இந்தியப் படையினருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-11)- நிராஜ் டேவிட்

இலங்கை வந்த இந்தியப் படையினருக்கு யாழ்பாணச் சூழலும், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன. இலங்கைத் தமிழர்கள் எனப்படுபவர்கள் இத்தனை அந்தஸ்துடன் வாழ்க்கை நடாத்தும் ஒரு பிரிவினர் என்பது சாதாரண இந்திய ஜவான்களுக்கு ஆச்சரியமான ஒரு விடயமாகவே இருந்தது.

இந்திய இராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களிலில் இருந்தே வந்தவர்கள். அத்தோடு 80களில் இந்தியமக்களின் வாழ்க்கை முறை மிகவும் தரம் குறைந்ததாகவே காணப்பட்டிருந்தது. மிகவும் சிறிய வீடுகளை உடையவர்களும், நாளாந்த உணவுக்கே கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்வர்களாகவே இங்கு வந்திருந்த அனேகமான இந்தியப்படை வீரர்கள் இருந்தார்கள்

அத்தோடு, இப்படியான பின்னணியில் இருந்து வந்த இந்திய இராணுவ வீரர்கள் இலங்கையில் தரை இறங்கியபோது, அவர்கள் எதற்காக இங்கு வருகின்றார்கள் என்பது பற்றிய தெளிவும் அவர்களுக்கு போதிய அளவு வளங்கப்பட்டிருக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை பற்றி இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்கள், இலங்கைத் தமிழர்களை ஒரு பரிதாபமான ஜென்மங்களாகவே அவர்களது கற்பனையில் வடித்திருந்தது. மிகவும் பரிதாபகரமான ஒரு மனிதக் கூட்டத்தை தாம் இலங்கையில் சந்திக்கப்போகின்றோம் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து மிகவும் வறுமையில் பரிதவிக்கும் ஒரு பிரதேசமாகத்தான் யாழ்ப்பாணத்தையும், இங்கு வாழும் மக்களையும் இந்திய ஜவான்கள் கற்பனையில் எதிர்பார்த்து வந்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் யாழ்பாணத்தில் நடமாடத் தொடங்கிய போது அவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்து வந்ததற்கு மாறாக யாழ்ப்பாணமும், அங்கு வாழ்ந்த மக்களும் காணப்பட்டார்கள். யாழ்பாணத்தில் இருந்த வீடுகள் அவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. யாழ்பாணத் தமிழர்களின் உணர்ந்த வாழ்க்கைத்தரம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

யாழ்ப்பாண மக்கள் நல்ல தரமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். அங்கிருந்த வீடுகள் அனைத்தும் விசாலமாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவே இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள், ரேடியோக்கள் என்று பலவிதமான மின்சார உபகரணங்கள் காணப்பட்டன. கடைகள் அனைத்திலும் நவீன ஜப்பான் பொருட்கள் நிறைந்திருந்தன. இந்தியா திறந்த பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்திருக்காத அந்தக் காலத்தில், இந்தியாவில் ஒரு பெரிய அதிகாரியின் வீட்டில் கூட இப்படியான சௌகரியங்கள் காணப்படுவது கிடையாது. யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்திப்படை வீரர்களுக்கு இவைகள் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

இந்தியாவில் தண்ணீர், மற்றும் மலசலகூட வசதிகள் அவ்வளவாக கிடையாது. கிரமங்களில் குளங்களிலும், வாய்கால்களிலும்தான் தமது தண்ணீர் தேவைகளை பெரும்பாண்மையான மக்கள் பூர்த்தி செய்வது வழக்கம். சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். ஒரு குடம் தண்ணீருக்காக நொடுநேரம் வரிசையில் காத்திருக்கவேண்டும். இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்வதில் கூட இந்தியாவில் பலவித சிக்கல்கள் உள்ளன. ஒரு சிறிய செம்பு நீரில் தமது காலைக் கடன்களை முடிக்கவேண்டிய கட்டாயம் சாதாரண மக்களுக்கு அங்கு காணப்பட்டது. அங்கு தெருக்களிலும் வீதி ஓரங்களிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மலசலம் கழிப்பது சாதாரண ஒரு விடயம். இப்படியான பின்னணியில் இருந்து வந்த இந்தியப்படை வீரர்களுக்கு, யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வீடு கிணறும் மலசல கூடமும் இருப்பது பெரிய விடயமாகத் தென்பட்டது.

இந்தியாவில் உள்ளது போன்று, தெருவோரங்களில் வாழ்க்கை நடாத்தும் மனிதக்கூட்டங்களை அவர்களால் யாழ்ப்பாணத்தில் காணமுடியவில்லை.

இந்தியப்படை வீரர்கள் யாழ்பாணத்தில் வந்திறங்கியதும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். “என்ன செழிப்பான பூமி|| என்று தமிழ் நாட்டு வீரர்கள் தமது வியப்பை வெளிப்படுத்தினார்கள். “இது எம் நாட்டு கேரளா போன்று இருக்கின்றது|| என்று சிலரும், “இது குட்டி சிங்கப்பூர்|| என்று மற்றும் சிலரும் வியப்படைந்தார்கள்.

‘இலங்கையில் நாளாந்தம் தமிழ் மக்கள் சிங்களவர்களால் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்| என்று கேள்விப்பட்டிருந்த இந்திய ஜவான்கள், யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களையே காணாததால், சிங்களவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று பொதுமக்களிடம் கேட்கும் நிலையில் காணப்பட்டார்கள்.

வல்வெட்டித்துறை பிரதேசத்திற்கு சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், ஒரு மீனவக் கிராமம் இத்தனை செழிப்பாக இருப்பது கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள். அங்கிருந்த மக்களிடம், “நீங்கள் எதற்காகத் தனி நாடு கேட்கின்றீர்கள்? இங்குதான் உங்களுக்கு அனைத்து வசதிகளும் தாராளமாக இருக்கின்றனவே? சொல்லப்போனால், இந்தியாவில் தமிழ் நாட்டு தமிழர்கள் அனுபவிப்பதை விட ஈழத்தமிழர்கள் அதிக சுதந்திரத்தை அணுபவிக்கின்றீர்கள். உங்களுக்கென்று முழுநேர தமிழ் வானொலி சேவை இருக்கின்றதுளூ உங்களது ரூபாய் நோட்டில் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றது. இங்கு சிங்களத்தையே காண முடியவில்லை. நீங்கள் எதற்காக தனிநாடு கேட்டுப் போராடுகின்றீர்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை|| என்று தெரிவித்தார்கள்.

இந்திய ஜவான்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது யாழ்ப்பாண விஜயத்தை வெளிநாடொன்றிற்கு சுற்றுலா வந்தது போன்றே கருதினார்கள். வீடியோ ரெக்கோடர்கள், டீவீக்கள், மின்சார உபகரணங்கள் என்று வெளிநாட்டுப் பொருட்களாக வாங்கித்தள்ளினார்கள்.

அவசரப் பயணம்
சாதாரன இந்திய ஜவான்களின் நிலைதான் இதுவென்றால், இந்தியப்படை அதிகாரிகளின் நிலையும், இதற்குச் சற்றும் குறையாமலேயே இருந்தது.

இந்தியப்படை அதிகாரிகளுக்கும் தாம் இலங்கைக்கு வந்ததற்கான உண்மையான நோக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தாம் இலங்கையில் செய்யவேண்டிய பணி பற்றிய அறிவுறுத்தல்களும் சரியானபடி வழங்கப்பட்டிருக்கவில்லை. கடுமையான இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு முகாம்களிலும், பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களிலும் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, இலங்கைக்கான இந்த பயண உத்தரவு மிகக் குறுகிய ஒரு கால அவகாசத்திலேயே வழங்கப்பட்டிருந்தது. அனேகமான இந்தியப்படை அதிகாரிகளுக்கு தமது இலங்கைப் பயணம் பற்றி தமது உறவுகளுக்கு அறிவிக்கக்கூட அவகாசம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கையில் வந்திறங்கிய முதலாவது இந்தியப் படையணிகளுக்கு தலமை தாங்கிவந்த மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் அவர்களுக்குக் கூட தமது இலங்கைப் பயணம் பற்றிய முழு விபரமும் சரியானபடி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனை, அண்மையில் செய்தி ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில் உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டிருந்தார்.

“வெளிநாடு ஒன்றில் ஒரு பயிற்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய நான், செகுந்தலாபாத்தை சென்றடைந்தேன். விமான நிலையத்தில் நான் வந்திறங்கியபோது, அங்கு என்னுடைய உப இராணுவ உத்தியோகத்தர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ‘எதற்காக இங்கு வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றீர்கள்| என்று அவர்களிடம் கேட்டேன். எனெனில் என்னை வரவேற்ற எனது உதவி உத்தியோகத்தர் ஒருவர் மட்டுமே வருவது வழக்கம்.
அதற்கு அவர்கள், “சேர், முதலாவது விமானம் இன்றிரவு ஒரு மணிக்கு புறப்படுகின்றது|| என்று தெரிவித்தார்கள்.
‘விமாணம் எங்கே புறப்படுகின்றது| என்று நான் அவர்களிடம் கேட்டேன். ‘ஸ்ரீலங்காவிற்கு| என்று பதில் வந்தது.

அப்பொழுது நேரம் காலை 10 மணி. இந்த அளவு குறுகிய நேர இடைவெளியில் எப்படி இதனை மேற்கொள்ளுவது என்று எனது சக அதிகாரிகளிடம் வினவினேன். அதற்கு அவர்கள், “சேர், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விட்டது. இந்தியாவின் பிரதம மந்திரி தற்பொழுது கொழும்பில் இருக்கின்றார். இந்திய இராணுவத்தின் தளபதி திபீந்தர் சிங்கை அவர் தொலையேசியில் தொடர்பு கொண்டு இலங்கைக்கு இந்திய இராணுவத்தின் ஒரு டிவிசனை உடனடியாக நகர்த்தும்படி கூறியுள்ளார்|| என்று தெரிவித்தார்கள்.

எல்லோரையும் கட்டுப்பாட்டு காரியாலயத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டுவிட்டு, நானும் அங்கு சென்று எமது அவசர இலங்கை பயணம் பற்றி அவசர அவசரமாக விவாதித்தோம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய தொலை நகல் செய்தி எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இலங்கைக்குச் சென்று அங்கு சமாதானத்தை நிலைநாட்டும்படியாக எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

கடைசியில் மறுநாள் காலை 5 மணிக்கு எனது விமானம் செகுந்தலாபாத்தில் இருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நிடமும் அங்கிருந்து ஒவ்வொரு விமானம் இலங்கைக்கு புறப்பட்டபடி இருந்தது.

எந்தவித ஏற்பாடுகளும் இன்றி நாங்கள் இலங்கைக்குப் புறப்பட்டோம். எங்களது எதிரி யார்?, அவர்களது பலம் என்ன? – போன்ற புலனாய்வு விபரங்கள் எதுவும் இல்லாமலேயே எங்களது நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவேண்டி இருந்தது. இலங்கை தொடர்பான ஒரு ஒழுங்கான வரைபடம் கூட எங்களிடம் இருக்கவில்லை. என்னுடன் இருந்த மேணன் என்ற ஒரு அதிகாரியிடம் இலங்கை வரைபடம் ஒன்று இருந்தது. அவரிடம் அதைப் பெற்று போட்டோ பிரதி எடுத்தே என்றுடைய மற்றய அதிகாரிகளுக்கு வழங்கினேன்…|| இவ்வாறு, மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் தனது செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு தொடர்பான தீர்மாணங்கள் அனைத்தையும், ராஜீவ் காந்தியும், சில இராஜதந்திரிகளும், றோ அமைப்புமே எடுத்துவந்தது.

பகிரல்

கருத்தை பதியுங்கள்