அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம்?!– நிராஜ் டேவிட்

0
(விடுதலைப் புலிகள் மீதான 36 நாடுகளின் தடை தொடர்பாக 2013.07.01 இல் எழுதப்பட்ட கட்டுரை)

இந்தத் தலைப்பு எம்மில் பலருக்கு ஒரு புதிய செய்தியாக இருக்கலாம்.

சிலருக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியாகக்கூட இருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு செய்தி சில மேற்குலக ஊடகங்களிலும், பயங்கரவாதம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளிலும் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்ததை நாம் மறுத்துவிட முடியாது.

1993ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரத்தைக் குறிவைத்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் குண்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். (2001 செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலுக்கு சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது).

660 கிலோ வெடிமருந்து நிரப்பட்ட ஒரு வாகனத்தை இரட்டைக் கோபுரத்தின் நிலக்கீழ் வாகனத் தரிப்பிடத்தில் வெடிக்க வைத்து இரண்டு கோபுரங்களையும் முற்றாகவே தகர்த்து விடுவதே தீவிரவாதிகளின் திட்டமாக இருந்தது. இஸ்ரேலுக்கு உதவுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கும். குண்டு நிரப்பப்பட்ட வாகனம் சரியான மையப் பகுதியில் நிறுத்தி வெடிக்க வைக்கப்படாத காரணத்தால், அந்தத் தாக்குதல் எதிர்பார்த்த பலனை தீவிரவாதிகளுக்கு வழங்கியிருக்கவில்லை.

அந்தக் குண்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். 1042 பேர் காயம் அடைந்தார். அமெரிக்காவை மாத்திரமல்ல, முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த தாக்குதல் அது.

அந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலை திட்டமிட்ட நபரின் பெயர் ரம்சி யூசுப் (Ramzi Yousef). பாகிஸ்தானியப் பெற்றாருக்கு குவைத்தில் வைத்து பிறந்த இவர், அமெரிக்காவிற்கு அகதியாகச் சென்று அங்கு தங்கியிருந்து இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் திட்டமிட்டார். நிறைவேற்றியும் இருந்தார்.

தாக்குதலை முடித்துக்கொண்டு பாகிஸ்தானுக்குத் தப்பி வந்த ரம்சி யூசுப்பை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ( Inter-Services Intelligence ISI) மற்றும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு பிரிவினர்( U.S. Diplomatic Security Service) 1995ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் வைத்து கைது செய்திருந்தார்கள்.

அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட ரம்சி யூசுப்பை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 240 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அமெரிக்காவின் அதி உச்சப் பாதுகாப்புடன் கூடிய Supermax prison ADX Florence சிறைச்சாலையில் ரம்சி யூசுப் தற்பொழுது சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

சர்வதேசப் பயங்கரவாதம் என்ற தலைப்பின் கீழ் மிகவும் பிரபல்யமான ஒரு சம்பவம் இது. அமெரிக்காவையும், மேற்குலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு முக்கிய சம்பவம் இது.

இந்தச் சம்பவத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தொடர்புபடுத்தி வெளியான செய்தி ஒன்றுதான் இந்தச் சம்பவம் பற்றி கொஞ்சம் கரிசனையைச் செலுத்தவேண்டி நிர்ப்பந்தத்திற்கு எங்களை இட்டுச் செல்கின்றது.

மேற்படி சம்பவம் அமெரிக்கா, இஸ்லாமியத் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம். இதில் புலிகள் அமைப்பு எங்கிருந்து காட்சிக்குள் வருகின்றது என்று நீங்கள் கேட்கலாம்.

இஸ்லாமியத் தீவிரவாதி ரம்சி யூசுப் அமெரிக்காவுக்கு அகதியாகப் போனார் என்று சற்று முன்னர் பார்த்திருந்தோம் அல்லவா? அவ்வாறு அவர் பொய்ப் பெயரில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான போலிக் கடவுச்சீட்டை விடுதலைப் புலிகளே தயாரித்து வழங்கியிருந்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.

புலிகள் மீதான இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டை தெற்காசியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய பதிவுகளை மேற்கொண்டு வருகின்ற பிரபல நிறுவனமாகிய South Asian Terrorism Portal  முன்வைத்திருந்தது.

இதேபோன்றதான குற்றச்சாட்டை பயங்கரவாதம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பார்வையைச் செலுத்தி வருகின்ற வேறு பல அமைப்புக்களும், ஆய்வாளர்களும் கூட வெளியிட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற இலங்கை இந்திய அரசுகளின் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன என்பதுதான் இங்கு நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம்.

இந்தக் குற்றச்சாட்டுப் பற்றிய உண்மைத்தன்மையை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்காரவாத அமைப்பாக அடையாளப்படுத்தும் சிறிலங்காவினதும், இந்திய அரசினதும் பிரச்சார யுத்தியின் ஒரு வெளிப்பாடாக இந்தக் குற்றச்சாட்டு இருக்கலாம்.

அல்லது போலிக் கடவுச்சீட்டுத் தயாரிக்கும் ஒரு ஈழத்தமிழர் ரம்சி யூசுப் என்பவரது உண்மையான பின்னணி தெரியாத நிலையில் மேற்கொண்ட தனிப்பட்ட நடவடிக்கையாக இது இருக்கலாம்.

அல்லது போலிக் கடவுச் சீட்டுத் தயாரிக்கும் அந்த ஈழத் தமிழர் புலம் பெயர் நாடொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுதாபியாக அல்லது ஆதரவாளராக அல்லது உறுப்பினராகக் கூட ஒருவேளை இருந்திருக்கலாம்.

ஆனாலும் ஒரு இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் புலிகள் என்ற ஒரு போராட்ட அமைப்பின் செயற்பாடுகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி சங்கடத்திற்குள் ஆழ்த்தக்கூடியதான ஒரு குற்றச்சாட்டு இது என்பதில் சந்தேகம் இல்லை.

புலம்பெயர் மண்ணில் ஈழத் தமிழன் ஒருவன் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளுகின்ற சட்டவிரோதச் செயல்கள் எப்படி ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருக்கின்றது என்பதற்கு மேலே குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவம் ஒரு சிறிய உதாரணம்.

சரி இனி கட்டுரைக்குள் நுழைவோம்

கடந்த 30.05.2013 அன்று அமெரிக்க அரசாங்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் புலிகளது சர்வதேச நிதிக் கட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படு நிலையிலேயே இருப்பதாகவும், புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியாக ஆட்கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை என்பது சம்பிரதாயமான ஒன்று என்பதும் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத ஒன்று என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நாம் வேறு சில விடயங்கள் பற்றி நிச்சயம் சிந்தித்தேயாகவேண்டும்.

அதுவும் ஆயுத ரீதியான எமது போராட்டம் முற்றுமுழுதாகவே தோல்வியடைந்துவிட்டுள்ள இன்றைய நிலையில், இலங்கையை மையப்படுத்தி நடைபெறுகின்ற எமது அரசியல் போராட்டங்கள் எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும்; மிகக் கடுமையாக அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டு விடக்கூடிய இந்த ஆபத்தான நிலையில், சர்வதேச இராஜதந்திரப் போராட்டம் ஒன்றை மாத்திரமே செய்யக்கூடிய இக்கட்டான நிலையில் நாம் நின்று கொண்டிருக்கும் இன்றைய நிலையில், சர்வதேச தளங்கள் பற்றிய அக்கறையையும், அவதானத்தையும் நிச்சயம் நாம் செலுத்தியேயாக வேண்டும்.

அதுவும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தலைமையின் கீழ் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமானால் தொடர்ந்து இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கின்ற சில விடயங்கள் பற்றி நாம் அக்கறைப்பட்டேயாக வேண்டும்.

அமெரிக்கத் தேசமானது விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 1997ம் ஆண்டு அறிவித்திருந்தது.

அதாவது சிறிலங்கா தேசம் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்கா புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக முதன்முதலில் இந்தியாதான் பிரகடனப்படுத்தியிருந்தது. இந்தியாவின் முன்நாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி விடுதலைப் புலிகளை இந்தியா 1992ம் ஆண்டு தடை செய்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 1997ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி இணைத்துக் கொண்டது. (அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை விஷேட சர்வதேச பயங்கரவாதிகள் அமைப்பாக (Specially Designated Global Terrorist) 2.11.2001 ல் பிரகடனம் செய்து தடை செய்துள்ளது)

1998ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளை தடை செய்தது. (இந்தத் தடையை புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 2002 செப்டெம்பர் 4ம் திகதி நீக்கிய போதும், 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி மீண்டும் புலிகள் மீதான தடையை நடைமுறைப்படுத்தியது)

2000ம் ஆண்டு பிரித்தானியா விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கூறி தடை செய்தது.

2001ம் ஆண்டு அவுஸ்திரேலியா விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தி (Resolution 1373) தடைசெய்தது.

2006ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து தடை செய்தன.

விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிரிகள் என்கின்ற வாதத்தை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளைத் தடை செய்த கனடா, விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தனது நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்குவதில்லை என்கின்ற கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.

ஆக உலகில் ஜனநாயக நாடுகள் என்று கூறப்படுகின்ற 32 நாடுகள் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தி தடை செய்துள்ளதுடன், தற்பொழுதும் அந்தத் தடையை நீடித்தும் வருகின்றன.

இன்று யுத்தம் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்ததாக அறிவித்து நான்கு ஆண்டு கடந்து விட்டுள்ள நிலையிலும், விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள 32 நாடுகளில் எந்த ஒரு நாடும் புலிகள் மீதான தடையை இதுவரை நீக்கவில்லை. அப்படி நீக்குவதான சமிஞ்ஞையையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

சர்வதேச மட்டத்தில் பாரிய அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ள தமிழர் தரப்பிற்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாக இது இருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், முக்கிய ஜனநாயக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட நிலையில் ஒரு இராஜதந்திர நகர்வை விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழர் தரப்பு செய்யவே முடியாது.

எனவே, விடுதலைப் புலிகள் மீதான தடையை எவ்வாறு நீங்குவது என்பது பற்றி சிந்தித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் ஈழத் தமிழினம் இன்று நின்றுகொண்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாதச் சாயத்தை எப்படிப் போக்குவது? விடுதலைப் புலிகள் மீதான தடைகளை எவ்வாறு நீக்குவது?

இதுபற்றித்தான் இந்தக் கட்டுரையில் தொடர்ந்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிப் பார்ப்பதற்கு, முதலில் விடுதலைப் புலிகள் மீது சுமார் 32 நாடுகள் எதற்காக தடையை விதித்தன என்று பார்ப்பது அவசியம்.

விடுதலைப் புலகள் மீது மேற்படி இந்த நாடுகள் ஏதற்காகத் தடைகளை விதித்தன என்று பார்க்கின்ற பொழுது, பொதுவாக சில முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே புலிகள் மீதான தடைகளை அந்நாடுகள் விதித்ததுடன், விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் அடையாளப்படுத்தியிருந்தன.

விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுத்துகின்றார்கள்.

சர்வதேச ஆயுதக் கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள்.

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநதிகளைக் கொலை செய்கின்றார்கள்.

இவைகள்தான் புலிகள் அமைப்பினைத் தடை செய்வதற்காக அனேகமான நாடுகள் முன்வைத்த முக்கியமான காரணங்கள்.

இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, விடுதலைப் புலிகள் மீது இந்த நாடுகள் தடைகளை விதிப்பதற்கும், புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்துவதற்கும் வேறு சில குற்றச்சாட்டுக்களும், காரணங்களும் கூறப்படுகின்றன.

உதாரணத்திற்கு, விடுதலைப் புலிகள் கடற்கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதான ஒரு குற்றச்சாட்டு சில நாடுகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

ஐரிஷ் மோனா (Irish Mona) என்ற கப்பலை 1995ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகள் கடத்தியதாகவும், பிறின்சஸ் வேவ் (Princess Wave )  என்ற கப்பலை 1996ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் புலிகள் கடத்தியதாகவும், அதனா (Athena) என்ற கப்பலை சர்வதேச நீர்ப்பரப்பில் வைத்து 1997ம் ஆண்டு மே மாதம் புலிகள், கடத்தியதாகவும், 1997ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எம்.வீ. கோடியலிடி (MV Cordiality ) என்ற கப்பலையும், 1998ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரின்சஸ் காஷ் (Princess Kash) என்ற கப்பலையும் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.வீ.பாரா-3 (MV Farah III ) என்ற கப்பலையும் சர்வதேச கடற்பரப்பில் வைத்து விடுதலைப் புலிகள் கடத்தியதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்துகின்றன.

அத்தோடு, 1999ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட மலேசியாவுக்குச் சொந்தமான எம்.வி. சிக் யங் (MV Sik Yang) என்ற கார்கோ கப்பல் இலங்கையின் வடக்கு–கிழக்கு கடல் பிரதேசத்தில் வைத்து வைத்து காணாமல் போயிருக்கின்றது. அந்தக் கப்பலில் பயணம் செய்ய 31 மாலுமிகளுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.

அந்தக் கப்பலை விடுதலைப் புலிகளே கடத்தி இருக்கவேண்டும் என்றும், அதனது பெயரை மாற்றி தமது நடவடிக்கைகளுக்கு அந்தக் கப்பலை புலிகள் பயன்படுத்தியதாகவும் சர்வதேச நாடுகள் சில குற்றம் சுமத்தியிருந்தன.

கனடா, ரொறன்ரோவை அடித்தளமாகக் கொண்டு செயற்படும் மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute), உலகளாவிய ரீதியில் திட்டமிட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் பற்றிய ஆய்வினைச் செய்து வரும் ஒரு சர்வதே அமைப்பு. விடுதலைப் புலிகளைப் புலிகள் அமைப்பான சர்வதேச ரீதியில் ஆயுதக் கடத்தல்களை மேற்கொண்டு வருவதாக இந்த மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute) வெளியிட்ட அறிக்கையானது, சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

விடுதலைப் புலிகள் ஆயுத மற்றும் வெடிபொருட்களைக் கடத்தி வருவதாகவும் (international arms trafficking), இந்தக் கடத்தல்களுக்கு புலிகள் சர்வதேசக் கடற்பரப்பைப் பயன்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.

சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு மியன்மாரிலும், தாய்லாந்தின் புகெட் பகுதியிலும் தளங்கள் இருப்பதாகவும், தன்சானியாவில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் கொள்வனது செய்திருந்த 32,400 மோட்டார்களை (81mm) கடத்தியதாகவும் இந்த நிறுவனம் குற்றம் சுமத்தியிருந்தது.

அதேபோன்று விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பலவந்தமாக நிதிச் சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், கடல் கொள்ளை, ஆட்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இரகசியமாகக் கொண்டு செல்லுதல், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள், ஆயுதக் கடத்தல்கள் போன்றன காரணமாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் சேகரிப்பதாகவும் பல சர்வதேச அமைப்புக்கள், பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

இவற்றிற்கு மேலாக, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் சில இஸ்லாமிய போராட்டக் குழுக்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பரவலாக வெளிவந்த செய்திகள்கூட, மேற்குலகம் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதற்கும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தன.

விடுதலைப் புலிகளுக்கும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக வெளிவந்த செய்திகளில் பல உண்மைக்குக் புறம்பானவைகளாக, புலிகள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு புனையப்பட்டிருந்தாலும் கூட, அதற்கான சாத்தியங்களை புறக்கணிப்பதற்கு மேற்குலகம் தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

70களின் நடுப்பகுதியில் பலஸ்தீன விடுதலை அமைப்பான Popular Front for the Liberation of Palestine  என்ற அமைப்பிடம் விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றது மாத்திரம் அல்ல, இந்த அமைப்புடன் இணைந்து தெற்கு லெபனானில் புலிகளும் நேரடியாகப் போராடியதற்கான ஆதாரங்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் உலக நாடுகள் சிலவற்றின் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியிருந்தார்கள்.

அதேபோன்று 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றில், உலகின் முதலாளித்துவதற்கு எதிராக போராடிவரும் சர்வதேச விடுதலைப் போராட்ட சக்திகள், சோசலிச நாடுகள் போன்றனவற்றுடன் கைகோர்த்து நாமும் போராடுவோம் என்று கூறப்பட்டிருந்ததையும், மேற்குலகம் தனது கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தது.

இதேபோன்று ஜனநாயகத்தின் ஒரு முக்கிய தளம் என்று கூறி அமெரிக்க-பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்ற Westminster Journal என்ற செய்தி ஊடகம், விடுதலைப் புலிகள் அமைப்பு 1990ம் ஆண்டில் மொறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (Moro Islamic Liberation Front -MILF) என்ற அமைப்பிற்கும், அபுசையாப் குழு (Abu Sayyaf Group -ASG) என்று அமைப்பிற்கும் பயிற்சி வழங்கியதை மேற்குலகின் புலனாய்வு அமைப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருந்தது.

இந்த இரண்டு அமைப்புக்களுமே சர்வதேச பயங்கவாத அமைப்பாக உலக நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அல்கைதாவுடன் தொடர்புபட்ட அமைப்புக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று இந்திய இஸ்லாமிய போராட்ட அமைப்பான அல் உம்மா (Al Ummah)  என்ற அமைப்பிற்கும் விடுதலைப் புலிகள் பயிற்சி வழங்கியதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியிருந்தது.

இதுபோன்று சர்வதேச மட்டத்தில் பல்வேறு நிறுவனங்களினாலும், ஊடகங்களினாலும், நாடுகளினாலும் விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிவைத்து பரவலாக முன்வைக்கப்பட்ட பலவிதமான குற்றச்சாட்டுக்கள் கூட, உலகில் உள்ள முக்கியமான 32 நாடுகள் புலிகள் அமைப்பினை ஒரு பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துவதற்கும், பிரகடனப்படுத்துவதற்கும், தடைசெய்வதற்கும், புலிகள் அமைப்பை அழிப்பதற்கு துணை போவதற்கும் காரணமாக இருந்தன.

இங்கு ஒரு விடயத்தை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்து பொய்யாகச் சோடிக்கப்பட்டவை, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் இருக்கவே முடியாது என்று எழுந்தமானமாக நாம் கூறிவிடவும் முடியாது.

புலிகள் அமைப்பினைத் தடை செய்த 32 நாடுகளும் வெறும் ஊடகச் செய்திகளையும், தனிப்பட்ட நிறுவனங்களின் அறிக்கைகளையும், சிறிலங்கா அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களையும் மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு புலிகள் அமைப்பினைத் தடைசெய்யும் முடிவுக்கு நிச்சயம் வந்திருக்கமாட்டாது.

தமது நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளினூடாகப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்தான் நிச்சயம் அந்த முடிவுக்கு வந்திருக்கும்.

எனவே உலகம் வகுத்துள்ள நியதிகளை மீறி விடுதலைப் புலிகள் அமைப்பு சில காரியங்களை நிகழ்த்தியிருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இங்கு நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், அவை அனைத்தும் நடந்து முடிந்த விடயங்கள். தீவிரமான ஒரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் நடந்து கொண்டிருந்த நிலையில் பல்வேறு நிர்ப்பந்தங்கள், தேவைகள் போன்றனவற்றின் அடிப்படையில் உலகம் விரும்பாத சில காரியங்களைச் செய்யவேண்டிய கட்டாயத்திற்குள் புலிகள் அமைப்பு செயற்பட்டிருக்கலாம்.

ஆனால் அவை அனைத்தும் நான்கு வருடங்களுக்கு முந்தய நிலைமை. தற்பொழுது நலைமை முற்றாகவே மாற்றம் அடைந்து விட்டுள்ளது. சர்வதேச நியதிகளை மீறும் காரியங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஈடுபடுவது கிட்டத்தட்ட முற்றாகவே நிறுத்தப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியைச் சந்தித்த நிலையில் புலிகள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச நியதிகளை மீறும் காரியங்களில் புலிகள் அமைப்பு ஈடுபடுவதான எந்தத் தகவல்களையும் காண முடியவில்லை.

அப்படி இருக்க, விடுதலைப் புலிகள் மீதான தமது தடையை நீக்குவதற்கு ஏன் எந்த ஒரு நாடும் இதுவரை முன்வரவில்லை? விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏன் இந்த 32 நாடுகளும் முன்வரைவில்லை?

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களை மௌனிக்க வைத்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டுள்ள நிலையில், அந்த நான்கு வருடங்களில் புலிகள் எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அப்படி ஈடுபடக்கூடிய நிலையிலும் புலிகள் அமைப்பு இல்லை என்பதும் உலக நாடுகளுக்கு நன்றாகவே தெரியும்.

கடந்த நான்கு வருடங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவிதத் தற்கொலைத் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தவில்லை. சர்வதேச ஆயுதக் கடத்தல்களிலோ ஆட்கடத்தல்களிலோ ஈடுபடவில்லை. அப்படியிருக்க எதற்காகப் புலிகள் அமைப்பை தொடர்ந்து பயங்கரவாத அமைப்பாக உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது?

இந்த இடத்தில்தான் நாம் ஆரம்பத்தில் பார்த்த அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் போன்ற சில விடயங்கள் காட்சிக்கு வருகின்றன.

ஒரு சில ஈழத் தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளுகின்ற சில சட்டவிரோத நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் தொடர்ந்து பயங்கரவாதிகளாக சர்வதேச நாடுகளால் பார்க்கப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன என்கின்ற யதார்த்தம் இங்குதான் நெருடலாகப் பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுதாபிகளாக அல்லது ஆரவாளர்களாக அல்லது பணியாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளுகின்ற சில சட்டவிரோத நடவடிக்கைகள், விடுதலைப் புலிகள் என்ற ஒரு போராட்ட அமைப்பிற்கு அவப் பெயரைப் பெற்றுத் தந்துவிடும் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கின்றதை இலகுவில் நாம் மறுத்துவிட முடியாது.

பிரித்தானியாவிலும் பிரான்சிலும் சில ஈழத் தமிழர்கள் மேற்கொண்ட கடன் அட்டை மோசடி, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மோசடியாகவே சில ஊடகங்கள் தற்பொழுதும் குற்றம் சாட்டி வருகின்றன.

பரிசில் சில ஈழத்தமிழர்கள் சில ஆபிரிக்க இனத்தவருடன் இணைந்து மேற்கொண்ட மெட்ரோ போலிப் புகையிரதச் சீட்டு விவகாரம் தற்பொழுதும் விடுதலைப் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஒரு குற்ற நடவடிக்கையாகவே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேபோன்று, கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு ஈழத் தமிழர் கைது செய்யப்பட்ட பொழுது, அவர் ஒரு விடுதலைப் புலி செயற்பாட்டாளராக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு திரிந்த பலர் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட அல்லது தொடர்ந்தும் மேற்கொண்டபடி இருக்கின்ற பல சட்டவிரோதச் செயல்கள் கூட, விடுதலைப் புலிகள் சர்வதே ரீதியில் தடை செய்யப்படவும் அந்தத் தடை நீடிக்கவும் காரணமாக அமைந்திருக்கின்றன.

எனவே தம்மை விடுதலைப் புலிப் பிரமுகர்களாக அல்லது உறுப்பினர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு புலம்பெயர் நாடுகளில் வலம் வந்து கொண்டிருக்கின்ற எவருமே சர்வதேச சட்டங்களை மீறுகின்ற எந்தக் காரியத்திலும் ஈடுபடக்கூடாது.

ஒரு விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் அளவிட முடியாத அந்தத் தியாகத்திற்கு மதிப்பளித்தாவது இவர்கள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். அல்லது இப்படிப்பட்ட பிரகிருதிகள் அமைப்பினாலும் மக்களினாலும் அடையாளம் காணப்பட்டு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாக வேண்டும்.

ஒரு இனத்தின் விடுதலையைக் கருத்தில் கொண்டாவது ஈழத் தமிழர்கள் இந்த நடவடிக்கையை எடுத்தேதான் ஆகவேண்டும்.

இந்த இடத்தில் மற்றொரு முக்கிய கேள்விக்கான பதிலையும் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

நீடித்துவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் சில புத்திஜீவிகள், ஈழத் தமிழரின் அடுத்த கட்டப் போராட்டம் விடுதலைப் புலிகளின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்பதற்கு அப்பால் வேறொரு தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்கின்ற ரீதியில் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டமானது அவசியம் கருதி ஒரு காலகட்டத்தில் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது.

தற்போதையை காலச் சூழலை கருத்தில் கொண்டு ஈழத்தமிழரின் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தை கொண்டு நகர்த்த நாம் ஏன் மற்றொரு அமைப்பை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கக் கூடாது என்பது அவர்களின் வாதமாக இருக்கின்றது.

கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்களும் சர்வதேச நாடுகளிடம் தற்பொழுது கூறி வருகின்றார். அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கும், ஜேர்மனிக்கும் விஜயம் மேற்கொண்ட பீரிஸ், விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தடுக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

அதேபோன்று விடுதலைப் புலிகளின் இலட்சனை மற்றும் அடையாளங்களை அழிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் கொண்டு வரவேண்டும் என இலங்கைக்கான ஜெனீவா தூதுவர் ஆரியசிங்க கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற தொனிப்பொருளில் ஜெனிவாவில் நடந்த கருத்தமர்விலேயே ஆரியசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதாவது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் என்ற பெயர் ஒரு மந்திரச் சொல் என்பது எமது சில புத்திஜீவிகளைவிட எமது பொது எதிரிக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது.

புலிச் சின்னமும், புலிக்கொடியும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு உற்சாகத்தையும், ஓர்மத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு அடையாளம் என்பது சிறிலங்காவிற்கு நன்றாகவே தெரியும்.

புலிக் கொடியின் மகிமையை சினிமா இயக்குனர் மணிவண்ணன் உணர்ந்திருந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் சில தலைவர்கள் புரிந்து வைத்திருக்கவில்லை என்பது கொஞ்சம் கவலையான விடயம்தான்.

இன்றைய நிலையில் புலம்பெயர் நாடுகளில் ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் தமிழர்களை அணிதிரள வைக்கும் வல்லமை புலிக்கொடிக்கு மாத்திரம்தான் இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தேசங்கள் ஈழத்தமிழருக்கு ஓர்மத்தை ஏற்படுத்தக்கூடி ஒரே வல்லமை புலிச்சின்னத்திற்கு மாத்திரம்தான் இருக்கின்றது.

இனி வரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் ஈழத் தமிழரைத் தலைமைதாங்கும் தகுதியும் விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம்தான் இருக்கின்றது.

ஏனெனில் அந்தப் புலிக்கொடிக்குப் பின்னால் மூன்று தசாப்தகால வரலாறு இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்கள் இருக்கின்றன. ஒரு இனத்தின் கனவு இருக்கின்றது.

எனவே விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது நீடிக்கும் தடைக்கான காரணத்தை அடையாளம் கண்டு அவற்றைக் கவனமாக நீக்கிவிட்டு, எமது இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேச நியதிகளை அனுசரித்துக் கொண்டு நகர்த்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்