்தியாவைக் கவணிக்காது மேற்குலக நாடுகளின் பக்கம் தனது பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருந்த இலங்கையை சிறிது தட்டி வைக்கும் நோக்கத்துடனேயே இந்தியா ஈழப்போரளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியிருந்தது. தமிழருக்கு ஒரு தனிநாட்டை அமைத்துக் கொடுக்கும் நோக்கம் இந்தியாவிற்கு என்றைக்குமே இருந்தது கிடையாது.
இப்படி இருக்கையில், இந்தியாவின் இந்த திட்டத்தைப் புரிந்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஒரு சில போராட்ட அமைப்புக்கள், இந்தியாவின் உளவுப் பிரிவினருக்குத் தெரியாமல் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், நிதி என்பனவற்றை இரகசியமாக பெற்று தம்மை வளர்த்துக்கொள்ள முயன்றதுடன், தனி ஈழம் ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் தம்மை சுயமாக வளர்த்துக்கொள்ளவும் முயன்றனர்.
சில ஈழப்போராட்ட அமைப்புக்களின் இந்த நடவடிக்கையானது ஈழப்போராளிகள் தமது கைகளைவிட்டுச் சென்றுவிடுவார்களோ என்கின்ற பயத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.
ஈழப் போரளிகளின் அசுர வளர்ச்சி, போராட்டக் களங்கில் அவர்கள் காண்பித்த வேகம், சர்வதேச ரீதியாக அவர்கள் பெற்றுக்கொள்ள ஆரம்பித்த ஆதரவுகள் என்பன, இந்த அமைப்புக்களின் செயற்பாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், இந்த அமைப்புக்கள் விடயத்தில் சற்றுக் கடுமையாக நடந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தையும் இந்திய அரசுக்கு ஏற்படுத்தியது.
இந்தியாவிற்கு ஏற்பட்ட இந்தக் ஷகட்டாயம்|, ஈழத்தமிழர் நலன்களில் இந்தியா கொண்டிருந்த உண்மையான நிலைப்பாட்டை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதாக அமைந்தது.
அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இந்தியாவின் மத்திய அரசாங்கம் ஈழப்போராளிகள் விடயத்தில் கடைப்பிடிக்க ஆரம்பித்த நடவடிக்கைகள், ஈழ விடுதலை பற்றி இந்தியாவின் திட்டத்தை தோலுரித்துக் காண்பிப்பதாக அமைந்ததுடன், இந்தியா பற்றி ஈழத்தமிழர்களுக்கும்- ஏன் தமிழ் இயக்கங்களுக்கும்கூட இருந்த நம்பிக்கை, எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதாக அமைந்திருந்தன.
இந்தியப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சதி:
ஈழப் போராளிகள் தனது கைகளை விட்டுச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவும், ஈழப் போராளிகள் இந்தியாவின் தயவில் மட்டுமே வாழவேண்டும் என்கின்ற பாடத்தை அவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கத்திலும் இந்தியாவின் மத்திய அரசாங்கம் அப்பொழுது சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது..
சென்னையில் இருந்த புலிகளின் அலுவலகங்கள் இந்தியப் பொலிஸாரால் முற்றுகை இடப்பட்டு புலிகளின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன் புளொட் அமைப்புக்கென்று வெளிநாடு ஒன்றிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயுதத் தொகுதியை இந்தியா இராணுவம் கைப்பற்றிக்கொண்டதுடன் அவற்றை மீளவும் அவர்களுக்கு வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தது. தமிழ் இயக்கங்களுடன் தொடர்புடைய மூன்று ஈழத்தமிழ் தலைவர்கள் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார்கள். இது போன்ற பல நடவடிக்கைகளை தமிழ் இயக்கங்களை அச்சுறுத்தும் நோக்கத்திலும், அவர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நோக்கத்திலும் இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது.
ரொமேஷ் பண்டாரி வெளியிட்ட அதிர்ச்சி தரும் கொள்கைகள்:
இந்த நேரத்தில் இந்தியாவின் வெளிநாட்டுச் செயலாளராக திரு.ரொமேஷ் பண்டாரி பதவி ஏற்றதைத் தொடர்ந்து, ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் உண்மையான நிலைப்பாட்டை ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ் இயக்கங்களின் பிரதிநிதிகள், த.வி.கூ. தலைவர்கள் போன்றவர்களை அழைத்த திரு ரோமேஷ் பண்டாரி, ‘இந்தியா ஈழத்தமிழர் தொடர்பாக கடைப்பிடித்துவரும், தொடர்ந்து கடைப்பிடிக்கப்போகும் கொள்கைகள்| என்ற அடிப்படையில் மூன்று முக்கிய விடயங்களை தெரிவித்தார்.
1. இலங்கையில் இந்தியாவின் இராணுவத் தலையீடு சாத்தியமற்றது.
2. தனிநாடு பிரிவினையை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.
3. இந்தியாவில் தற்பொழுதுள்ள ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்கு கூடுதலான அதிகாரத்தை இலங்கையில் தமிழ் மாநிலத்திற்கு வழங்குமாறு கோர முடியாது.
இவையே திரு.ரொமேஷ் பண்டாரி அறிவித்த இந்தியாவின் கொள்ளைகள்.
இந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்தியா எதிர்காலத்தில் செயற்படும் என்றும் அவர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
தமிழ் இயக்கங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள்.
பங்காளதேஷில் நடந்துகொண்டது போன்று, இந்தியா இலங்கைக்கு தனது இராணுவத்தை அனுப்பி தமிழ் மக்களுக்கு தனிநாட்டைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் மக்களுக்கும், ஒருசில தமிழ் ஆயுத இயக்கங்களுக்கும் இந்தியாவின் இந்த அறிவித்தல் பேரிடியாக அமைந்தது. இந்தியாவின் இந்த அறிவிப்பை உடனடியாக அவர்களால் நம்ப முடியாமல் இருந்ததுடன் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலகுவில் அவர்களால் ஜீரணித்துக்கொள்ளவும் முடியாது இருந்தது.
“இந்தியாவின் இந்த நிலைப்பாடு உண்மையானால் பின்னர் எதற்காக இந்தியா எங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது, எதற்காக எங்களைப் போராடச் சொன்னது?|| என்று இந்தியாவை மட்டுமே நம்பி இருந்த தமிழ் இயக்கங்கள் கேள்வி எழுப்பின. ஆனால் முற்று முழுதாக இந்தியாவின் தயவில் மட்டுமே வாழ்க்கை நடாத்திவந்த அந்த இயக்கங்களால் வெறும் கேள்விகளை மட்டுமே அப்பொழுது எழுப்ப முடிந்தது. அவர்களால் வேறு எதையுமே செய்ய முடியவில்லை. எனென்றால் இந்த இயக்கங்கள் வெளிப்பார்வைக்கு ஒரு விடுதலை அமைப்புப் போன்று தோற்றம் அளித்திருந்தாலும் உண்மையில் இவர்கள் இந்திய அரசின் அபிலாஷைகளை மட்டுமே நிறைவுசெய்ய உத்தரவிடப்பட்ட ஒரு கூலிப்படையாகவே கட்டமைக்கப்பட்டிருந்தார்கள். ( இதே அமைப்புக்கள்தான் பின்நாட்களில் இந்திய அமைதிப்படையுடன் இலங்கைக்கு வந்து, இந்தியா ஈழத் தமிழர்கள்; மீது மேற்கொண்ட அனைத்து அட்டூழியங்களுக்கும் உடந்தையாகவிருந்ததுடன், பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்கும் இந்தியாவின் எண்ணங்களுக்கு செயல் வடிவமும் கொடுத்தவர்கள்.)
தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று தனி நாடு ஒன்றைத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் இந்தியாவிற்கு என்றுமே இருந்தது கிடையாது. மேற்குலக நாடுகளின் பக்கம் சாய ஆரம்பித்திருந்த இலங்கை அரசை மிரட்டி பணியவைக்கும் நோக்கத்திற்கே ஈழப் போராட்ட இயக்கங்களைப் பயன்படுத்த இந்தியா எண்ணியிருந்தது. ஈழப் போராட்ட அமைப்புக்களை அது வளர்த்துவந்ததும், இலங்கை அகதிகளுக்கு இந்தியா புகளிடம் அளித்ததும், ஈழத்தமிழர்களுக்காக அது நீலிக்கண்ணீர் வடித்ததும் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான்.
அனால் ஒருசில தமிழ் இயக்கங்களது வளர்ச்சியின் வேகமும், அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தனித் தமிழீழம் அமைக்கும் தமது இலட்சியத்தில் காண்பித்த உறுதி போன்றன, இந்தியாவின் உண்மையான பக்கத்தை தமிழ் மக்களுக்கும் உலகிற்கும் அவசர அவசரமாக வெளிப்படுத்தவேண்டிய அவசியத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவில் தனது பார்வையில் தங்கியிருந்து சிறுசிறு தாக்குதல்களை நடாத்திவந்த தமிழ் இயக்கங்கள் ஈழத்தில் தளம் அமைத்து போராட்டம் நடாத்த ஆரம்பித்திருந்தமை, இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக இருந்த சில இயக்கங்கள் ஈழத்தில் மக்கள் ஆதரவை இழந்த நிலையில் மாற்று இயக்கங்களால் அழிக்கப்பட்டமை, தனிஈழம் கைக்கெட்டிய தூரத்தில் இருந்தமை போன்றன இலங்கை விடயத்தில் இந்தியா நேரடியாகத் தலையிட்டு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டிய அவசியத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.
ஈழம் வேண்டிப் போராட்டம் நடாத்திக்கொண்டிருந்த பிரதான போராட்ட அமைப்புக்கள் தனது பிடிக்குள் இல்லாததாலும், இந்தியா தனது நலனுக்காகவென்று வளர்த்துவந்த இயக்கங்கள் போராட்ட சக்தியை இழந்துவிட்டிருந்ததாலும், தமிழ் விடுதலை இயக்கங்கள் மூலமாக காரியம் சாதிக்கும் தனது திட்டத்தை இந்தியா கைவிட்டதுடன், தமிழ் இயக்கங்களை கைகழுவிவிடவும் இந்தியா தீர்மாணித்தது.
தனி நாடு அல்லாத ஒரு அரைகுறைத் தீர்வை தமிழ் இயக்கங்கள் மீது தினிக்கும் பல நடவடிக்கைகளை இந்தியா அடுத்தடுத்து எடுக்கத் தலைப்பட்டது. ஸ்ரீலங்கா அரசுடன் அல்லது ஸ்ரீலங்கா அரச பிரதிநிதிகளுடன் தமிழ் இயக்கங்களுக்குச் சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து, அரைகுறை தீர்வொன்றை ஈழத்தமிழர் மீது திணித்து, இலங்கைப் பிரச்சனையில் கையோங்கிய நிலையில் காணப்பட்ட ஈழப்போராளிகளின் பங்கை குறைத்துவிடும் முயற்சியில் இந்தியா ஈடுபட ஆரம்பித்தது.
ஆனால், தீர்வு விடயத்தில் ஈழப் போராட்ட அமைப்புக்கள் மிகவும் கவனமாகவே காய்நகர்த்தின. இந்தியாவினதோ அல்லது ஸ்ரீலங்காவினதோ எந்தப் பொறிகளுக்குள்ளும் அவை விழுந்துவிட தயாராக இருக்கவில்லை.
இந்தியாவின் உண்மையான எண்ணங்களை அறிந்திருந்த இயக்கங்கள் இந்தியாவின் விடயத்தில் கவனமாகவே நடந்துகொண்டன.
தமிழர்களது விடுதலை சம்பந்தமாக இந்திய அரசாங்கம் கொடுத்துவந்த நிர்பந்தங்களை தட்டிக்கழித்து தமது தலைவிதியை தாமே தீர்மாணிக்கவேண்டும் என்ற விடயத்தில் மிகவும் கவனமாகவே செயற்பட்டார்கள்.
உதாரணமாக, ஜுலை 1985 இல் நடைபெற்ற திம்பு மாநாட்டில் தமிழ் அமைப்புக்கள் தாம் எடுத்த நிலைப்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்புக்களுக்கும் உடன்படாது உறுதியாக இருந்தார்கள். அதேபோன்று, 31.08.1985 அன்று இந்தியா சென்றிருந்த இலங்கைத் தூதுக் குழுவிற்கும், இந்திய அரசிற்கும் இடையில் டெல்லியில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரைகுறை ஒப்பந்தத்தை தமிழ் இயக்கங்கள் ஏற்றேயாகவேண்டும் என்ற இந்திய அரசின் நிர்ப்பந்தத்தை தமிழ் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாததுடன், அதனை பகிரங்கமாகவே எதிர்த்தும் இருந்தார்கள்.
அதேபோன்று, 1986 ஜுலையில்; இந்தியா கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா அரசுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவதற்கும் தமிழ் இயக்கங்கள் மறுப்புத் தெரிவித்திருந்தன.
தமிழ் இயக்கங்களின் இந்த நடவடிக்கைகள், இந்தியா தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களில் இருந்த தனது பிடிமாணங்களை இழந்து வருவதை உணரும்படி செய்தன.
தமிழ் ஈழ இயக்கங்களை தொடர்ந்தும் தனது தேச நலன்களுக்காப் பயன்படுத்த முடியாது என்ற உண்மையை இந்தியா படிப்படியாக உணரத் தொடங்கியது.
இது, இயக்கங்கள் விடயத்தில் மாற்று நடவடிக்கை ஒன்றை எடுக்கும் முடிவுக்கு இந்தியாவை இட்டுச்சென்றது.
இந்தியாவின் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி தமிழ் இயக்கங்களைப் பலவீனப்படுத்தும் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தத் தயாரானது.
தமிழ் நாட்டு மக்கள்மத்தியில் ஈழப்போராளிகள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் சதித்திட்டமும் அதில் அடங்கியிருந்தது.
ஈழப்போராட்ட அமைப்புக்களிடையே பிழவுகளை ஏற்படுத்தவும், ஈழப்போரட்ட அமைப்புக்களை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தவும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சதி நடவடிக்கைகளை அடுத்தவாரம் பார்ப்போம்
தொடரும்…