ஈழமண்ணுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்ட தமிழ் அமைப்புக்கள்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-16) – நிராஜ் டேவிட்

ஈழ மண்ணில் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த மற்றைய தமிழ் அமைப்பு உறுப்பினர்களை இந்தியா மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்திருந்தது.
‘அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட| என்று கூறியே இந்த உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். இவர்கள் தமிழ் பிரதேசங்களில் முகாம்கள் அமைக்கவும், அலுவலகங்கள் அமைத்துச் செயற்படவும் இந்தியப்படை அனுமதி அளித்திருந்தது.
இவர்களின் பாதுகாப்பிற்கென்று பெருமளவு ஆயுதங்களும் இந்தியப்படையினரால் வழங்கப்பட்டிருந்தன.
யுத்தநிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டு, ஸ்ரீலங்காப் படைகள் முகாமிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்திய அமைதி காக்கும் படைகள் அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதுவும் புலிகளிடம் இருந்து ஆயுதக் களைவு இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், மற்றய தமிழ் இயக்கங்களுக்கு இந்தியப்படை ஆயுதங்களை வழங்கி வந்தது நோக்கத்தக்கது.

புலிகளின் சந்தேகம்:
இந்த விடயம் புலிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
களத்தில் எந்தவித ஆபத்தும் இல்லாத நிலையில், அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவென வந்த இந்த தமிழ் அமைப்புக்களுக்கு எதற்காக ஆயுதங்கள் வழங்கப்படவேண்டும் என்று புலிகள் கேள்வி எழுப்பினார்கள்.
மாற்று தமிழ் இயக்கங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கும் இந்திய ‘றோ| இனது திட்டம் புலிகளுக்கு நன்றாகவே புரிந்தது.

ஈழ மண்ணில் மக்கள் மத்தியில் இந்தியப்படைகள் போதிய புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், புலிகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், மக்கள் மத்தியில் அதனை நியாயப்பபடுத்தவும், புலிகளுக்கு மாற்றீடாக பலம்வாய்ந்த அமைப்புக்கள் ஈழத்தில் இயங்கவேண்டியது அவசியம் என்று இந்திய உளவு அமைப்பான ‘றோ| எண்ணியிருந்தது. அதற்காகவே இந்த அமைப்புக்களை அது திட்டமிட்டு ஈழத்திற்கு அழைத்து வந்திருந்தது.

தமிழ் அமைப்புக்களின் நடவடிக்கைகள்:
புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு தப்பியோடிய மற்றய தமிழ் அமைப்புக்கள் இந்தியப்படையினரால் மீண்டும் ஈழமண்ணிற்கு அழைத்துவரப்பட்டதானது, அந்த அமைப்புக்களைப் பெறுத்தவரையில் ஒரு பாரிய வரப்பிரசாதமாகவே இருந்தது.
அரசியல் அனாதைகளாக, அகதிகள் போன்று அயல்நாட்டிற்கு தப்பியோடிய இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள், அதிக அதிகாரங்களுடன் மீண்டும் தமிழீழம் திரும்பியது அவர்களுக்கு ஒரு பெரிய விடயமாகவே பட்டது. எனவே, இப்படியான கிடைத்ததற்கரிய சந்தர்ப்பத்தை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவே நினைத்தார்கள். இந்திப் படை அதிகாரிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் தமது நடவடிகளை அமைப்பதைத் தவிர இந்த அமைப்புக்களுக்கு வேறு மார்க்கமும் இருக்கவில்லை.
ஏற்கனவே புலிகளை எதிரிகளாக நினைத்து செயற்பட்ட இந்த அமைப்புக்கள், புலிகளை முற்றாகவே தமிழ் மண்ணில் இருந்து ஓரம்கட்டிவிடும் ‘றோ| இனது திட்டத்திற்கு முழுமூச்சுடன் துனைபோக ஆரம்பித்தன.

இந்த அமைப்புக்கள் ஈழத்தில் கால்வைத்தது முதல், புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தார்கள். தமது உறவினர்கள், ஆதரவாளர்கள், நன்பர்கள் என்று அரம்பித்த இவர்களது புலி எதிர்ப்புப் பிரச்சாரங்கள், படிப்படியாக வளர்ச்சி அடைந்து சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குள் என்று சென்றுகொண்டிருந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து ஷதிறீ ஸ்டார்| என்ற பெயரில் தமது நடவடிக்கைளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதுடன் மட்டும் இவர்கள் தமது பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டுவது, கடத்துவது, பொதுமக்களிடம் இருந்து பணம் பறிப்பது என்று தமது செயற்பாடுகளை அதிகரித்துக்கொண்டே சென்றார்கள். ஆயுதங்களுடன் சென்ற இவர்கள் புலி உறுப்பினர்களையும் நேரடியாக மிரட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

புலிகள் அதிருப்தி:


மாற்றுத் தமிழ் அமைப்புக்கள் ஈழத்தில் இந்தியப்படையினரால் வளர்க்கப்பட்டு வருவது பற்றி விடுதலைப் புலிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்கள்.
இது தொடர்பாக அந்நேரத்தில் புலிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிட்டு, சமாதான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டுவரும் இந்த வேளையில், இந்தியப்படைகள் எதற்காக மாற்றுத் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி தமிழ் கிராமங்களுக்கு அனுப்பி வருகின்றது? இது எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம், தமிழர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது| என்று அந்த அறிக்கையில் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

இதேபோன்று, மாற்று தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக புலிகள் தமது அதிருப்தியை பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டிருந்தார்கள்.
இந்தியப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெணரல் திபீந்தர் சிங் ஒரு தடவை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட பொழுது, அங்குள்ள தமிழ் அமைப்புக்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். அப்பொழுது திருகோணமலையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் 54வது காலாட்படையின் துணைத்தளபதி பிரிகேடியர் குல்வந் சிங் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் அமைப்புக்களின் பிராந்திய பொறுப்பாளர்கள் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகள் சார்பாக, புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளர் புலேந்திரனும் அங்கு வருகை தந்திருந்தார்.

புலிகளின் திருகோணமலைத் தளபதி புலேந்திரன்

சந்திப்பு ஆரம்பமாகி அங்கு பல விடயங்கள் விவாதிக்கப்பட்ட போதும், புலேந்திரன் வாய் திறக்கவில்லை. வழமைக்கு மாறாக, ஒரு அசாதிய அமைதியை அங்கு அவர் கடைப்பிடித்தார். இது அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவென வந்திருந்த அனைவருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
சந்திப்பு முடிவடைந்த பின்னர் புலேந்திரனை தனியாகச் சந்தித்த இந்தியப்படை உயரதிகாரி திபீந்தர் சிங், புலேந்திரனின் அமைதிக்கான காரணத்தை வினவினார். அதற்கு பதிலளித்த புலேந்திரன், “நம்பிக்கைத் துரோகம் செய்யும் இதுபோன்ற கோழை அமைப்புக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள விரும்பவில்லை. இனிமேல் எதாவது பேசுவதாக இருந்தால், புலிகளுடன் தனியாகப் பேசுங்கள்|| என்று இந்தியப்படை உயரதிகாரியிடம் தெரிவித்;தார்.

தமிழ் அமைப்புக்கள் தொடர்பான புலிகளின் அதிருப்தியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் நேரடியாகவே, இந்தியப்படை உயரதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
15.08.1987 அன்று இந்தியப்படை உயரதிகாரி திபீந்தர் சிங்குடன் யாழ்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, புலிகளின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்:
“புலிகள் மேற்கொண்டிருக்கும் ஆயுதக் கையளிப்பைத் தொடர்ந்து பலவீனமடைந்திருக்கும் புலி உறுப்பினர்கள் மீது மற்றய தமிழ் குழுக்களைக் கொண்டு தாக்குதல் நடாத்தும் நோக்குடன் றோ| அமைப்பு செயற்படுவது பற்றி எங்களுக்கு பல தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக ‘திறீ ஸ்டார்| என்ற அமைப்பை இந்த விடயத்தில் றோ| தூண்டிவிட்டுள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.|| என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். (இதுபற்றி, பின்னர் திபீந்தர் சிங் எழுதியிருந்த IPKF in Sri Lanka என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளர்.)
இந்தியப்படை உயரதிகாரிகள் பிரபாகரனின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்கள்.
புதுடில்லியும், இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
ஆனால், மாற்று தமிழ் குழுவினரால் புலிகளின் ஒரு முகாம்; சுற்றிவளைக்கப்பட்டு, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் வெளித்தெரிந்தபோதுதான், புலிகளின் குற்றச்சாட்டுக்களில் இருந்த உண்மைத்தன்மையை அனைவரும் உனர்ந்துகொண்டார்கள்.

மன்னாரில் விடுதலைப் புலிகள் மூவர் புளொட்| அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நிலமையை மேலும் சிக்கலாக்கியது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த கில்மன்(அடம்பன்), அர்ச்சுனா(கல்வியன்காடு), ரஞ்சன்(பிச்சைக்குளம்) போன்ற உறுப்பினர்கள் புளொட்| அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புலிகள் தமது ஆயுதக் கையளிப்பு தொடர்பாக பகிரங்கமாகவே மாற்று நிலைப்பாடொன்றை எடுக்க ஆரம்பித்தார்கள்.
ஆயுதங்களை ஒப்படைப்பது தமது உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று பலிகள் தெரிவித்தார்கள். தம்மிடம் இருந்து ஆயுதங்களை களைந்துவிட்டு, மாற்று அமைப்புக்களைக் கொண்டு தமக்கெதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்தியாவின் எண்ணத்தை புலிகள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.
புலிகளின் கருத்துக்களில் அடங்கியிருந்த நியாயத்தை தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்